SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வரி ஏய்ப்பும், பணப்புழக்கமும் அதிகமுள்ள ரியல் எஸ்டேட் துறை விரைவில் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருகிறது? : நவம்பர் 9 கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை

2017-10-13@ 00:26:36

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், இந்தியாவின் வரி சீர்த்திருத்தம் பற்றி  பேசியதாவது: இந்தியாவில் அதிக வரி ஏய்ப்பும், அதிக பணப்புழக்கமும் உள்ள துறையாக ரியல் எஸ்டேட் உள்ளது. இருப்பினும், ஜிஎஸ்டி வரம்புக்குள்  இத்துறை இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், ரியல் ஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு  வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதற்கான எல்லா காரணங்களும் இருப்பதாக நானும் கருதுகிறேன். இருப்பினும், சில மாநிலங்கள்  இதை விரும்பவில்லை. இதனால், ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி  வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி, கவுகாத்தியில் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டத்தில்  விவாதிக்கப்படும்.

இத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், மக்களுக்கு நல்ல பயன் ஏற்படும். அப்படி செய்யும்பட்சத்தில், மக்கள் ‘இறுதி வரி’யை  செலுத்தினால் மட்டுமே போதுமானது. கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் மொத்த உற்பத்தி பொருட்களுக்கான வரியும் இதில் அடங்கி விடும். அப்படி  மொத்தமாக செய்யும் பட்சத்தில், அந்த வரி விகிதம் குறைவாகவும் இருக்கும். இறுதி செலவினம் குறைவது, வரி வளையத்துக்குள் மக்கள் வருவதை  ஊக்கப்படுத்தும். இது, நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிழல் பொருளாதாரத்தின் அளவை குறைக்க உதவியாக இருக்கும்.
வர்த்தக வளாக கட்டுமானம், கட்டிடங்கள், வீடுகள் அல்லது பொதுமக்களுக்கு முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ விற்பனை செய்வதற்கு  கட்டப்படும் கட்டுமானங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இருப்பினும், நிலமும் அது சார்ந்த மற்ற அசையா பொருட்களுக்கும்  ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை என்பது அடிப்படை சீர்த்திருத்தம். அதிக மக்கள் வரி செலுத்தும் சமூகமாக இந்தியாவை மாற்றுவதற்கு இது மிகவும்  அவசியமானது. நீண்ட கால அடிப்படையில்தான் இதன் பலன் தெரியவரும். இந்த நடவடிக்கையின் மூலம், மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு மக்கள்  அதிகளவில் மாறியுள்ளனர். தனிநபர்கள் அதிகளவில் வரி செலுத்துவதை இது உருவாக்கி இருக்கிறது. மேலும், ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையின்  தொடர்ச்சியாக, சந்தைகளில் நடைபெற்று வந்த ரொக்கப் பணப் பரிமாற்றம் இப்போது 3 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.

உலகத்திலேயே, மிகவும் குறைந்த வரி அமைப்பு கொண்ட நாடாக இந்தியா இருந்து வந்தது. நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை மிகவும்  குறைவாக இருந்தது. இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான எந்த முயற்சியும்   பல ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை. இதனால், நிழல் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இப்போதுதான், இந்த சவாலை  சந்திப்பதற்கான முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையின் மூலம், மக்களிடம் உள்ள பணத்தை பற்றிய  மர்மம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்களிடம் உள்ள பணத்துக்கு ஒரு அடையாளம் கிடைத்துள்ளது என்றார்.

* இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் புரளும் பணத்தின் மதிப்பு, வரும் 2020க்குள் 1.19 லட்சம் கோடிக்கு மேல் உயரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
* வீடு கட்டுமானத் துறையில் புரளும் மொத்த பணத்தின் மதிப்பு மட்டுமே, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5-6 சதவீதமாக இருக்கும் என  கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

 • iranshooting_festiv0000

  ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

 • beerfestiv_german123

  ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

 • china_harrvestingfestiv12

  சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்