SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரெண்டிங்! - மனசை வருடும் கலம்காரி!

2017-10-12@ 10:46:07

இவளை விரும்பாத நங்கையர் இல்லை. நவீனக்  காலத்தில் பழமையான கலைவண்ணம், கைவண்ணமாய் மாறி, புதுமையாய் வியக்க வைக்கிறது என்றால் அவள்தான் கலம்காரி. தீபாவளி ஷாப்பிங்கில், பெண்கள் பெரும்பாலானோரின் சேலைப்பட்டியலில் கலம்காரி நிச்சயம் இடம்பெற்றிருப்பாள். கலம்காரி பிறந்த கதை சிறியதல்ல; பெரியது. கலம்காரி, பெர்சியப் பெயர். கலம் என்றால் பேனா அல்லது தூரிகை. காரி என்றால் கைவினைத்திறன். கையால் தீட்டப்பட்ட வண்ணம் அல்லது அச்சிடப்பட்ட ஜவுளி வகைதான் கலம்காரி. இயற்கை வண்ணங்கள், 17 படிநிலைகளில் பயன்படுத்தப்பட்டு கலம்காரி உருவாகிறாள். இந்தியா மற்றும் ஈரானில் இந்தச் சேலைகள் உருவாயின.

இந்தியாவில் கலம்காரிக்கு ஸ்ரீகாளஹஸ்தி, மசிலிப்பட்டணம் என இருபாணிகள். காளஹஸ்தி பாணியில் கைகள் மூலம் நுணுக்கமும், பொலிவும் கொண்ட ஓவியங்கள் உயிர்பெறும். அவை வண்ணக்கலவையால் அழகுறும். அவற்றின் அடையாளம் ஆன்மீக மணம். ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களின் காட்சிகள் அவற்றில் விரியும். அத்தனையும் கலைநயம் மிக்க கைவேலைப்பாடு. பெயரில் இருப்பதுபோல், மசிலிப்பட்டணத்திலேயே உருவாகிறது மற்றொரு வகை கலம்காரி. கலம்காரியை உருவாக்குபவர்களை கலம்கார் என்று அழைப்பதுண்டு. ஆந்திராவில் பல குடும்பங்கள் பரம்பரைப் பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டன.

எதிலும் தளர்ச்சி உண்டல்லவா? அந்தத் தளர்ச்சி வந்தது. ஆனால், கலை அழியுமா? அழியாமல் காத்ததற்குக் காரணம், கலம்காரியின் ஈர்ப்பு. மன்னர்கள் காலத்தில் அசத்திய இந்தச் சேலைகளின் வடிவமைப்பு, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களையும் கவர்ந்தது. நூற்றாண்டுகள் கடந்தும் கலம்காரி, இப்போதைய டிரெண்டிங் ஆகியிருக்கிறது என்றால் அது மாயையல்ல; மதிப்பு வாய்ந்தது என்று எல்லோருக்கும் புரியும். கலம்காரியின் பழமையான உருவாக்க முறை, தற்போது பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை. இதற்கான சாயம்தோய்ப்பும், வண்ணக்கோர்ப்பும் வித்தியாசமானவை. செயற்கைத்தனம் அற்றது என்பதால், இதில் போலித்தனமும் இல்லை. இந்தச் சேலைகள், காப்பியக் கால நாயகியர் அணிந்ததை நினைவுபடுத்தும் என்றாலும் நவீனத்தின் பிரதிபலிப்பாய் ஜொலிப்பதுதான் தனித்துவம்.

இப்போது கலம்காரியிலும் பல்வேறு பிராண்ட்கள். சேலைகள் என்றில்லாமல், ஸ்கர்ட், பேண்ட், சுடிதார், பிளவுஸ் உள்பட பல்வேறு வகை ஆடைகளும் கலம்காரி வடிவமைப்பைத் தாங்கி நிற்கின்றன. திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பிரபல ஜவுளிக்கடைகளில் பிரதானமாக கலம்காரி சேலைகள் தீபாவளி விற்பனையில் கலக்குகின்றன. விலை அதிகமாக இருக்கும் என்ற பயம் வேண்டாம். ரூ.500 விலையில் இருந்து இவை துவங்குகின்றன. விலைக்கேற்ப அதன் தரமும் உயர்ந்திருக்கிறது. ‘கலம்காரி சேலைகள் எப்போதுமே விற்பனையில் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன. இதனால், இந்த வகைச் சேலைகளில் தீபாவளிப் பண்டிகைக்காக பல வடிவமைப்புகளைப் பிரத்யேகமாகக் குவித்திருக்கிறோம்’ என்கிறார்கள் திருச்சி சாரதாஸ் நிறுவனத்தினர். ஆம்... பெண்கள் மனசை அள்ளிக்கொண்டிருக்கிறாள் கலம்காரி!

கொள்ளவும் அள்ளவும்
கலங்கள் பல உண்டு
கற்பனையை அள்ளுவதற்கும்
கலம் உண்டு
அவள் கலம்காரி
மதிமயக்குகிறாள்...
மனதை வருடுகிறாள்...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2018

  23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • annanagar_iknt

  அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 • perunthu_makkal11

  பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

 • thamilgam_porattam1

  வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்