SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று தீபாவளி திருநாள் மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டும்: கவர்னர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

2017-10-18@ 01:42:10

சென்னை: தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டும் என்று கவர்னர், முதல்வர் உள்பட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  கவர்னர் பன்வாரிலால் புரோகித்: தீபாவளி திருநாளில் தூய்மையான மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற உறுதியேற்போம். தீபாவளி திருநாள் மக்களிடையே அன்பையும், சகோதரத்துவத்தையும் வலுப்பெற செய்யட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மறம் வீழ்ந்து, அறம் வென்ற நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திருநாள் விளங்குகிறது. இந்த தித்திக்கும் தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும், இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: நாட்டில் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று இந்த தீபாவளி நல்ல நாளில் சபதம் ஏற்போம். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும். பாரதம் தழைக்க வேண்டும். தேன் தமிழ்போல் பாரத மக்கள் வாழ்வு இனிக்கட்டும்,  திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்):  மனித இனத்திற்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள் அகற்றப்பட்ட நாளையே தீபாவளி திருநாளாக ஜாதி, மதம், இனம், மொழி எல்லைகளைக் கடந்து அனைத்து மக்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இன்றைய மத்திய அரசின் கீழும், மாநில அரசினாலும் மக்கள் படும் துயரும், தொடர்ந்து வரும் வறுமையும், ஏழ்மையும் அகன்று அனைத்து மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும்.  ராமதாஸ்(பாமக நிறுவனர்): உழவும், தொழிலும்  செழித்த காலத்தில் தீபஒளி அப்படிப்பட்டதாகத் தான் இருந்தது. இப்போது கடன்வாங்கிக் கொண்டாடப்படும் திருநாளாகி விட்டது. தீபஒளித் திருநாளின் அடையாளமே ஒளியும், அதனால் ஏற்படும் வெளிச்சம் மற்றும் மகிழ்ச்சியும் தான். தீபத்தின் ஒளியைப் போலவே உழவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைக்கக்கூடிய ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று கூறி தீபஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய திருநாளை, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல பேர் உயிர் இழந்து, பல ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வெகு சிறப்பாக தீபாவளி திருநாளை கொண்டாடும் நிலையில் இல்லையென்றாலும், அவரவர் சக்திக்கு ஏற்ப தீபாவளியை அனைவரும் கொண்டாடவேண்டும். தமிழிசை சவுந்தரராஜன்(தமிழக பாஜ  தலைவர்): தமிழகத்தில் அத்தனை தீங்குகளும் அழிந்து, தீங்குகளே இல்லாத நன்மை  கிடைக்கும் தீபாவளியாக, டெங்கு இல்லாத தீபாவளியாக இந்த தீபாவளி அமைய  வேண்டும். ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): ஒட்டு மொத்த மக்கள் மகிழ்வோடும், இனிதோடும் வாழ வேண்டும். அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டும். என் இனிய தமிழ் மக்களுக்கு தமாகா சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர்): இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாசாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும். தீபாவளியை கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): வறுமையும், சுரண்டலும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிய வேண்டும் என்பன உள்ளிட்ட நமது இலக்குகளை வென்றெடுப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும். டி.டி.வி.தினகரன்: தீபாவளி என்பது ஏழைகளுக்கு கைக்கெட்டும் கனியாக சிறந்து விளங்க வேண்டும். இந்த தீபாவளி நன்னாளில் அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்ற அவாவினை தெரிவித்து, தமிழ் மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இதே போல சமக தலைவர் சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்,  கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் ஏ.நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஜனதாதளம் (ஐக்கியம்) தமிழ்நாடு பொது செயலாளர் டி.ராஜகோபால், அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் மத்தியாஸ்  உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

 • Guatemalachrismas

  கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

 • protestfrance

  எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

 • ItalyConcertStampede

  இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்