SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை டிரம்ப் அறிவித்தது பற்றி விவாதிக்க ஐநாவில் இன்று அவசரக் கூட்டம்

2017-12-08@ 00:21:33

ஐநா. : ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது பற்றி விவாதிக்க  ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார். ஜெருசலம் நகரில் அமெரிக்காவின் புதிய தூதரகம் 2 ஆண்டுகளில் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து நாட்டு மக்களுக்கு டி.வி.யில் உரையாற்றிய டிரம்ப், ‘இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுத்தவும், அமெரிக்காவின் நலனுக்காவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தை பார்க்கவே அமெரிக்கா விரும்புகிறது. ஜெருசலம் நகரில் இஸ்ரேலின் எல்லையை வரையறுப்பதிலும், எல்லை பிரச்னைக்கு தீர்வு காணவும் அமெரிக்கா எந்த நிலைப்பாடும் எடுக்காது.

இரு தரப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில், அமைதி ஒப்பந்தம் ஏற்பட உதவி செய்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்த அறிவிப்பில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இறுதியில் இந்த விஷயத்தில் நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் ஏற்படும். இந்த முடிவை அமெரிக்க நாடாளுமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த போதிலும், இதற்கு முன்பு இருந்த அமெரிக்க அதிபர்களால் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஜெருசலம் மூன்று சிறந்த மதங்களின் மைய பகுதி மட்டுமல்ல, அது தற்போது வெற்றிகரமான ஜனநாயக நாடு ஒன்றின் மையமாக உள்ளது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்காமல் இருந்தது, அமைதி பேச்சுவார்த்தையில் கடந்த 20 ஆண்டுகளில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண இரு நாடுகளும் சம்மதித்தால், உதவி செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது’’ என்றார்.   

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் வாக்குறுதியை அமெரிக்க அதிபர்  வேட்பாளர்கள் பலர் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் அளித்துள்ளனர். அந்த வாக்குறுதியை அதிபர் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்’’ என்றனர். டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவும், எதிர்ப்பும்  தெரிவித்துள்ளனர். 8 நாடுகள் வலியுறுத்தல்: இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என எகிப்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, பொலிவியா, சென்கல், ஸ்வீடன் மற்றும் உருகுவே ஆகிய 8 நாடுகள் கூறின. இதையடுத்து, அவசர கூட்டத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூட்டுகிறது. இதில், ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்ட்னியோ கட்டர்ஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் ஏற்கனவே விடுத்துள்ள அறிக்கையில், ‘ஜெருசலம் பிரச்னைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், பொதுச்சபையும் நேரடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இதில் இரண்டு விதமான தீர்வுக்கு வழியில்லை. இதில் ஒருதலைபட்சமான முடிவு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையை ஸ்தம்பிக்க செய்யும் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்’ என கூறியுள்ளார்.

ஜெருசலம் வரலாறு

மத்திய கிழக்கு பகுதியில் ஜூடேன் மலை  பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஜெருசலம். பழங்காலத்தில் இது  ‘உருசாலிமா’ என அழைக்கப்பட்டது. 8ம் நூற்றாண்டில் இது ஜூடா அரசவையின் மத  மற்றும் நிர்வாக மையமாக உருவெடுத்தது. யூதர்களின் தலைநகரமாகவும், புனித  நகரமாகவும் இருந்து வந்தது. பின்னர், இது  முகாயலாயர்களின்  படையெடுப்புகளுக்கு உள்ளாகி, ஜோர்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த  காலக் கட்டத்தில் ஜெருசலம் இருமுறை முற்றிலும் அழிக்கப்பட்டது. 54 முறை படையெடுப்புக்கு ஆளானது. பின்னர், இஸ்ரேல் வசம் சென்றது. 1538ம் ஆண்டு சுலைமான் என்ற மன்னர் ஆட்சி காலத்தில் ஜெருசலம் நகரை சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன. அது பின்னர் நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டு முதல் அது அர்மேனியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களின் தலைமையிடமாக விளங்கியது. ‘ஓல்டு சிட்டி’ என அழைக்கப்படும் இப்பகுதி கடந்த 1981ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமானது. இந்த ஓல்டு சிட்டியின் எல்லையை தாண்டிதான் நவீன ஜெருசலம் நகர் உருவானது.

ஜெருசலம்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல்  கூறி வந்தது.  ஆனால், கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல்  ஆக்கிரமித்துள்ளதாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டுகிறது. இதனால் ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரமாக  சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால்,  பல  நாடுகளின் தூதரகங்கள் டெல் அவிவ் நகரில் உள்ளன. இந்த நகரம்தான்  இஸ்ரேலில்  பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையமாக விளங்கி வருகிறது. அரசின்  முக்கிய  அலுவலகங்கள் மட்டும் ஜெருசலமில் இயங்கி வருகின்றன. கிழக்கு  ஜெருசலம்  பிரச்னை இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தீராத பிரச்னையாக உள்ளது. இரு  நாடுகள்  இடையே அமைதி ஏற்படாமல் காசா எல்லை, மேற்குகரை பகுதியில் தீவிரவாத தாக்குதல்  தொடர்வதற்கும்  ஜெருசலம் நகரம் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது.

அரபு தலைவர்கள் எதிர்ப்பு

ஜெருசலமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிடும் முன், இது குறித்து மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் போன் மூலம்  டிரம்ப் ஆலோசித்தார்.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், பாலஸ்தீன அதிபர் முகமூத் அப்பாஸ், ஜோர்டன் மன்னர் அப்துல்லா, சவுதி மன்னர் சல்மான், எகிப்து   அதிபர் அப்தல் பதா அல்-சிசி ஆகியோருடனும் டிரம்ப் தனித்தனியாக பேசினார்.
 
 இது அபாயகரமான நடவடிக்கை என்றும், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் என சவுதி மன்னர் சல்மான் எச்சரிக்கை  விடுத்தார்.  மத்திய கிழக்கில் அமைதிக்கான வாய்ப்பை இந்த முடிவு  ஸ்தம்பிக்கச் செய்யும்  என எகிப்து அதிபர் சிசி கூறினார். இந்த முடிவு  பதற்றத்தை  அதிகரிக்கும் என சீனாவும் கவலை தெரிவித்தது. ஆனால், இந்த எதிர்ப்புகளையும் மீறி டிரம்ப் தனது அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலமை அங்கீகரிக்கும் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ‘‘பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது. உறுதியானது. எங்களின் சொந்த கருத்து மற்றும் நலன் அடிப்படையில் இந்த நிலைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இதை மூன்றாம் நாடுகள் தீர்மானிக்க முடியாது’ என கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அலிஹைஜா அளித்த பேட்டியில், ‘‘ஜெருசலேம் விஷயத்தில் இஸ்ரேலும்-பாலஸ்தீனமும் இணைந்து தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது. விரைவில் பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி வர உள்ளார்’’ என்றார்.

பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின்-பாலஸ்தீன எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் கூடுதல் படைகளை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. உளவுத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் தோல்வி

வாஷிங்டன், டிச. 8: அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எம்பி அல் கிரீன், அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடந்தது. இதில், 364 பேர் தீர்மானத்திற்கு எதிராகவும், 58 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்திற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்