SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைச்சர் கேஜே ஜார்ஜ் போலி ஆவணம் தயாரிப்பு

2017-12-08@ 00:55:53

பெங்களூரு : அமைச்சர் கேஜே ஜார்ஜ், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு போலியாக ஆவணங்களும் தயாரித்துள்ளார் என பாஜக செய்தி தொடர்பாளர் என் ஆர் ரமேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம் என்ஆர் ரமேஷ் கூறியதாவது: பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதன்பிறகு அந்நிலத்திற்கு போலியாக ஆவணங்கள் தயாரித்து அதற்கு பட்டாவும் பெறப்பட்டுள்ளது. பெங்களூரு கிழக்கு தாலுகாவிலுள்ள எம்பஸி கோல்ப் லிங்க் டெக் பார்க்கின் மொத்த பரப்பு 65 ஏக்கர் என்று இணையதளத்தில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 ஏக்கரில் 52 ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே பட்டா இருக்கிறது. மீதியுள்ள 13 ஏக்கர் நிலத்தை எவ்வித ஆவணமும் இன்றி அமைச்சர் கேஜே ஜார்ஜ் சுற்றி வளைத்துள்ளார். மாநகராட்சி அதிகாரிகள், பிடிஏ கமிஷனர் உள்ளிட்டோர் இதற்கு உடந்தையாகும். மழைநீர் கால்வாய்களும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தியதிலும் அமைச்சர் ஜார்ஜ் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஓட்டல் லீலா பேலஸ் சார்பில் மாநகராட்சிக்கு ரூ.9 கோடி வரை வரி செலுத்தப்படுகிறது. அதுபோன்று பல சொகுசு ஓட்டல்கள் அடங்கிய எம்பஸி கோல்ப் டெக் பார்க் மூலம் ரூ.1.23 கோடி மட்டுமே இதுவரை வரி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருடந்தோறும் ரூ.9 கோடி வரை அமைச்சர் ஜார்ஜ் வரிஏய்ப்பு செய்துள்ளார்.

எம்பஸி கோல்ப் லிங்க் டெக் பார்க் அமைந்துள்ள இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கால்நடை மேய்ச்சல் நிலமாகும். அந்நிலத்தில் வீடுகள் கட்டுவதற்கு என்று பிடிஏ சார்பில் “ஓ.சி.” சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அதில் எந்த குடியிருப்பும் கிடையாது. பெங்களூருவிலுள்ள 76 சொகுசு ஓட்டல்களில் மிகவும் பிரபலமான   ஓட்டல்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இங்கு 45 லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் உள்ளன. அதை மறைத்துவிட்டு  4லட்சம் சதுர அடி என்று மாநகராட்சிக்கு வரி செலுத்தப்பட்டு வருகிறது.அரசு நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா மாற்றிக்கொண்டது, தவறான தகவல் கொடுத்து குறைந்த அளவில் மாநகராட்சிக்கு வரி செலுத்தியது, 13 ஏக்கர் அரசு நிலத்தை வளைத்துக்கொண்டது ஆகிய தவறுகளை அமைச்சர் கேஜே ஜார்ஜ் செய்துள்ளார். அமைச்சர் ஜார்ஜ் மீது முதல்வர் சித்தராமையா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அமைச்சர் பதவியை விட்டு உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று அமைச்சர் ஜார்ஜுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இல்லை எனில், லோக் ஆயுக்தா, ஏசிபி போலீசார் விசாரணையில் உண்மை வெளியே வந்த பிறகு தானாகவே எம்எல்ஏ பதவியை இழந்து விடுவார்.

மிகப்பெரிய அளவில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றியிருப்பது, ரூ.850 கோடி மதிப்பிலான 13 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது மற்றும் மாநகராட்சிக்கு வருடந்தோறும் ரூ.9 கோடி வரை மோசடி செய்திருப்பது ஆகியவை மிகப்பெரிய மோசடியாகும். எனவே, மாநில அரசின் சார்பில் விசாரணை நடத்துவதைவிட சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை விரைவில் வெளியாகும். சாந்திநகர் தொகுதி எம்எல்ஏ என்.ஏ. ஹாரீஷ் மற்றும் அவரின் குடும்பத்தை சேர்ந்த 11 பேர், அமைச்சர் ஜார்ஜுக்கு சொந்தமான எம்பஸி கோல்ப் லிங்க் டெக் பார்க் நிறுவனத்திற்கு 4.1 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்துள்ளனர். அந்நிலத்தை எப்படி வாங்கினார்கள்? அதை யார்-யார் அவருக்கு விற்பனை செய்தனர் என்பதும் தெரியவில்லை. ஆவணங்கள் இல்லாத நிலத்திற்கு இது போன்று போலியாக ஆவணங்கள் தயாரித்து அதன் பிறகு பட்டா பெறப்பட்டுள்ளன. அதிகாரிகள் துணையுடன் இந்த மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. பிடிஏ கமிஷனர் மற்றும் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகளில் யார் யார் இந்த பட்டா மாற்றம் நடைபெற்றபோது பணியாற்றினார்களோ அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்