SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பு, வெள்ளை உடையில் போலி வக்கீல்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கொடுமை : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

2017-10-13@ 00:15:58

சென்னை: காளான்களைப் போல் உருவாகியுள்ள போலி வக்கீல்கள் மீது எடுக்கப்பட் நடவடிக்கை என்ன என்று பார்கவுன்சில் மற்றும் தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபும் மாவட்டம், பெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி தொடர்பான 2  அறக்கட்டளைகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவக் கல்லூரியில் உரிய அடிப்படை  கட்டமைப்புகள் இல்லை என்பதால்  இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

 இந்நிலையில், இந்த கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 145 பேர் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றுமாறு உத்தரவிடக்கோரி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டு அறக்கட்டளைகளும் பேசி முடிவெடுத்து  நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், கல்லூரிக்குள் கடந்த மாதம் 20ம் தேதி இரண்டு அறக்கட்டளை  நிர்வாகிகளும் வக்கீல்களை அனுப்பி தகராறு செய்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினரையும் கேவலமாக பேசியுள்ளனர். இந்த விவரம் நீதிபதியின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கடந்த சில ஆண்டுகளாக வக்கீல்கள் பலர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து  நடந்துவருகிறது. நீதித்துறை மீதும், காவல்துறை மீதும் உள்ள நம்பிக்கைக்கு எதிராக கருப்பு, வெள்ளை உடையில் தங்களை வக்கீல்கள் என்று  கூறிக்கொள்பவர்களை கூலிப்படையாக நியமிப்பதும் நடந்து வருகிறது. இவர்கள் சிவில் வழக்குகளில் நுழைந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சுமார் 50 ஆண்டுகள் பழமையான வக்கீல்கள் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு போலியான ஆவணங்கள் மூலம்  சட்டப் படிப்பில் சேருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள சில நிறுவனங்களில் சட்டக் கல்வி விற்பனை செய்யப்படுகிறது.

கல்லூரிக்கே செல்லாமல் அந்த சான்றிதழ்களை விலைக்கு வாங்கி, போலி ஆவணங்களைக் காட்டி பார்கவுன்சிலில் பதிவு செய்து விடுகிறார்கள்.  இவர்கள் பின்னர் வக்கீல்களாக வலம் வருகிறார்கள்.  சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்போது தங்களுக்கு பாதுகாப்பை தேடுவதற்காகவே ரூ.50  ஆயிரம் முதல் ரூ.3 லட்சம்வரை செலவு செய்து லட்டர்பேடு கல்லூரிகளிடமிருந்து சட்டப் படிப்புக்கான சான்றிதழ்களை வாங்கி வக்கீலாகிறார்கள்.   இதுபோன்ற வக்கீல்களால்தான் நீதிமன்றத்தின் பணிகளின் முடங்குகின்றன. நீதிமன்ற புறக்கணிப்பு போன்ற போராட்டங்களும் நடத்தப்படுகின்றன.  இந்த வக்கீல்கள் மீது போலீசாரும் வழக்கு பதிவு செய்ய பயப்படுகிறார்கள். காரணம் அவர்களுக்கு வக்கீல்களின் ஆதரவு உள்ளது என்பதாகும். தற்போது கிரிமினல் வழக்கு இல்லாதவர்கள் வக்கீலாக இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வக்கீல்கள் சங்க தலைவர்களும் தங்களுக்கு  இதுபோன்ற வக்கீல்களை பக்கபலமாக வைத்துள்ளனர். இவர்கள் மீது பார்கவுன்சில்கூட நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது.

ஆங்கிலத்தில் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவர்கள் தமிழ்நாட்டை விட்டு விட்டு பக்கத்து மாநிலங்களில் பிஎல் சான்றிதழ்களை பணம் கொடுத்து  வாங்கிவிடுகிறார்கள். அதை வைத்து வக்கீலாகவும் பதிவு செய்துகொள்கிறார்கள். தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பிளஸ் 2வில் 85 சதவீத  மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும் சேர்க்கை கிடைப்பது கடினம். கிளாட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் தேசிய அளவிலான கல்லூரிகளில் சேர  முடியும் நிலை உள்ளது.

போலியாக சான்றிதழ்களை வாங்கி வக்கீலாகும் நபர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். அவர்களை கண்டிப்பாக அடையாளம் காட்ட  வேண்டும். வாடகை வழக்குகள், விபத்து வழக்குகள் ஆகியவை நடக்கும் நீதிமன்றங்களில் இதுபோன்ற வக்கீல்களின் அட்டகாசம் பெருகிவிட்டது. தற்போது விசாரணையில் உள்ள இந்த வழக்கில் வக்கீல்கள் செயல்பட்டதுபோல் வேறு எங்கும் நிகழக்கூடாது. அப்படி நிகழ்ந்தால் இந்த நீதிமன்றம்  கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும். தவறு செய்யும் வக்கீல்கள் மீது போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த  வக்கீல்கள் மீது பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அகில இந்திய பார்கவுன்சில் தலைவர், தமிழ்நாடு பார்கவுன்சில்  தலைவர், மத்திய சட்டத்துறை, மாநில சட்டத்துறை, டிஜிபி, உளவுத்துறை ஐஜி, சென்னை போலீஸ் கமிஷனர், காஞ்சிபுரம் எஸ்பி, திருவள்ளூர் எஸ்பி  ஆகியோர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

யார் கட்டுப்பாட்டில் கல்லூரி

அன்னை மருத்துவக் கல்லூரி விஷயத்தில் இந்த நீதிமன்றம்  கேட்கும் கேள்விகளுக்கு வரும் 24ம் தேதி காஞ்சிபுரம் எஸ்.பி பதில் தரவேண்டும்.

* தற்போது அன்னை மருத்துவக்கல்லூரி யார் கட்டுப்பாட்டில் உள்ளது

* போலி வக்கீல்கள் போன்ற மூன்றாவது நபர்கள் கருப்பு வெள்ளை உடையணிந்து இந்த கல்லூரிக்குள் வலம் வர 2 அறக்கட்டளையைச்  சேர்ந்தவர்களும் நியமித்துள்ளார்களா? மேலும், கல்லூரியில் வக்கீல்கள் உடையில் சென்றவர்கள் யார் என்பது புகைப்படங்கள் மூலம் அடையாளம்  தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படங்களை வெளியிடாமல் சம்மந்தப்பட்டவர்கள் மீது அட்வகேட் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  6 ஆயிரம்  வழக்குகள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் வக்கீல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?  இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட வக்கீல்கள் விவரங்களை 2 அறக்கட்டளை நிர்வாகிகளும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது  காஞ்சிபுரம் எஸ்பி வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2018

  26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • bangladesh_accd1

  1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

 • nationalpanchayat

  தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

 • turkey_building11

  துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

 • saamiyarrape129

  சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்