SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லி டெஸ்ட் டிராவில் முடிந்தது தொடர்ச்சியாக 9வது தொடரை வென்று இந்தியா சாதனை

2017-12-07@ 01:17:38

புதுடெல்லி : இலங்கை அணியுடன் டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, தொடர்ச்சியாக 9வது டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், அடுத்து நாக்பூரில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. விஜய் 155, கேப்டன் கோஹ்லி 243, ரோகித் 65 ரன் விளாசினர். இலங்கை முதல் இன்னிங்சில் 373 ரன் குவித்து ஆல் அவுட்டானது. மேத்யூஸ் 111, கேப்டன் சண்டிமால் 164 ரன் விளாசினர்.

163 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தவான் 67, புஜாரா 49, கோஹ்லி 50, ரோகித் 50* ரன் விளாசினர். இதையடுத்து, 410 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்திருந்தது. தனஞ்ஜெயா டிசில்வா 13, மேத்யூஸ் (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். 20 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த மேத்யூஸ், ஜடேஜா சுழலில் ரகானே வசம் பிடிபட்டார். இலங்கை 35 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாற, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். அடுத்து தனஞ்ஜெயாவுடன் இணைந்த கேப்டன் சண்டிமால் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இருவரும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்து இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தது. சண்டிமால் 36 ரன் எடுத்து (90 பந்து, 2 பவுண்டரி) அஷ்வின் சுழலில் கிளீன் போல்டாக, இந்தியா வெற்றி நம்பிக்கையுடன் தாக்குதலை தீவிரப்படுத்தியது. எனினும், தனஞ்ஜெயா டி சில்வா - அறிமுக வீரர் ரோஷன் டி சில்வா இணை 6வது விக்கெட்டுக்கு நங்கூரம் பாய்ச்சி நின்று தீரமாகப் போராடியது.

இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் சோர்ந்து போயினர். அபாரமாக விளையாடி சதம் அடித்த தனஞ்ஜெயா 119 ரன் (219 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி காயம் காரணமாக ஓய்வு பெற்றார். அடுத்து ரோஷன் - டிக்வெல்லா ஜோடி உறுதியுடன் விளையாடி இந்தியாவின் வெற்றி முனைப்புக்கு அணை போட்டது. ரோஷன் அரை சதம் அடித்து அசத்தினார். இலங்கை அணி 103 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. ரோஷன் 74 ரன் (154 பந்து, 11 பவுண்டரி), டிக்வெல்லா 44 ரன்னுடன் (72 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 3, அஷ்வின், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நேற்றைய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களால் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், தொடர்ச்சியாக 9வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்தது. கேப்டன் விராத் கோஹ்லி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் வரும் 10ம் தேதி நடக்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் சமநிலை...

1. ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2005 அக்டோபரில் தொடங்கி 2008 ஜூன் வரை தொடர்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 2015 ஆகஸ்டில் இருந்து தற்போது வரை தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்று ஆஸி. சாதனையை சமன் செய்துள்ளது. அடுத்து தென் ஆப்ரிக்காவுடன் நடக்க உள்ள தொடரையும் கைப்பற்றினால் உலக சாதனை படைக்கலாம்.

2. இலங்கை வீரர் தனஞ்ஜெயா நேற்று 119* ரன் விளாசியது, இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் 4வது இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ரன்னாக அமைந்தது. முன்னதாக, வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1987-88ல் இதே கோட்லா மைதானத்தில் 109* ரன் விளாசி இருந்தார்.

3. இந்திய மண்ணில் சேஸ் செய்தபோது வெளிநாட்டு வீரர் சதம் அடிப்பது இது 4வது முறையாகும். கடைசியாக பாகிஸ்தானின் யூனிஸ் கான் 2007-08ல் ஈடன் கார்டனில் சேஸ் செய்தபோது சதம் அடித்திருந்தார்.

4. கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் 4வது இன்னிங்சில் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமை தனஞ்ஜெயாவுக்கு கிடைத்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X