SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிற்குள் போக்குவரத்து ஊழியர்கள் சபாரி உடையில் பாதுகாப்பில் ஈடுபடுவது ஏன்? : பகீர் தகவல் வெளியானது

2017-11-15@ 06:24:37

சென்னை: போயஸ் கார்டன் வீட்டிற்குள் போக்குவரத்து ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் பல்வேறு பரபரப்புக்குள்ளானது. அங்கு வசித்து வந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு போயஸ் கார்டன் இல்லம் வெறிச்சோடியது. இளவரசியின் மகன் விவேக் மட்டும் அவ்வப்போது போயஸ்கார்டன் இல்லம் சென்று வந்தார். போலீஸ் பாதுகாப்பும் அங்கு குறைக்கப்பட்டது.

பல்வேறு இழுபறிக்குப் பின் போயஸ் இல்லம் நினைவிடமாக்கப்படும் என அரசு அறிவித்து ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தினமும் பாதுகாப்புக்கு செல்வதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுதொடர்பாக போக்குவரத்து கழக வட்டாரங்களிடம் விசாரித்தபோது பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் விவரம் வருமாறு: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றுவதில் சசிகலா தீவிரமாக இருந்தார். போயஸ் கார்டன் உள்பட தங்கள் உறவினர்கள் வீடுகளின் பாதுகாப்புக்காக மன்னார்குடியில் இருந்து ஏராளமானோர் களமிறக்கப்பட்டனர்.

கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டபோது கூடுதலாக பாதுகாவலர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தில் மாவட்ட நிர்வாகியாக உள்ள மன்னார்குடியை சேர்ந்த ஒருவர், சங்கத்தில் உள்ள பஸ் ஊழியர்களை வரவழைக்கலாம் என டிடிவி.தினகரனிடம் தெரிவித்தார். அவர் தினகரனுக்கு உறவினர் ஆவார். இதுதொடர்பாக எம்டிசியில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியை நாடியபோது, எப்படியும் சசிகலா குடும்பத்தினர்தான் ஆட்சி செய்வர் என்பதால் சம்மதம் தெரிவித்தார். அதன்படிதான் கூவத்தூர் விடுதிக்கு போக்குவரத்து ஊழியர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டனர். இந்த சூழலில்தான், போயஸ்கார்டனில் உள்ள ஒரு முக்கிய அறைக்கு நம்பிக்கையான ஆட்கள் பாதுகாப்புக்கு தேவைப்பட்டது. உடனே, அந்த சங்க நிர்வாகியை தொடர்பு கொண்ட டிடிவி.தினகரன் தொழிற்சங்கத்தில் உள்ள ஊழியர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கும் எம்டிசி உயர் பொறுப்பு அதிகாரி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள 40 பேர் போயஸ்கார்டன் அனுப்பப்பட்டனர். இவர்கள் சபாரி அணிந்துதான் செல்வர். தாங்கள் போயஸ்கார்டன் செல்வதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என தினகரன் தரப்பு மிரட்டியிருந்தது. இதற்காக தனி சம்பளமும் வழங்கப்படுகிறது. நிர்வாகத்துக்கு தெரிந்தே செல்கிறார்கள் என்பதால், தினமும் டெப்போ வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சாதாரணமாக சென்றுவிடுவர். அங்கு அவர்களுக்கு தனியார் ஓட்டலில் இருந்து சாப்பாடு கொண்டு செல்லப்படும். கடந்த 6 மாதமாக இது நடந்து வருகிறது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, ‘ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தில் இருக்கும் ஊழியர்கள் வெளி வேலைக்கு செல்வது வழக்கம். சிலர் இந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். மேலிட சிபாரிசு இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சங்க வேலையாக செல்கிறோம் என்பார்கள். எங்களால், அவர்கள் எங்கு செல்கிறார்கள், எதற்காக செல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய முடியாது. போயஸ்கார்டன் செல்வது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றனர். ஏற்கனவே, சசி குடும்பத்தினர் மீது ஐடி ரெய்டு நடந்துள்ள நிலையில் போயஸ்கார்டன் பாதுகாப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அரசுக்கு தெரிந்து தான் நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்