SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

2017-11-14@ 00:44:06

புதுடெல்லி:தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் இருந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. அதில் 1,183  மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் வெளிமாநிலங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி  மற்றும் நகராட்சி சாலைகளாக மாற்றி மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல  வழக்கில்,“மாநிலத்தில் இருக்கும் சாலைகளை மாவட்ட சாலை களாக மாற்றி மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக சில திருத்தங்களை உச்ச  நீதிமன்றம் கொண்டு வந்தது. இந்த உத்தரவை பயன்படுத்தி தமிழக அரசு ஏற்கனவே நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டிருந்த 1,700 மதுக்கடைகளை  மீண்டும் திறந்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து சமூக நீதி பேரவை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வு முன்னிலையில்  விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,” இந்த வழக்கில் மனுதாரர் கூறியது போல் 1,700  மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. அதில் மொத்தமாக 800 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது எனவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில்  விளக்கம் கேட்டு ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விசாரணை நீதிபதிகள் தற்போது அரசியல் சாசன அமர்வில் இருப்பதால் கால  அவகாசம் வேண்டும் என்றும், அதுகுறித்த விளக்கங்கள் தெரியும் வரை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுக்கடைகள் எதுவும்  திறக்கப்படாது என நீதிபதி முன்னிலையில் தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வரும் 20ம் தேதி வரை தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கியும், அதுவரை  புதிய மதுக்கடைகளை திறக்க தடை விதித்தும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்  கடந்த வாரம் விளக்க மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த  நிலையில் மேற்கண்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து தலைமை நீதிபதி உத்தரவில், “தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கும் விவகாரத்தில், மாநிலத்தில் இருக்கும் நெடுஞ்சாலைகளை ஊரக  சாலைகளாக மாற்றி அமைத்து  உள்ளாட்சி பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கலாம். இதில் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள தேசிய  மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மாவட்ட ஆட்சியாளர் நேரில் சென்று அதற்கான இடங்களை தேர்வு செய்து அறிவித்த பின்பு தான் அந்த  இடங்களில் அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் சண்டிகர் மாநிலத்திற்கு உள்ள சட்டவிதி  அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து உச்ச நீதிமன்ற இந்த  அதிரடி உத்தரவால் 800க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மீண்டும் தமிழகத்தில் திறக்க வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்