SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா மீது 4 நீதிபதிகள் குற்றச்சாட்டு: நிர்வாகம் சீர்குலைவு; ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும் பரபரப்பு பேட்டி

2018-01-13@ 00:08:17

* நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக பத்திரிகையாளர்களிடம் சரமாரி புகார்

புதுடெல்லி: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து  4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறினர். வழக்குகள் ஒதுக்கீடு, நீதிமன்ற நிர்வாகம் போன்ற விஷயங்களில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். நீதிபதிகளின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நீதித்துறையின் மிக உயர்ந்த அமைப்பாக உச்ச நீதிமன்றம் உள்ளது. எந்த வழக்கிலும் இது அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகளை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தற்போது தலைமை நீதிபதி உட்பட 25 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். இவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் ‘சீனியாரிட்டி’ வழங்கப்படுகிறது. இப்போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் மூத்த நீதிபதியாக சல்லமேஸ்வர் இருக்கிறார். வழக்கமாக, உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் யாரும் வெளிப்படையான விமர்சனங்களை செய்வதில்லை. நிர்வாக குறைபாடுகள், கருத்து வேற்றுமைகள் இருந்தால், நீதிபதிகளுக்கு இடையிலேயே அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு விடும். ஆனால், நேற்று இதை எல்லாம் மீறி அசாதாரணமான சம்பவம் நடந்தது.

மூத்த நீதிபதி சல்லமேஸ்வர் மற்றும் அவருக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதிகளாக உள்ள ரஞ்சன் கோகய், எம்.பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று காலை திடீரென கூட்டாக  பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நீதிபதி சல்லமேஸ்வரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம், நிர்வாக குழப்பம் என பல்வேறு விஷயங்களில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கினர். பேட்டியில் நீதிபதிகள் கூறியதாவது: இது, ஒரு அசாதாரணமான சம்பவம். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை நாங்கள் மகிழ்ச்சியாக செய்யவில்லை. இருப்பினும், எங்கள் கருத்தை இப்படி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நிர்வாகம் சமீப காலமாக முறையாக செயல்படவில்லை.  

கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு நாங்கள் ஒன்றாக 7 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை எழுதி, பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி கோரினோம். ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இன்று காலை கூட தலைமை நீதிபதியை சந்தித்து, நீதிமன்ற நிர்வாகத்தை பாதிக்கும் பிரச்னைகளை அவரிடம் எடுத்து கூறினோம். அதற்கு தீர்வு காணும்படி வலியுறுத்தினோம். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்களின் இந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. எனவே, சமீப காலமாக நடந்த சம்பவங்களால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதை நாங்கள் நான்கு பேரும் உளப்பூர்வமாக உணர்ந்தோம்.

இந்த நாட்டுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் எங்களின் கடமையை ஆற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. எனவே, பத்திரிகையாளர்கள் சந்திப்பை கூட்ட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. இதுபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நாங்கள் நடத்துவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. எந்த நாட்டின் வரலாற்றிலும், குறிப்பாக நமது தேசத்தில் இது மிகவும் அசாதாரணமான நிகழ்வாகவே இருக்கும். இருப்பினும், உச்ச நீதிமன்றம் பாதுகாக்கப்படவில்லை என்றால், நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது; அழித்து விடும். நாங்கள் எங்களுடைய தகுதியை மீறவில்லை. நாங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைதான் செய்து கொண்டிருக்கிறோம்.

வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுகிறார். நீதிமன்றம் முறையாகவும், பாரபட்சமின்றி நீதி வழங்கப்படுவதற்காகவும் வழக்குகள் அதன் தன்மைக்கு ஏற்ப நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், தனது விருப்பத்துக்கு ஏற்றப்படி தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்கிறார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் அனைவரும் சமமானவர்கள். அவர்களில் தலைமை நீதிபதி முதல் எண்ணில் வருகிறாரே தவிர, மற்ற நீதிபதிகளை விட உயர்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லை.

சமீபத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால், யாருடனும் ஆலோசிக்காமல் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றினார். அதேபோல், சொராபுதீன் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்மச்சாவு தொடர்பாக தொடரப்பட்ட முக்கிய வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய 4 அமர்வுகளுக்கு ஒதுக்கப்படாமல், நீதிமன்றம்-10க்கு ஒதுக்கப்பட்டது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர். நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு, தலைமை நீதிபதியின் மீது உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த மற்ற மூத்த நீதிபதிகள் இவ்வாறு வெளிப்படையாக பத்திரிகையாளர்களை கூட்டி குற்றச்சாட்டுகளை கூறியது இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இதுவே முதல்முறை.  இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபக் மிஸ்ரா அமைதி
மூத்த நீதிபதிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய அரசு  தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது அறைக்கு அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர், நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதற்காக பத்திரிகையாளர் கூட்டத்தை அவர் கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் நடந்து வந்து தனது விசாரணை அறைக்கு சென்ற மிஸ்ரா, அமைதியாக வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

ஜனநாயகத்துக்கு ஆபத்து: காங்.
காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து 4 நீதிபதிகள் கவலையுடன் தெரிவித்த கருத்து குறித்து நாங்களும் கவலை அடைகிறோம். ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தலையீடு மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘நீதித்துறையும், பத்திரிகையும் ஜனநாயகத்தின் தூண்களாக உள்ளன. ஆனால், நீதித்துறையில் மத்திய அரசு அளவுக்கு அதிகமாக தலையிடுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. 4 மூத்த நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகளால் பொதுமக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்’’ என்றார்.

மேலும் 2 நீதிபதிகள் அதிருப்தி?
தலைமை நீதிபதி மீது  குற்றம்சாட்டி பேட்டி அளித்த நான்கு நீதிபதிகளையும், உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளான எஸ்.ஏ.பாப்டே, நாகேஷ்வரராவ் ஆகியோர் செல்லமேஸ்வரின் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினர். இதன் மூலம், இவர்களும் தலைமை நீதிபதி மீது அதிருப்தியில் இருப்பதாக கருதப்படுகிறது.

முழுமையான விசாரணை  தேவை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
‘‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த பேட்டி பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் முறையாக செயல்படவில்லை என 4 நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் குறித்தும், எந்த வகையில் நீதித்துறையின் சுதந்திரமும், புனிதத்தன்மையும் பாதிக்கப்பட்டது என்பது குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில், நமது நாடு அரசியல் சாசனத்தின்படி இயங்கி வருகிறது. இங்குல மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க, நிர்வாக தலைமை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் சுதந்திரமாக இயங்க வேண்டும். இதில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதை சரி செய்ய வேண்டும். எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்னையில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் புனிதத்தன்மையில் யாருடைய குறுக்கீடு உள்ளது? அல்லது எப்படி பாதிக்கப்படுகிறது? என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் அவசர ஆலோசனை
நீதிபதிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரதமர் மோடி, மத்திய  சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், மத்திய அரசு விலகி இருக்க வேண்டும்,  நீதிபதிகளே அவர்கள் பிரச்னை களை தீர்த்துக் கொள்வார்கள் என்றும் முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அட்டர்னி ஜெனரலுடன்மிஸ்ரா ஆலோசனை
நீதிபதிகள் சல்லமேஸ்வரும், மேலும் 3 நீதிபதிகளும் டெல்லியில் பேட்டி அளித்த சிறிது நேரத்தில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபாலை அழைத்து தலைமை நீதிபதி அவசர ஆலோசனை நடத்தினார். அதுபற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

‘மக்கள் முடிவு செய்யட்டும்’
பேட்டியின்போது, ‘தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்கு நீதிபதிகள் யாரும் நேரடியாக பதில் அளிக்கவில்லை. ‘‘எங்கள் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்காதீர்கள். அதை நாட்டு மக்கள் முடிவு செய்யட்டும்’’ என்று நீதிபதி சல்லமேஸ்வர் கூறினார்.

அடுத்த தலைமைநீதிபதி கோகய்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் இந்தாண்டு அக்டோபரில் முடிகிறது. அவருக்கு அடுத்தபடியாக இந்த பதவிக்கு மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகய் நியமிக்கப்பட உள்ளார். தீபக் மிஸ்ரா மீது பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று குற்றம்சாட்டிய நீதிபதிகளில் ரஞ்சன் கோகயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது: ராகுல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, மூத்த நீதிபதிகள் முன் வைத்திருக்கும் கருத்துகள் மிக முக்கியமானவை. ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற நீதிபதிகளின் கருத்து மிகவும் முக்கியமானது. இதை மிகவும் கவனமாக பார்க்க வேண்டும். நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.

மேலும் அவர்கள் அமித்ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மரணம் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற மேற்பார்வையில் உயர்மட்ட அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2018

    24-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்