SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடவு செய்யவே நீர் இல்லை: தஞ்சை விவசாயிகள் தவிப்பு

2017-11-14@ 21:26:25

திருவையாறு: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக 6 வருடங்களுக்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு சம்பாவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது அணையில் 58.358 டிஎம்சி தண்ணீர் இருந்தது. 5ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் 11.5 லட்சம் ஏக்கரில் பயிரிட திட்டமிடப்பட்டது.
காலம் கடந்து விட்டதால் மத்திய கால ரக நெல் விதைகளை பயன்படுத்தும்படியும், நேரடி விதைப்புகளை செய்யும்படியும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். தண்ணீரின் தேவை கருதி வினாடிக்கு 20ஆயிரம் கனஅடி வரை மேட்டூரில் இருந்து திறந்தனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தவிர நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டுமே வழக்கத்தை விட மழை அதிகமாக பெய்து வருகிறது.  நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் சம்பா  பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.  நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் கானூர்,நன்னிலம் திருத்துறைப்பூண்டி, முடிகொண்டான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து கடந்த 2ம் தேதியில் இருந்து வினாடிக்கு 3500 கனஅடி வீதமே  திறக்கிறார்கள். இதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் இன்னும் பெரும்பாலான பகுதிகளுக்கு நடவு செய்யவே தண்ணீர் கிடைக்கவில்லை. காரணம் தஞ்சை மாவட்டத்தில் போதுமான மழை இல்லை. அதே நேரத்தில்  இங்கு பெய்யும் மழை, அதனால்  ஏற்படும் வெள்ளம் அனைத்து திருவாரூர், நாகை மாவட்டங்களை நோக்கி ஓடிவிடுகிறது. கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய் மூலமே தஞ்சை மாவட்டத்தில் அதிக ஏக்கர் பரப்பில் சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக கல்லணை கால்வாய் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். ஆனால் இந்த பகுதியில் சுமார் 1 லட்சம் ஏக்கர் தான் இதுவரை நடவு செய்யப்பட்டு உள்ளது. கல்லணை கால்வாயில் கடை மடை பகுதியில் இன்னும் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கிறது. காரணம்  இங்கு இன்னும்  மேட்டூர் அணை தண்ணீரும் வரவில்லை. மழையும் இல்லை. குறிப்பாக பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது.  இன்னும் 20 நாட்களுக்குள் இந்த பகுதியில் போதுமான மழை பெய்துஏரி குளங்கள் நிரம்ப வேண்டும். அல்லது மேட்டூர் தண்ணீர் அதிக அளவு வரவேண்டும். இல்லாவிட்டால் இவர்கள்  சம்பா சாகுபடி செய்ய முடியாது. குறைந்த காலம் கொண்ட குறுவை சாகுபடி செய்யலாம். அதற்கான விதைகளை இனி தேட வேண்டிய நிலை உள்ளது. எனவே கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய்க்கு அதிக தண்ணீர் திறக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இல்லாவிட்டால் பேராவூரணியில் சாலை மறியல் செய்யவும் முடிவு செய்து உள்ளனர்.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மூலம் பாசனம் பெறும் தஞ்சை மாவட்ட விவசாயிகளும் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர். காரணம் கடந்த 10 தினங்களாக இவர்களுக்கு  தண்ணீர் திறக்கப்படவில்லை. மழையும் இல்லை.

இதனால் இந்த பகுதி விவசாயிகள் பம்ப் ஷெட் தண்ணீரைக்கொண்டு நடவு செய்கிறார்கள். பம்ப்ஷெட் வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள பம்ப்ஷெட்டில் பணம் கட்டி தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். மணிக்கு ரூ.100 வீதம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இல்லாவிட்டால் விளையும் வரை தண்ணீர் தர வேண்டும். அப்படி கொடுத்தால் ஏக்கருக்கு 3 மூட்டை நெல் என்ற அடிப்படையில் தண்ணீர் வாங்கி நடவு செய்து வருகிறார்கள். திருவையாறு தாலுகா பகுதிகளில் இந்த நிலை காணப்படுகிறது. இந்த இரண்டுக்கும் வசதி இல்லாத திருவையாறு பகுதி விவசாயிகள் பலர் இன்னும் நடவு செய்யாமல் உள்ளனர். இதிலும் விவசாயிகளுக்கு ஒரு ஆபத்து உள்ளது. அதாவது இந்த மாதம் 30ம் தேதிக்குள் பயிர் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். அதற்கு பிறகு இன்சூரன்ஸ் செய்ய முடியாது. இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமானால் நடவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் கிராம நிர்வாக அதிகாரி சிட்டாஅடங்கல் கொடுப்பார். அதைக்கொண்டு தான் இன்சூரன்ஸ் செய்ய முடியும். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் அளவுக்கு இன்சூரன்ஸ்  பிரிமியம் பெற்று விட வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தபோதிலும் தற்போது வரை 36 ஆயிரம் ஏக்கர் அளவுக்கே இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது.

மேட்டூர் நீர் திறப்பு அதிகரிப்பு
தஞ்சை மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்ட வாய்க்கால் பாசன விவசாயிகளின் நலன் கருதி நேற்று இரவு 10 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது.  அணையின் நீர் மட்டம் இன்று காலை 8 மணிக்கு 84.830 அடி. அணைக்கு வினாடிக்கு 1884 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் இருப்பு 46.939 டிஎம்சி. கல்லணையில் இருந்து  வெண்ணாற்றில் வினாடிக்கு 100 கனஅடியும், கல்லணை கால்வாயில் 610 கனஅடியும் திறக்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Mike_Hughes

    பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்