SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கவர்னருடன் இன்று சந்திப்பு

2017-08-22@ 01:10:36

சென்னை : அதிமுக இரு அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், டிடிவி.தினகரன் நேற்று சட்ட நிபுணர்கள் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 18 எம்எல்ஏக்களும் கவர்னரிடம் இன்று கடிதம் கொடுக்க உள்ளதாக எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் அறிவித்துள்ளார். அதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இதனால் டிடிவி.தினகரன் கட்சியில் தனித்து விடப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சசிகலாவால் டிடிவி.தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் ஓபிஎஸ் அணி மட்டுமே சசிகலா குடும்பத்தை எதிர்த்து வந்த நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி அணியும் அக்குடும்பத்தை முற்றிலும் கட்சியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதால் டிடிவி.தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் டிடிவி தரப்புக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 36 எம்எல்ஏக்கள் தினகரனை ஆதரித்த நிலையில் தற்போது அதிகபட்சம் 19 எம்எல்ஏக்களே அவர் பக்கம் உள்ளனர். அணிகள் இணைப்பு தீவிரமாக நடந்து வந்த நிலையில் நேற்று தன் இல்லத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வெற்றிவேல், ரங்கசாமி, தங்க தமிழ்செல்வன், ஜக்கையன், பாலசுப்பிரமணி, தங்கதுரை, மாரியப்பன் கென்னடி, கோதண்டபானி, முத்தையா, செந்தில்பாலாஜி, அருள் முருகன், ஏழுமலை, சுப்பிரமணி, சுந்தர்ராஜ், கதிர்காமு, செந்தமிழன், ஜெயந்தி, பார்த்தீபன் ஆகிய 18 எம்எல்ஏக்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதுதவிர, நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். தோப்பு வெங்கடாசலம் கலந்து கொள்ள வில்லை. நேற்று பிற்பகல் 2 மணி வரை அணிகள் இணைப்பில் இழுபறி நீடித்ததால் ஆலோசனை முடித்துக்கொண்டு சிலர் அங்கிருந்து புறப்பட்டனர். சிறிது நேரத்தில் அணிகள் இணைந்த செய்தி வந்ததும் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார். அப்போது வக்கீல்கள் சிலரும் கலந்து கொண்டதாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் முதல்வர் உள்பட அவர் அணியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்து போட்டிருப்பதால், அதன் மூலம் சட்டரீதியாக கட்சியில் மீண்டும் கால் பதிக்க டிடிவி.தினகரன் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அணிகள் இணைந்து விட்டதால், அடுத்தக்கட்டமாக அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இருப்பினும் நேற்று கூட்டத்தில் 18 எம்எல்ஏக்கள் மட்டும் கலந்து கொண்டதால் அவர்களை மட்டும் வைத்து கொண்டு ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முடியுமா, அதற்கான அவசியம் இருக்கிறதா அல்லது வேறு எதாவது வழியில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியை மடக்கலாமா என்பது குறித்து தினகரன் தீவிரமாக ஆலோசித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. டிடிவி ஆதரவு எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் நேற்று கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாததால் அவர் சொந்த ஊரில் இருப்பதாக டிடிவி தரப்பு தெரிவித்தது. இதற்கிடையில், நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 18 எம்எல்ஏக்கள் வந்து தியானம் செய்தனர். பின்னர் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் மற்றும் எம்எல்ஏக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

அனைவரும் சேர்ந்து தான் தற்காலிக பொதுசெயலாளராக சசிகலாவை தேர்வு செய்தோம். அதன்பின் 5 பேர் சேர்ந்து சசிகலாவை முதல்வராக நியமிக்கப்பதற்கு ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அப்போது ஓ. பன்னீர்செல்வம் வேலை பளு காரணமாக முதல்வர் பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்தார். அதன்பின் பிரிந்து சென்றார். அப்போது பொது செயலாளர் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தால் சசிகலாவின் ஒப்புதலுடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தோம். சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அப்போது எதிர்த்து ஓட்டு போட்டவர் பன்னீர் செல்வம். இரட்டை இலையை முடக்கியவர், அதிமுகவை உடைத்தவர்தான் பன்னீர் செல்வம். ஒன்பது எம்எல்ஏ வைத்திருக்கும் பன்னீர் செல்வத்துக்கு இவ்வளவு மரியாதை என்றால் 25 எம்எல்ஏக்கள் இருக்கும் எங்களுக்கு ஏன் மரியாதை இல்லை. பன்னீர் செல்வம் அவரது முடிவை 9 எம்எல்ஏக்களிடம் கேட்டு தான் முடிவு எடுத்தார். எங்களிடம் ஏன் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. அதனால் இன்று கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம். 10 மணிக்கு நேரம் ெகாடுத்து இருக்கிறார்கள். அப்போது எங்களின் நல்ல முடிவை அறிப்போம். கவர்னர் சந்திக்க நேரம் கொடுத்து இருப்பதால் அதற்குள் எதுவும் கூறக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். தங்த தமிழ்செல்வன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ்பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி பாதிக்குமா?

ஜெயலலிதா மறைந்த நிலையில் தற்போது மொத்தம் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் திமுக கூட்டணி 98 பேர், அதிமுக கூட்டணியில் 135 பேர் உள்ளனர். அதிமுக எம்எம்எல்ஏக்கள் 135 பேரில் மாற்று கட்சியில் இருந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தமிமும் அன்சாரி, தனியரசு ஆகிய 3 எம்எல்ஏக்களும் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர டிடிவி.தினகரன் பக்கம் 19 பேர் உள்ளனர். ஆக மொத்தம் டிடிவிக்கு 22 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதால் முதல்வர் எடப்பாடி தரப்பில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-11-2017

  20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-11-2017

  19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்