SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரிகள் பராமரிப்பில் அரசு அலட்சியம் எதிரொலி: 13 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டது புழல் ஏரி: குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்

2017-07-18@ 01:16:33

சென்னை: பருவ மழை பொய்த்து போனதாலும், தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதாலும், 13 ஆண்டுகளுக்கு பிறகு புழல் ஏரி தண்ணீரின்றி வறண்டு பரிதாபமாக காணப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய  நான்கு ஏரிகள் பூர்த்தி செய்து வந்தன. சுமார் 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகள்  பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை பெய்யும் மழைநீரை நம்பிதான் உள்ளன. இதை வைத்துதான் சென்னை மக்களின் தாகத்தை தணித்து வந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளம், அணைகளை பொதுப்பணித்துறை தூர்வாரி பராமரிக்கவில்லை. இதனால், ஏரியின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், ஏரியின் உள்புற பகுதிகளில் புதர்மண்டி நீர் வரத்துக்கு தடையாக அமைந்தன. இதன் காரணமாக, ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்தன. ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், செம்பரம்பாக்கம் ஏரி உள்பட பல ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 மாவட்டங்களும் தண்ணீரில் தத்தளித்தன.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நிரம்பிய தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நள்ளிரவில் எந்தவித முன்னறிவிப்பின்றி அதிக அளவு திறந்து விட்டதால், கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கானோர் வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்தது. பலர் பலியான சோகம் அரங்கேறியது. பலர் வீடுகளை இழந்து தவித்தனர். வரலாறு காணாத பெய்த மழை நீரை சேமித்து வைக்க அரசு தவறியதால், தற்போது தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகரான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. வடசென்னை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தினமும் பணிக்கு செல்வதுபோல், தெரு தெருவாக காலி குடங்களுடன் தண்ணீரை பிடிக்க அலைக்கின்றனர். இதனால், அவர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், கோடை வெயிலின் கடுமையாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது. மேலும், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அளவு பூண்டி ஏரிக்கு மிகவும் குறைந்த அளவிலேயே வருகிறது. கால்வாய் வழியாக வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் மோட்டார் போட்டு உறஞ்சி எடுக்கின்றனர். இந்த தண்ணீர் திருட்டை தடுக்க தமிழக அதிகாரிகள் எந்தவித துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான புழல் ஏரி, சோழவரம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாளபாளமாக காட்சியளிக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியில் தற்போது வெறும் 21 மில்லியன் கன அடி மட்டுமே நீர் உள்ளது.

பருவமழை பொய்த்து போனதாலும், பூண்டி ஏரியில் இருந்து நீர் வராததாலும், புழல் ஏரிக்கு தண்ணீர் கிடைக்காத பரிபாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் உள்ள தண்ணீரின் அளவை கணக்கெடுக்கும் பகுதியான மதகு திறக்கும் இடமும், ஜோன்ஸ் டவர் பகுதியும் தண்ணீரின்றி வறண்டு விட்டது. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. ஏரியில் இருந்து தண்ணீரை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு அனுப்ப முடியாததால் கடந்த மாதமே தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டது. இந்த பரிதாப நிலை கடந்த 2004ம் ஆண்டு  நிலவியது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை  மக்கள் குடிநீருக்காக தெரு தெரு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

55 கோடி லிட்டர் தினமும் தேவை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடி கொண்டது. இங்கு 87 கன அடி நீர் உள்ளது.  இந்த ஏரியில் இருந்து மட்டும்  சென்னை குடிநீருக்கு தண்ணீர்  எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 நாட்கள்  மட்டுமே ஏரியில் இருந்து  தண்ணீர் எடுக்க முடியும் என்று  கூறப்படுகிறது. தற்போது, சென்னையில் குடிநீர் தேவைக்கு கல்குட்டை, போரூர்  ஏரி தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படுகிறது. இருந்த போதிலும்,  தினமும்  சராசரியாக 55 கோடி லிட்டர் தண்ணீர் தேவை உள்ள நிலையில், அதில்  பாதி கூட  விநியோகிக்கப்படவில்லை. இந்த பற்றாக்குறையை போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ெபாதுப்பணித்துறை-வருவாய்த்துறை  பரஸ்பரம் குற்றச்சாட்டு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், புழல் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளான அன்னை இந்திரா நகர், பம்மதுகுளம், லட்சுமிபுரம், ஏரான்குப்பம், புத்தூர், திருமுல்லைவாயல், ஒரகடம், பானுநகர், முருகாம்பேடு, சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும், அளவுக்கு மீறி மண் எடுக்கப்பட்டுள்ளதாலும், இந்தாண்டு ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது.

ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட துறையினர் வரி வசதிகள் மற்றும் மின் இணைப்பு வசதிகள் வழங்குவதால் அவர்களை அகற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. அனைத்து துறையினரும் (வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி, மின்வாரியம்) ஒத்தழைப்பு தந்தால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். இதேபோல்தான் சோழவரம் ஏரியும் ஆக்கிரமிப்பு மற்றும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு உள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்