SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பெயர் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்த வீரர்களால் தள்ளுமுள்ளு

2018-01-13@ 00:52:28

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தங்கள் பெயரை பதிவு செய்ய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில் ஒருவர் காயமடைந்தார். மதுரை மாவட்டத்தின் ‘ஜல்லிக்கட்டு கிராமங்கள்’ என்றால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகியவை அடங்கும். நாளை தைப்பொங்கலை முன்னிட்டு (14ம் தேதி) அவனியாபுரத்திலும், மறுநாள் மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலும், 16ல் காணும் பொங்கல் நாளில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதையொட்டி, வீரர்கள் தேர்வு மற்றும் ஜல்லிக்கட்டு வசதிகள் உள்ளிட்டவை தீவிரமாக நடந்து வருகின்றன.

அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இங்குள்ள சமுதாயக்கூடத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை 3 பிரிவுகளாக பிரித்து பதிவு நடத்தப்பட்டது. மாடுபிடி வீரர்களிடம் விண்ணப்ப படிவம் வழங்கி விபரங்கள் பெறப்பட்டு, டாக்டர்களிடம் உடல் தகுதி சான்று பெற்ற பின்னர், தகுதியான 1,268 வீரர்களுக்கு முன்பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முன்னதாக காலை 9 மணியளவில் பதிவு நடந்து கொண்டிருந்தபோது, போலீசாரின் தடுப்புகளையும் தாண்டி, திடீரென இளைஞர்கள் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் பதிவு தொடர்ந்து நடந்தது. இன்று காளைகள் முன்பதிவு நடக்கிறது. பாலமேடு:  பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஏற்கனவே வீரர்கள் முன்பதிவு முடிந்துவிட்டதால், நேற்று காளைகளுக்கான முன்பதிவு அங்குள்ள கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது. காளைகளுக்கான சோதனைகளுக்கு பிறகு 1,050 காளைகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.  வாடிவாசல்கள் தயார்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு பணிகள் முடிந்து தயாராக இருக்கிறது. பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், இரண்டு அடுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அவனியாபுரம் வாடிவாசலுடன், அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி வாடிவாசல் திடல், பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் உள்ள வாடிவாசல் ஆகியவை வண்ணம் பூசப்பட்டு தயாராக உள்ளன. மதுரையில் கொண்டாட்டம்: தென்மாவட்டங்களில் கடந்த காலங்களில் பலதரப்பட்ட தடைகளால், களையிழந்து கிடந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், சென்ற ஆண்டும் முறையான தேதிகளில் நடத்தப்படவில்லை. ஆனால் தடைகளைத் தகர்த்தெறிந்து, நீதிமன்ற வழிகாட்டுதலோடு இம்முறை மிகச்சரியான நாட்களில் இந்த ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கிறது. இது, மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாவட்டங்களில் கோலாகலம்
மதுரையைபோன்று, தென்மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் ஜல்லிக்கட்டு விழாக்கள் கொண்டாட்டம் கண்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் கொசவபட்டி, மறவபட்டி, புகையிலைப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி ஊர்களில் ஜல்லிக்கட்டு நடக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் நெற்குப்பை, தேவபட்டு, சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டிகள் புகழ்மிக்கது. தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி உள்பட தென்மாவட்டங்களின் பல ஊர்களும் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் திளைத்திருக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்