SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அதிசயமாக உலக பொதுமறை நாயகன்

2018-01-13@ 10:09:46

ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம்

முக்கடலும் முத்தமிடும் குமரி முனைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சம் 133 அடி உயரத்தில் கம்பீரமாய் காட்சியளிக்கிறார் திருவள்ளுவர். இங்கே திருவள்ளுவருக்கு சிலை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்க காரணமாக நிறுவிய ஏக்நாத் ரானடே தனது எண்ணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தெரிவித்தார். கூடவே முழு திட்டம், வரைபடம், மதிப்பீடு எல்லாமே அவரே தயார் செய்து அளித்தார். 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளுவர் சிலை எழுப்பும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் முதல்வராக 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். 40 அடி உயர தாமரை பீடத்தின் மீது 15 அடி உயர சிலை என்று 70 அடி உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு 2 ஆண்டுகள் சிலை அமைப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் போனது. 1981ல் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் சிலை 75 அடி உயரத்திலும், பீடம் 45 அடி உயரத்திலும் என்று ரூ.4 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 13 ஆண்டுகள் கடந்த பிறகு 1989ம் ஆண்டு ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த முதல்வர் கருணாநிதி விரைவில் குமரியில் திருவள்ளுவர் சிலை எழுப்பப்படும் என்று அறிவித்தார். அதன்படி 1990-91ல் பட்ஜெட்டில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 120 அடி உயரத்தில் எழுப்ப திட்டமிடப்பட்ட சிலை உயரம் மொத்தம் 133 அடியாக உயர்த்தப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் இந்த திட்டம் தயாரானது.

சிலை 38 அடி ஆதார பீடம், 95 அடி உயரத்துடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சிலை தயார் செய்யப்பட்ட கணபதி ஸ்தபதியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சோளிங்கர் ஆகிய இடங்களில் இருந்து பாறைகளை வெட்டி சிலை செதுக்கும் பணிகள் நடைபெற்றன. பின்னர் 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணியை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடக்கி வைத்தார்.  ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் பணிகள் நடைபெற்றபோதிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு நடைபெறாததால் பணிகள் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

கருணாநிதி மீண்டும் 1996ம் ஆண்டு முதல்வரானதும் சிலை அமைக்கும் திட்டம் புத்துயிர் பெற்றது.  சிலை அமைக்க கற்களை எடுத்து செல்ல கொச்சியில் இருந்து ‘பாண்டூன்’ என்ற படகு ஒன்றும் வாங்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடல்நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை அமைய பெற்ற பாறைக்கு செதுக்கப்பட்ட பாறாங்கற்கள் எடுத்து செல்லும் பணிகள் தொடங்கின. திருவள்ளுவர் சிலைக்கு 1997ல் ஆதார பீடம் அமைக்கும் பணி நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரத்து 681 கற்கள் பயன்படுத்தி ஆதார பீடம் அமைக்கப்பட்டது.  முகம் 10 அடி உயரம், 40 அடி உயரத்தில் கழுத்து இடுப்பு பகுதிகள், 40 அடி உயரத்தில் இடுப்பு முதல் கால்பாதம் வரையும், கொண்டை பகுதி 5 அடியிலும் அமைக்கப்பட்டு படிப்படியாக திருவள்ளுவர் சிலை கம்பீரமாக 133 அடி உயரத்தை எட்டியது.

உப்புக்காற்று மிகுந்த கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் அலைகளுக்கு நடுவே சிலை அமையப்பெற்றாலும் உப்புக்காற்றை எதிர்கொள்ளும் வகையில் ‘சல்பர் ரெசிஸ்ட்டென்ஸ்’ என்ற சிறப்பு சிமென்ட் கலவையை கொண்டு கற்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும் ‘பாலி எபாக்ஸில்’ எனப்படும் ரசாயன பெயின்ட் பூசப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலைக்கு உப்புக்காற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் ரசாயன கலவை பூசும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கம். உப்புக்காற்றிலும் 17 ஆண்டுகளை கடந்து 18 ஆண்டாக இன்றும் கன்னியாகுமரியில் கம்பீரமாக காட்சி தருகிறார் திருவள்ளுவர். உலக பொதுமறை தந்த நாயகன் வள்ளுவருக்கு  கடலில் 133 அடி உயரத்தில் கல்லினால் சிலை அமைத்திருப்பது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை என பாராட்டுகின்றனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-07-2018

  15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-07-2018

  14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • TrumpLondonprotest

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லண்டன் வருகை: குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டம்

 • Michigancorpseflower

  18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

 • Chinachemicalplantfire

  சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்