SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பெனி நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர் : சசிகலா அண்ணன் மகன் விவேக் பேட்டி

2017-11-15@ 01:37:01

சென்னை: திருமணத்தின்போது என் மனைவி அணிந்திருந்த நகைகள் குறித்து கேட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், கம்பெனியில் நிதி சம்பந்தமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாக சசிகலா அண்ணன் மகன் விவேக் கூறியுள்ளார்.  ஜெயா டிவி அலுவலகம் மற்றும் ஜெயா டிவி சிஇஒ விவேக் வீட்டில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் 5 மணிநேரம் விவேக்கிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது வீட்டில் கடந்த 5 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. எங்கள் வீட்டில் மட்டுமல்லாமல், எங்களுக்கு சம்பந்தப்பட்ட கம்பெனிகளிலும் நடந்தது. ஜெயா டி.வி.யையும், ஜாஸ் சினிமாவையும் கடந்த 2 ஆண்டுகளாக நான் நிர்வகித்து வருகிறேன். ஜெயா டி.வி.யை மார்ச் மாதம் முதல் நிர்வகித்து வருகிறேன். ஜாஸ் சினிமாஸ்க்கு 2015 முதல் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறேன். இந்த 5 நாட்களாக இது சம்பந்தமான ஆவணங்கள் பற்றி என்னிடம் கேட்டார்கள். எல்லாவற்றிலும் விரிவாக நான் பதில் சொல்லியிருக்கிறேன்.

இதை தவிர்த்து, எனது மனைவிக்கு திருமணத்தின் போது போட்ட நகைகள் பற்றி கேள்வி கேட்டனர். இது எல்லாவற்றிற்கும் நான் கணக்கு வைத்திருக்கிறேன். கண்டிப்பாக, 2 அல்லது 3 நாட்களில் இது தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினரிடம் சமர்ப்பிப்பேன். வருமான வரித்துறை அவர்களது கடமையை செய்திருக்கிறது. என்னுடைய பணி, அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அதை நான் சொல்லிவிட்டேன். அடுத்து கொஞ்சம் நாட்களிலோ அல்லது ஒரு மாதத்திலோ வருமானவரித்துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள்.

அந்த சமயத்தில் என்னிடம் என்னென்ன கேள்வி கேட்கிறார்களோ, அதற்கு பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கு தெரிந்த தகவலை அப்போது சொல்வேன். ஒரு சில பொதுவான ஆவணங்களை கம்பெனியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். பொதுவான மற்றும் நிதி சம்பந்தமான ஆவணங்களை அவர்கள் எடுத்தனர். அதுகுறித்த விவரங்களை கேட்டனர். நாங்கள் திரைப்படங்களை விநியோகம் செய்கிறோம். அது தொடர்பான கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொன்னேன். வருமானவரித் துறை சோதனையில் உள்நோக்கம் இருப்பதாக எனக்கு எதுவும் தெரியவில்லை. வருமான வரித்துறையினர் அவர்களது பணியை செய்திருக்கிறார்கள்.

யார் தவறாக பணம் சம்பாதித்து இருந்தாலும், அதற்கு வருமான வரி செலுத்தியாக வேண்டும். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். அது நம்முடைய கடமை. யார் தவறு செய்திருந்தாலும், அது நானாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும், ஒரு அமைச்சராக இருக்கட்டும், யாராக இருந்தாலும் வருமான வரி செலுத்துவது நமது கடமை. இதற்கு நாம் பொறுப்பானவர்கள். இதை தவிர்த்து, வேறு விதமான பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். இதுவரைக்கும் இதுதான் என்னுடைய முடிவு. மேற்கொண்டு வருமான வரித்துறையினர் என்னிடம் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். விவேக் பேட்டியளித்த போது அவரது மாமனார் பாஸ்கர் உடனிருந்தார்.

வீட்டுக்கு வெளியே பேட்டி

விவேக் பேட்டியளித்த போது வீட்டு காம்பவுண்ட்டுக்கு உள்ேள கூட பத்திரிகையாளர்களை விடவில்லை. காம்பவுண்டுக்குள் விட்டால் வீட்டை படம் பிடித்து விடுவார்கள் என்பதற்காக விடவில்லை. இதனால், விவேக் வீட்டிற்கு வெளியே தெருவுக்கு வந்து, மழையில் நனைந்தபடி பேட்டியளித்தார். நிருபர்களின் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பேட்டியளித்தார். ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் அவர் பேட்டியளித்த போது அவரை சுற்றி அவரது ஆதரவாளர்கள் நின்றிருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-11-2017

  24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • YuvaraniVinayakaPrize

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

 • ExpresshighwayNitin

  தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

 • ThiruvannamalaiKarthikaiDeepa

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

 • Mike_Hughes

  பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்