SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு குஜராத் முதல்கட்ட பிரசாரம் இன்று ஓய்வு

2017-12-07@ 00:09:16

காந்திநகர்: குஜராத்தில் 9ம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் பிரதமர் மோடியின் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. 22 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் பாஜ.விடம் இருந்து இம்முறை ஆட்சியை கைப்பற்றி விடும் வேகத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கிடையே, குஜராத்தில் தண்டுகா என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தபோது, 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடியும் வரை இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என கபில்சிபல் வாதாடுகிறார். வக்பு வாரியம் தேர்தலில் போட்டியிடுகிறதா? தேர்தலுக்காக விசாரணையை தாமதிக்க வேண்டும் என்பதுதான் வக்பு வாரியத்தின் எண்ணமா? அல்லது கபில் சிபலின் சொந்த எண்ணமா? அனைத்து விஷயங்களையும் அரசியல் ஆதாயத்துடன் பார்ப்பதால்தான் நாடு அதிகம் கஷ்டப்படுகிறது. இதனால்தான் மக்களவை தேர்தல்களையும், சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என நான் கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் மீது ராகுல் நேற்று தனது 8வது கேள்விக்கணையை வீசினார். தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், ‘ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 39 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புஜ்ஜில் உள்ள அரசு மருத்துவமனையை நண்பருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளீர்கள். இதுதான் உங்களின் சுகாதார மேலாண்மையா?’ என கேள்வி கேட்டுள்ளார். இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதேபோல், மகிளா காங்கிரஸ் தேசிய தலைவர் சுஷ்மிதா தேவ், வதோதராவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கினுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியை மோடி விதித்துள்ளார். ஏழை பெண்கள், சிறுமிகளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டியை ஒழித்து, பள்ளி செல்லும் மாணவிகளுக்கு நாப்கினை இலவசமாக வழங்குவோம்’’ என்று அறிவித்தார்.

இந்நிலையில், குஜராத்தில் 9ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால், இந்த மாவட்டங்களில் பாஜ, காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்