SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செஞ்சுரியனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம் : தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா?

2018-01-13@ 01:13:19

செஞ்சுரியன்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய முன் வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா 93 ரன், 2வது இன்னிங்சில் அஷ்வின் 37 ரன் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர்கள்.

முதல் 6 பேட்ஸ்மேன்கள் யாரும் 28 ரன்னை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்கள் தேர்வும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. பவுன்சரை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், நடுவரிசையில் ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக அஜிங்க்யா ரகானே சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.வேகப் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர், பூம்ரா, ஷமி மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது மட்டுமே கேப் டவுன் டெஸ்டில் இந்திய அணிக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது. தென் ஆப்ரிக்க அணியை 2வது இன்னிங்சில் 130 ரன்னுக்கு ஆல் அவுட் செய்தும், பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்தியா வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

இந்த நிலையில், செஞ்சுரியனில் இன்று தொடங்கும் 2வது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்த போட்டியில் டிரா செய்தால் கூட, கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய முடியும். சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து நம்பர் 1 அணியாக தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே சமயம், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்ற தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிந்துகட்டுகின்றனர்.

அனுபவ வேகம் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருந்தாலும், தென் ஆப்ரிக்காவின் வியூகத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என தெரிகிறது. வெர்னான் பிலேண்டர், மார்னி மார்கெல், காகிசோ ரபாடா ஆகியோருடன், இளம் வீரர்கள் டுவன்னே ஓலிவியர் அல்லது லுங்கி என்ஜிடி என வேகக் கூட்டணி அமையலாம். ஆல் ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளது. செஞ்சுரியன் மைதான ஆடுகளமும் வேகப் பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய  பேட்ஸ்மேன்கள் கடுமையான சவாலை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், செதேஷ்வர் புஜாரா, ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சாஹா, ஆர்.அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பூம்ரா, இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, பார்திவ் பட்டேல், உமேஷ் யாதவ்.

தென் ஆப்ரிக்கா: பேப் டு பிளெஸ்ஸி (கேப்டன்), ஹாஷிம் அம்லா, தெம்பா பவுமா, தியூனிஸ் டி புருயின், குவின்டான் டி காக், ஏபி டி வில்லியர்ஸ், டீன் எல்கர், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்க்ராம், மார்னி மார்கெல், கிறிஸ் மோரிஸ், பெலுக்வாயோ, வெர்னான் பிலேண்டர், காகிசோ ரபாடா, டுவன்னே ஓலிவியர், லுங்கி என்ஜிடி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china_cloning11

  செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

 • snow_river_falls11

  மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

 • christmas_planeealm1

  உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

 • sutrula_12Icehotel1

  சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

 • mumbai_theevibathu11

  மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்