SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலி பணியிடங்களை நிரப்பாமல் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது : தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2017-10-13@ 00:08:15

சென்னை: காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாமல் நிரந்தர அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முயற்சிப்பதாக தி.மு.க  செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றால், காலத்தே வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின்  வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்புதான் அதற்குக் காரணமே தவிர, ‘குதிரை பேர’ முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆர்வமோ அக்கறையோ அல்ல  என்ற உண்மை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும்.

“உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்வடிவம் பெற்றுள்ள ஊதியக்குழு பரிந்துரைகளில் முரண்பாடுகள் இருக்கின்றன”, என்று ஏற்கனவே  அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து முதல்நிலைக் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத்தொகை  இல்லை, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 21 ஆயிரம் ரூபாய் மாநில அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை, வீட்டு  வாடகைப்படி மற்றும் மருத்துவப்படிகளில் ஏமாற்றம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பாகுபாடின்றி 30 சதவீத சம்பள உயர்வு இல்லை என்பது  போன்ற பல்வேறு குறைகளும் குமுறல்களும் இன்னும் அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகின்றன.

இதுதவிர, “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்”, என்ற அரசு ஊழியர்களின்  நீண்டகால கோரிக்கைப் பற்றிப் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட கமிட்டி இன்னும் தன் அறிக்கையை கொடுக்காமல் தாமதிப்பது வேதனைக்குரியது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்கும் நேரத்தில், அந்த ஓய்வூதியத் திட்டம் பற்றிய குழப்பத்திற்கும் தீர்வு கண்டிருக்க வேண்டிய முதலமைச்சர்,  “எனது முடிவுகள்”, “நான் ஆணையிட்டுள்ளேன்”, என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல, தன்னைத் தானே கற்பனை  செய்துகொண்டு, உயர் நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மறைத்து, சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு வெளியிட்டுள்ள, 11.10.2017 தேதியிட்ட அரசு  செய்திக்குறிப்பில் கூட, புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

அந்தக் கமிட்டி என்றைக்கு அறிக்கை கொடுக்கும்? அதுபற்றிய தீர்வு எப்போது வரும்? போன்ற கேள்விகளுக்கான பதில், இந்த அரசு போலவே அந்தக்  கோரிக்கையும் அந்தரத்தில் ‘தொங்கி’க் கொண்டிருக்கிறது. இந்த பரிந்துரைகளை ஏற்கும் அறிவிப்பில், ‘பணியாளர் சீரமைப்புக்குழு’, ஒன்று  அமைக்கப்படுவதாகக் கூறியுள்ளது அரசு. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத  நிலையில், நிரந்தர அரசு ஊழியர்கள் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம்   எழுகிறது.ஆகவே, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் நீதியரசர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு செய்யத் தவறியதை  உயர் நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஒரு சுமுகமான தீர்வு கண்டிருப்பது, நீதித்துறையின் மீதான  நம்பிக்கையை ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள
விரும்புகிறேன்.

டெங்கு ஆட்சி முதலில் ஒழிய வேண்டும்

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணி  மேற்கொண்டார். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: டெங்கு காய்ச்சலால் ஏறக்குறைய 15,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு  உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட  செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெங்கு பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவது, நிலவேம்பு குடிநீர் வழங்குவது  உள்ளிட்ட பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும், அதில் இருந்து எப்படி மீள்வது  ஆகிய விவரங்களை துண்டறிக்கைகள் மூலம் அச்சடித்து தொகுதி முழுவதும் வழங்கும் பணிகளும் நடக்கிறது. இன்று மாநிலம் முழுவதும் டெங்கு  காய்ச்சல் பரவி இருக்கிறது. எனவே, டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த டெங்கு ஆட்சி முதலில்  ஒழிய வேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2018

  23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • annanagar_iknt

  அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • perunthu_makkal11

  பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்