SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணிமுக்தாற்றில் தொடரும் மணல் கொள்ளை : விருத்தாசலம் பகுதியில் விவசாயம் பாதிப்பு

2017-11-15@ 11:00:12

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் மணிமுக்தாற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புகழ்பெற்ற மணிமுக்தாறு ஓடுகிறது. இதில் கோமுகி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வருவதால் விழுப்புரம், கடலூர் ஆகிய  இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த சில வருடங்களாக மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. வறட்சியான காலகட்டத்திலும் விவசாயிகளுக்கு மணிமுக்தாறு மிகவும் ஆறுதலாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.

ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் உள்ள போர்வெல்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயம் செழித்துள்ளது. விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர், கச்சிபெருமாநத்தம், கோமங்கலம், பரவளூர், தொரவளூர், எருமனூர், தொட்டிக்குப்பம், ரெட்டிக்குப்பம் உள்ளிட்ட பல கிராம மக்கள் மணவாளநல்லூர் மணிமுக்தாற்றின் கரையோரம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மணவாளநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் பின்புறமுள்ள மணிமுக்தாற்றில் அரசு அனுமதியின்றி பல லட்சம் டன் மணல் தினமும் இரவுநேரங்களில் கொள்ளையடித்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்  அப்பகுதி மக்கள் கூறுகையில், பரவளூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அரசு மணல் குவாரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மணல் குவாரி தொடங்கும் பணிகள் நிறுத்தப்பட்டது. அன்று முதல் அங்கு மணல் எடுப்பதற்கு பதிலாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன் மணவாளநல்லூர் பகுதியில் திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் மணலை அள்ளி செல்கின்றனர்.

பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளப்பட்டு 20க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை அள்ளி செல்கின்றனர். இதற்காக பகல் நேரங்களில் மணலை குவியல்குவியலாக குவித்து வைத்துவிட்டு, இரவு நேரங்களில் லாரிகளோடு வந்து அள்ளிசெல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் வாலிபர்கள் பலர்  மதுபோதையில் சுற்றித் திரிகின்றனர். பொதுமக்கள் யாரேனும் தட்டிக்கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர். அதனால் யாரும் தடுக்க முன்வருவதில்லை. மேலும், இதுகுறித்து விருத்தாசலம் கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தால் அவரும் வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் மணல் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போகின்றனர்.

இதற்கு காரணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் புறப்படும் நேரம், அவர் எங்கு செல்கிறார், எப்போது திரும்ப வருவார் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே மணல் கொள்ளையர்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். இதனால் கொள்ளையர்கள் அனைவரும் உஷாராகி தப்பி விடுகின்றனர். மாறாக மாட்டுவண்டிகளில் கொண்டு செல்லப்படும் மணலை மட்டும் பிடித்து வழக்கு போடுகிறார்கள். மணல் கொள்ளை தினமும் அதிகளவில் நடந்து வருவதால் நிலத்தடி  நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு,  மணவாளநல்லூர் பகுதியில் இயங்கி வரும் திருட்டு மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்