SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு: முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து

2017-10-07@ 00:07:15

சென்னை: தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்துக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக முழு நேர கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்தது. மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் அரசியல் மாற்றத்தை கருத்தில் கொண்டு உடனடியாக முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி அறிவித்தார். இதையடுத்து பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று முன்தினம் காலை தமிழகத்தில் இருந்து விடைபெற்றார்.

இதை தொடர்ந்து புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் பிற்பகல் தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து, புதிய கவர்னர் பதவியேற்பு விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று காலை நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது மனைவியுடன் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற நீதிபதிகள், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 9.28 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய கவர்னருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்பி ஆகியோர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் புதிய கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்ட முடிவுகள் எடுப்பேன்’:கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற பின்அளித்த பேட்டி: தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு என் பணியை மேற்கொள்வேன். அரசியல் அமைப்பு சட்டத்துக்குட்பட்டு என் முடிவுகளை எடுப்பேன். வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வேன். அரசியல் ரீதியாக என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பதுதான் எனது முதல் பணி. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள் அறிமுகம்: பதவி ஏற்பு முடிந்ததும் தமிழக அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொரு அமைச்சரும் தனித்தனியாக மேடைக்கு வந்து கவர்னருடன் கைகுலுக்கி அறிமுகம் செய்து கொண்டனர். நீதிபதிகள் வாழ்த்து: விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர். அவர்களை மேடைக்கு அழைத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொருவரும் தனித்தனியாக கவர்னருடன் கைகுலுக்கினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்