SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

64 ஆண்டுகளாக சென்னையில் காந்தி நூலகம்

2017-10-02@ 07:23:37

வள்ளலார் சொன்ன ‘‘தருமமிகு சென்னை’’க்கு இன்னொரு பெருமையும் இருக்கிறது. அதுதான் காந்தியடிகளின் பெயரில் 64 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம். காந்தியால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கு.மகாலிங்கம் (87) நடத்தி வருகிறார். சென்னை, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில் தெருவில் வாடகை கட்டிடத்தில் உள்ளது ‘மகாத்மா காந்தி நூல் நிலையம்’. நூலகம் ஆரம்பிக்க காரணம், வளர்ச்சி குறித்து மகாலிங்கம், என்னுடைய பெற்றோர் மு.குப்புசாமி-கன்னியம்மாள் இருவரும் காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடு உடையவர்கள்.
அதனால், எனக்கும் அந்தக் கொள்கையில், சிறு வயது முதலே ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில், சைதாப்பேட்டையில் 1945-ம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு காமராஜர், முத்துரங்க முதலியார் தலைமையில் நடந்தது. அதில், கலந்து கொண்டேன். தி.நகரில் இன்றும் செயல்பட்டு வரும் தக்கர் பாபா பள்ளிக்கு 1946-ம் ஆண்டு வந்த மகாத்மா காந்தியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஜெகஜோதியாக இருந்த அவரின் உருவம், எளிமையான ஆளுமையால் கவரப்பட்டேன்.

வீட்டில் நிலவிய வறுமை காரணமாக. ஐந்தாம் வகுப்புக்கு மேல் என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை; எனவே, நிரந்தர வேலையோ, போதுமான வருமானமோ கிடையாது. ஆனால், எப்படியாவது தேசப்பிதா பெயரில், மக்களுக்கு உதவும் வகையில், நூலகம் ஆரம்பித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆகவே, திருமணப் பரிசாக நண்பர்கள் தந்த தையல் மிஷின் வைத்து, துணிகள் தைத்துக் கொடுத்து, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில்  நண்பர்கள் உதவியுடன் 2.11. 1952-ம் ஆண்டில் இருந்து காந்தி நூல் நிலையத்தை நடத்தி வருகிறேன். வாடகை இடத்தில் இன்றுவரை இந்த நூலகத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன்.

நூல் நிலையம்  தொடங்கிய காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் புத்தகங்கள் இருந்தன. ஆனால், சென்னை மாகாணம் முழுவதும் சுற்றியலைந்து, நண்பர்கள் உதவியுடன் புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். பயணச் செலவுக்கு காசு இல்லாத நேரங்களில் பல இடங்களுக்கு நடந்தும் சென்றிருக்கிறேன். இந்த முயற்சிக்கு ஊக்கம் தரும் விதத்தில், ராஜாஜி மற்றும் அவரது மகன் சி.ஆர். நரசிம்மன், கண்ணதாசன் , காந்தி கண்ணதாசன், அகிலன், அகிலன் கண்ணன், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் போன்றோர் புத்தகங்கள் தந்து உதவினர். இந்த நூலகம்தான் என் முதல் குடும்பம். இதை புரிந்து கொண்ட மனைவி சாரதா உறுதுணையாக இருந்தார். தற்போது 3 மகன்கள் பக்கபலமாக இருக்கின்றனர்.  இங்கு 100க்கும் மேற்பட்ட காந்தி தொடர்பான புத்தகங்கள் உட்பட 22,000 நூல்கள் உள்ளன.  
         
நான்  மே 1965-ம் ஆண்டு துர்காபூர் மாநாட்டுக்காக, காமராஜர், ஈ.வி.கே. சம்பத் ஆகியோருடன் வட இந்தியா சென்றபோது, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு அணிவித்த கதராடையை எனக்கு அணிவிக்க செய்து ஆச்சரியப்படுத்தினார்.            
இன்று நிலைமை மாறிவிட்டது. எங்களுடைய காலத்தில் அரசு மக்களுக்காக போராடியது. இன்று மக்களை அரசு போராடச் செய்கிறது. இங்குள்ள புத்தகங்களைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சொந்த இடத்தில் இறுதி வரை நூலகம் நடத்த வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்