SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுகை அருகே வாழமங்கலத்தில் சோழர்கால நான்முக சூலக்கல் கண்டுபிடிப்பு

2017-07-04@ 11:03:29

கந்தர்வகோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகேயுள்ள வாழமங்கலத்தில் 3ம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கீரனூர் சிவன் கோயிலுக்கு தேவதானம் வழங்கியதை உறுதிப்படுத்தும் நான்முக சூலக்கல் புதுகை  தொல்லியல் ஆய்வுக்கழக கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுகை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது: தேவதானம் வழங்கப்பட்ட நிலங்களில் இறை அடையாளங்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு தானமாக மன்னர்கள் நிலங்களை வழங்கும்போது, அந்நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக வைணவ கோயிலுக்குரிய நிலங்களில் சங்கு, சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும், சமணப்பள்ளிக்குரிய நிலங்களில் முக்குடைக்கல்லும், சைவக்கோயிலுக்குரிய நிலங்களில்  திரசூலக்கற்களும் நடப்படுவது வழக்கம்.

ராஜராஜன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிலம் அளக்கப்பெற்று நிலத்திற்கு எல்லைக்கற்கள் நடப்பட்டதை கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. அதேபோல் பரகேசரி வர்மன் 3ம் குலோத்துங்க சோழன் காலத்திலும் இந்நடைமுறை பின்பற்றபட்டதோடு, ஒரு சில கிராமங்களில் ஊரார்களிடம் விவசாய நிலங்கள் பெறப்பட்டு அவை கோயில்களுக்கு வரி நீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோயிலின் தினசரி வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  வாழமங்கலம் கிராமத்தின் வயல்வெளியில் சாய்ந்த நிலையில் உள்ள சூலக்கல்லின் நான்கு பக்கங்களிலும் சூலக்குறிகள் உள்ளன. இரண்டு பக்கத்தில் சூலக்குறியுடன் காளையும் உள்ளது. இது சிவன் கோயிலுக்கு தேவதானம் வழங்கப்பட்ட இடத்தைக் குறிக்கவே நடப்பட்டிருக்கவேண்டும்.

3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி 118586ல் வாளுவமங்கலம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வாழமங்கலம் ஊரவர் சபையினர் கீரனூர் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை வழங்கிய செய்தி அக்கோயில் கல்வெட்டில் உள்ளது. மேலும் வாழமங்கலம் பிள்ளையார் கோயில் அருகே சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட துண்டுக்கல்வெட்டில் “குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு“ என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழமங்கலம் வயலில் கண்டுபிடிக்கப்பட்ட சூலக்கல் 3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கீரனூர் சிவன் கோயிலுக்கு தேவதானம் வழங்கப்பட்ட இடத்தின் எல்லைக்கல் என்பது உறுதியாகிறது என்றார். இந்த கள ஆய்வின்போது தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் முத்துக்குமார், கஸ்தூரிரங்கன், வாழமங்கலம் கிராமத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் பாண்டியன், சங்கர்  மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்