SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் சமச்சீர் கல்வி தந்த சமணர்கள்

2017-10-17@ 11:35:13

இந்தியாவில் வேதகாலம் முதலே குருசிஷ்ய பரம்பரை இருந்து வந்தது. ஆனால், கல்வி கற்கும் உரிமை குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. இதனால் சமூக சமத்துவம் சாத்தியமாகவில்லை. சமண, புத்த மதங்கள் ஒரு காலத்தில் வடக்கில் இருந்து தெற்காக நகர்ந்த போது, ஆன்மீகத்திலும் கல்வியிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. கொல்லாமை போதித் சமண முனிவர்கள் முதலில் துறவிகளின் பயிற்சிக்காகவே சமணப்பள்ளிகளை நடத்தினர். பின்னர் சைவ, வைணவ மதங்களின் தாக்குதலுக்கிடையே மக்களை நெருங்க கல்வி ஒன்றே சிறந்த கருவி என்பதை புரிந்து கொண்டனர். இதனால் வழிபாட்டு தலங்களுடன் பள்ளிகளும் உருவாகின. கல்வி கற்பிக்கும் இடம் என்ற பொருளில் பள்ளி என்ற சொல் உருவானது சமணர்கள் காலத்தில் தான்.

தொடக்கத்தில் மாணவர்கள் குருகுல முறையில் சமணர் பள்ளிகளில் தங்கி பயின்றாலும், பின்னர் வீட்டிலிருந்து சென்று வரும் ‘டே ஸ்காலர்’ முறை கல்வி சமணர்களிடமிருந்தே தொடங்கியது. எல்லோருக்கும் சமய தத்துவங்களோடு வாழ்வியலும், தர்க்க ரீதியான கல்வி முறையும் கற்பிக்கப்பட்டது. சமணர்கள் பெரும்பாலும் ஆடை அணியாத சமணர்களாகவே இருந்ததாலும், சமய பகைக்கு தாக்குப்பிடிக்கும் வல்லமை குறைந்திருந்ததாலும், ஊரை விட்டு மலைக்குகைகளிலேயே தங்கினர். மாணவர்களும் அங்கு சென்றே பயின்றனர்.

இது ஒருவிதத்தில் முந்தைய குருகுல கல்வியை பிரதிபலித்தாலும், இரண்டுக்கும் நுட்பமான வேறுபாடு இருந்தது. சமணர் பள்ளியில் சேர வர்ண தகுதி தேவையில்லாதிருந்தது. அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கும் அங்கு இடமிருந்தது. மேலும், சமணர் கல்வி பரவிய பின்பு தமிழ் இலக்கியங்களில் கொல்லாமை, துறவு குறித்த கருத்துகள் வலிமைபெற்றது. சமண, சமயம் கற்பிப்பதற்காகவே தமிழை சமணர்கள் கற்று தேர்ந்தனர். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஏனாத்தூரிலும், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலும் சமண கல்லூரிகள் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளன. அங்கு பயின்ற மாணவர்களே ஆசிரியர்களாகவும் உயர்ந்துள்ளனர். ஆசிரியர்களில் ஆண்கள் குரவர்கள் என்றும், பெண்கள் குரத்திகள் என்று அழைக்கப்பட்டனர்.

பிச்சை குரத்தி, பழயிறை காணிக்குரத்தி, மிழலூர் குரத்தி, திருச்சாரணத்து குரத்தி, நால்கூர் குரத்தி, திருமலைக் குரத்தி, இளநேச்சுரத்துக் குரத்தி, சிரிவிசைய குரத்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஆசிரியைகளை பற்றி கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
சமணம் தொடக்கத்தில் ஆண், பெண் பேதம் பார்த்தாலும் வளர்ந்த நிலையில் பாலினம் வகை தாண்டிய சமத்துவத்தை அளித்துள்ளது. தொல்காப்பியர் சமணர் என்ற கருத்தும் உண்டு. இதே போல் நாலடியார் முதல் சீவக சிந்தாமணி வரை சமணரால் படைக்கப்பட்டவையே. களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்திற்கு அருகில் பகவதிமலை என்றழைக்கப்படும் சிறிய குன்று இருக்கின்றது. இது பாண்டியர் காலத்தில் “ஜீனகிரிமாமலை” என்றழைக்கப்பட்டது. இங்கு கி.பி.13ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டு சிறப்புடன் திகழ்ந்துள்ளது.

இம்மலையில் இருந்த சமணப்பள்ளி ‘‘நியாயபரிபாலனப் பெரும்பள்ளி” என்று வழங்கப்பட்டாலும் இங்கு குறைந்தளவு மாணவர்கள் படித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக படுக்கை ஒன்றுடன் இருக்கும் குகை கீழே சுமார் 10, 15 பேர் உட்கார்ந்து பாடம் கேட்கும் அளவில் மட்டுமே உள்ளது. இங்குள்ள படுக்கை இன்றளவும் வழுவழுப்பாக இருக்கிறது. அந்த வகையில் செம்மையாக மூலிகைகள் கொண்டு தேய்த்து வண்ண மேற்றப்பட்டுள்ளது. இங்குள்ள இரு சுனைகள் கோடையில் வற்றாமல் சமண துறவிகளுக்கும், சித்தாந்தம் பயில வந்த மாணவர்களுக்கு தாகம் தணித்துள்ளது.
களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் சமணம் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டதால் பள்ளிகள் கோயில்களாக மாறின. சில பிற்கால கள்ளர்களின் குகைகளாக ஆகின. சமய வெறியில் கல்விப் பணி கருகி சாம்பலானது.

- சு.கோமதிநாயகம்
படங்கள்: வா.முருகன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-07-2018

  18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

 • nanteswarcowmarriage

  நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

 • LavaBombHawaii

  ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்