SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

63 குழந்தைகள் பலியானதற்கு பொறுப்பேற்று உ.பி. முதல்வர் பதவி விலக வேண்டும்: பாஜ அரசுக்கு காங்கிரஸ் நெருக்கடி

2017-08-13@ 01:39:29

கோரக்பூர் : ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனையில்  63 குழந்தைகள் பலியானதற்கு தார்மீக பொறுப்பேற்று, உத்தரப் பிரேதச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு, குழந்தைகள் நலப்பிரிவில் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளில் 30 பேர், கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்ததாக  கோரக்பூர் மாவட்ட கலெக்டர் ராஜிவ் ரவுதேலா நேற்று முன்தினம் தெரிவித்த தகவல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் இறந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 நாளில் 63 குழந்தைகள் இறந்துள்ளன.

முதல்வர் ஆலோசனை

இது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘மாவட்ட போலீஸ் எஸ்பி அறிக்கையின்படி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு பயன்படுத்தும் திரவ ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 21 குழந்தைகள் கடந்த 36 மணி நேரத்தில் இறந்துள்ளனர்’’ என்றார். இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங், மருத்துவ கல்வி துறை அமைச்சர் அசுதோஷ் டாண்டன் ஆகியோர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று சந்தித்து ஆலோசித்தனர்.

கடும் நடவடிக்கை

பின்னர் இரு அமைச்சர்களும், கோரக்பூர் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது பேட்டி அளித்த அமைச்சர் டாண்டன், ‘‘ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் முதல்வரிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இதைப் பற்றி சுகாதாரத்துறை அமைச்சரிடமும் கூறப்படவில்லை. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் ஆதித்யநாத் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்’’ என்றார்.

முதல்வர் விளக்கம்

சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில், ‘‘கடந்த 7ம் தேதி முதல் கோரக்பூர் மருத்துவமனையில் 60 குழந்தைகள் இறந்துள்ளனர்’’ என்றார். முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில், ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த குழந்தைகளும் இறக்கவில்லை. இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும். இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படுகிறது’’ என்றார்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க எதிர்க்கட்சியினர் குவிந்து வருகின்றனர். குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் பிரதிநிதிகள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பதவி விலக வேண்டும்

இந்த விஷயத்தில் யோகி ஆதித்யநாத் அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டியுள்ளன. 63 குழந்தைகளின் பலிக்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் யோகி ஆதித்யநாத், சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கூறி உள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், ‘‘மாநில அரசின் மெத்தனப் போக்கால் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதற்காக சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். பொதுமக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். உபி முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘‘முழு விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா, கோரக்பூர் மருத்துவமனைக்கு சென்று நிலையை விசாரிக்க இணை அமைச்சர் அனுப்பிரியா படேலுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, கவனக்குறைவாக செயல்பட்டதற்காக கோரக்பூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநில முதன்மைச் செயலாளர் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 63 குழந்தைகள் பலி விவகாரம் பாஜ முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கோரக்பூர், முதல்வர் ஆதித்ய நாத்தின் சொந்த தொகுதி. இங்கு அவர் 5 முறை எம்.பி.ஆனவர்.

சிலிண்டர் சப்ளை நிறுவனம் காரணமா?

கோரக்பூர் மருத்துவமனைக்கு லக்னோவைச் சேர்ந்த நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்து வந்தது. அந்நிறுவனத்திற்கு ஏராளமான பணம் பாக்கி வைத்ததால், சிலிண்டர் சப்ளையை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு குழந்தைகள் இறந்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மருத்துவமனை நிர்வாகம், சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடந்த 3, 10ம் தேதிகளில் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அதன் பிறகும் சப்ளை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று சிலிண்டர் சப்ளை நிறுவனத்தில் அதிரடி சோதனையிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதே நேரத்தில், சிலிண்டர் சப்ளையை நிறுத்தவில்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பெற்றோர்கள் குற்றச்சாட்டு

குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கோரக்பூர் மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், மருந்து, உணவு உள்ளிட்டவற்றை வெளியில் இருந்து தான் வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் கூறி உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்