SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண உதவித்தொகைக்கு 1.20 லட்சம் பெண்கள் ஓராண்டாக காத்திருப்பு: ஏமாற்றம் அளித்த 8 கிராம் தங்கம்

2017-08-13@ 01:31:58

* முடங்கியிருக்கும் திட்டம் உயிர்பெறுமா?

திருவண்ணாமலை : திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் கிடைக்காமல், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக சுமார் 1.20 லட்சம் பெண்கள் காத்திருக்கின்றனர். தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் திருமண உதவித்திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ₹25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டதாரிகளுக்கு ₹50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.  திருமண உதவித்திட்டத்தின் கீழ் பயன்பெற, திருமணம் நடைபெறுவதற்கு 40 நாட்களில் இருந்து திருமணம் நடைபெறும் முன்தினம் வரை விண்ணப்பிக்கலாம். ஆனால், விதவை மறுமண திட்டத்தில் பயன்பெற திருமணம் முடிந்த பிறகு 6 மாதம் வரையிலும், கலப்புத் திருமண திட்டத்தில் பயன்பெற திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் வரையிலும் விண்ணப்பிக்க சிறப்பு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. அப்போது, 8ம் வகுப்பு கல்வித்தகுதியாக கொண்டு, திருமண உதவித்தொகை ₹5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனால், இடைநிற்காமல் பள்ளிக்கல்வி தொடரும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தவும் இத்திட்டம் உதவியது. அதைத்தொடர்ந்து, கடந்த 1996ம் ஆண்டு கல்வித்தகுதியை 10ம் வகுப்பாக உயர்த்தியதோடு, உதவித்தொகையும் ₹10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றி காரணமாக, இந்த உதவித்தொகை ஒவ்வொரு காலகட்டத்திலும் ₹15 ஆயிரம், ₹20 ஆயிரம், ₹25 ஆயிரம் என படிப்படியாக உயர்த்தப்பட்டது. மேலும், பட்டதாரிகளுக்கு ₹50 ஆயிரமாக உயர்ந்தது.

 கடந்த 2011ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்கப்படும் என அறிவித்தார்.  கடந்த ஆண்டு மீண்டும் அவர் முதல்வராக பொறுப்பேற்றதும், தாலிக்கு தங்கம் 4 கிராம் என்பதை 8 கிராம் என உயர்த்தி அறிவித்தார்.
அதன்படி, 23.5.2016க்கு பிறகு திருமணம் செய்தவர்கள் 8 கிராம் தங்கம் பெற தகுதியுடையவர்கள் என்றும், அதற்கு முன்பு திருமணம் முடித்தவர்கள் பழைய நடைமுறைப்படி 4 கிராம் தங்கம் பெறலாம் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்கு பின்,  திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் கடந்த ஒரு ஆண்டாக முடங்கியிருக்கிறது. கடந்த 2016-2017ம் ஆண்டில் 12,500 பெண்களுக்கு மட்டுமே 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.  அதன்பிறகு, ஒருசில மாவட்டங்களில் சில நூறு பெண்களுக்கு மட்டுமே கண்துடைப்பாக 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. மேலும், 4 கிராம் தங்கம் பெறும் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் பலரும்கூட இன்னும் உதவித்தொகையை பெறாமல் காத்திருக்கிற நிலையும் நீடிக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த 23.5.2016க்கு பிறகு திருமண உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள 1.20 லட்சம் பெண்கள், உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் கிடைக்காமல் ஒரு ஆண்டாக காத்திருக்கின்றனர். திருமண உதவித்தொகைக்கு காத்திருக்கும் பெரும்பாலான பெண்கள், குழந்தை பெற்று பேறுகால பராமரிப்பு உதவித்தொகையை பெற்றுள்ளனர். ஆனால், இதுவரை திருமண உதவித்தொகை மட்டும் கிடைக்கவில்லை. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கான தங்கத்தை கொள்முதல் செய்ய, முறையாக டெண்டர் விடாததும், நிதிப்பற்றாக்குறையும் முக்கிய காரணம் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருமண உதவித்தொகைக்காக கடந்த ஒரு ஆண்டாக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். திருமண உதவித்தொகை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கடன் வாங்கி திருமணம் முடித்த ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான பெற்றோர், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் தவிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்