SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் ஜனாதிபதி தேர்தல் 2 மணி நேரத்தில் முடிந்தது

2017-07-18@ 00:50:38

சென்னை: ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 234 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 2 மணி நேரத்தில் முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று டெல்லி மற்றும் அனைத்து மாநில தலைநகரிலும் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு நடந்தது. முன்னதாக, டெல்லியில் இருந்து கடந்த 13ம் தேதி சென்னை கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டியை தலைமை செயலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த `ஸ்ட்ராங் ரூமில்’ இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்புடன் எடுத்து வந்து ஓட்டுப்பதிவு நடைபெறும் அறைக்கு கொண்டு வந்தனர். காலை 9.30 மணிக்கு குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு மையத்தில், டெல்லியில் இருந்து வந்திருந்த சிறப்பு தேர்தல் பார்வையாளர் அன்ஷு பிரகாஷ், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் உதவி தேரதல் அதிகாரிகள் பூபதி, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணித்தனர்.

தேர்தல் ஏஜென்டுகளாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, ஓபிஎஸ் அணி சார்பில் செம்மலை ஆகியோர் இருந்தனர். வாக்குப்பதிவு மையத்திற்குள் 4 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தது. முதல் மேஜையில் தேர்தல் அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர். 2வது மேஜையில் தமிழக சட்டமன்ற செயலாளரும், உதவி தேர்தல் அதிகாரியுமான பூபதி இருந்தார். அவர் இருக்கைக்கு எதிரேதான் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. மற்றொரு மேஜையில் தேர்தல் பார்வையாளர், தலைமை தேர்தல் அதிகாரியும், மற்றொரு மேஜையில் தேர்தல் ஏஜென்டுகளும் அமர்ந்திருந்தனர். வாக்குப்பதிவு நடைபெற்ற அறையில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவு மையத்துக்குள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி சீட்டு காட்டிய பின்பே அனுமதிக்கப்பட்டனர். அவர்களது பெயர்கள் பட்டியலில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. அதை காட்டிய பின்பே வாக்களிப்பதற்கான வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர்கள் பேனா, செல்போன் என எதையும் வாக்குபதிவு மையத்துக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள் வழங்கிய பேனாவை பயன்படுத்தியே வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் வாக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டார். அவரை தொடர்ந்து, சபாநாயகர் தனபால் 2வது ஓட்டை பதிவு செய்தார். பின்னர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 3வதாக தனது வாக்கை பதிவு செய்தார். இவர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வாக்களித்தனர். அவர்களை தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். எம்பிக்களை பொறுத்தவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் முன் அனுமதி பெற்று சென்னை தலைமை செயலகத்தில் வாக்களித்தார். இதற்காக அவர் காலை 7.45 மணிக்கே கோட்டைக்கு வந்தார். மேலும் கேரளாவை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா சென்னை, தலைமை செயலகத்தில் வாக்களித்தனர். இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்று அங்கு வாக்களித்தார்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மிகவும் விறுவிறுப் பாக நடைபெற்றது. ஒரு மணி நேரத்திலேயே 120 வாக்குகள் பதிவாகின. வாக்குபதிவு முழுவதும் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது. சரியாக மதியம் 12 மணி அளவில் அதிமுக எம்எல்ஏ செம்மலை வாக்களித்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு முடிவடைந்தது. மொத்தம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 232 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதால் அவர் வாக்களிக்க வரவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கேரளா எம்எல்ஏ அப்துல்லா ஆகிய 2 பேர் வாக்களித்துள்ளதால். மொத்தம் 234 வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 11.57 மணிக்கு செம்மலை இறுதியாக வாக்களித்தார். அதன்பிறகு யாரும் வாக்களிக்கவில்லை. திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி தவிர அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் மற்றொரு வாக்குப்பெட்டிக்கு ஓட்டுக்கள் மாற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்துக்கு வாக்குப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டியை உதவி தேர்தல் அதிகாரிகள் பூபதி மற்றும் சுப்பிமணியன் ஆகியோர் இன்று (நேற்று) இரவு 9.10 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் சென்றார்கள். வாக்கு எண்ணிக்கை 20ம் தேதி டெல்லியில் வைத்து நடைபெறும்” என்றார்.

புதுவை: புதுச்சேரி சட்டசபை கமிட்டி ஹாலில் நேற்று  காலை 10  மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர்  அன்பழகன் முதலாவதாக வாக்களித்தார். தொடர்ந்து சபாநாயகர்  வைத்திலிங்கம் தனது வாக்கை பதிவு செய்தார்.   முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 15 பேரும், திமுக எம்எல்ஏக்கள் 2 பேரும்  வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து 12.30 மணியளவில் எதிர்க்கட்சி தலைவரான  ரங்கசாமி தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வந்து  வாக்குகளை பதிவு செய்தார்.  புதுவையில் ஜனாதிபதி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு துவங்கிய இரண்டரை மணி நேரத்துக்குள் மொத்தமுள்ள 30  எம்எல்ஏக்களின் வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

முதல் ஓட்டுபோட்ட முதல்வர்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: “இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் முதல் வாக்கு அளித்துள்ளேன். யாருக்கு வாக்களித்தேன் என்று தெரிவிக்க கூடாது, இது ரகசிய ஓட்டு. தேர்தல் முடிந்த பிறகு டெல்லிக்கு எடுத்துச் சென்று, எண்ணி யார் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பார்கள். அதிமுகவை பொறுத்தவரை யாருக்கு ஆதரவு என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து அறிவித்திருக்கிறோம். அதன்படி அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள்” என்றார். ஓ.பன்னீர்செல்வம்: இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பாஜ வெற்றி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மகத்தான வெற்றி பெற்று இந்திய குடியரசு தலைவராக பதவியேற்பார்” என்றார். பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழகத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் வாக்காக முதல்வர் வாக்களித்துள்ளார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர் என்றார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்: “எங்களுடைய (மீராகுமார்) வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” என்றார்.
ராமசாமி (காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்): “ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தது. அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். மீராகுமார் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவர் வெற்றி பெறுவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indhiya_raanuvam111

    சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

  • anbalagan_11

    சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • padmavathi_bram_fn

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

  • mayilapore_vaguppu11

    மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

  • AshokKumarsuicide

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்