SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யார், யார் மீது வழக்குபதிவு? : மு.க.ஸ்டாலின் கேள்வி

2017-06-20@ 01:00:08

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் 18-04-2017 அன்றே அறிக்கையை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இதுபற்றி முதலமைச்சர், ’எனக்குத் தெரியாது’, என்று பதில் சொல்கிறார். இதில் இருந்தே, இது ஒரு செயலற்ற ஆட்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 ஆணையர்கள் கொண்ட முழு கமிஷன் உத்தரவின் படி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் சோதனை நடந்தது. அந்தச் சோதனையில் ரொக்கமாக ₹5 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் எந்தெந்த மந்திரிகள், எத்தனை கோடிகளை கொடுத்தார்கள் என்ற புள்ளி விவரம், ₹89 கோடிக்கான ஆதாரங்கள் கொண்ட பட்டியல் ஆகியவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து, இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ரெய்டின் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர், டிடிவி.தினகரன் ஆகியோர் பெயர்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கிறது.

அதுமட்டுமல்ல அவர்கள் மீது இபிகோ 117பி, பிரிவின் கீழ் வழக்குப்பதிய 18-04-2017 அன்று மாநில தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிக்கு உத்தரவிட்டு இருக்கிறது.  அந்த உத்தரவுடன் வருமான வரித்துறையின் ரெய்டு பற்றி 34 பக்க அறிக்கையும் இணைக்கப்பட்டு, தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.  அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வியை தான் அவையில் கேட்டேன்.   இதற்கு முதல்வர், “புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது”, என்று ஒரே ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டார்.
நான் கேட்கின்ற கேள்வி, யார் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது? என்ன வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது? எப்போது இந்த உத்தரவு வந்தது? எந்த தேதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? இவற்றுக்கான விளக்கங்களை முதல்வர் சட்டமன்றத்தில் சொல்லவில்லை.
முதல்வரின் பதில் எங்களுக்கு திருப்தியை தரவில்லை. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை தான். அந்தக் காவல்துறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கையில் உள்ளது. ஆனால், வழக்கில் முதல் குற்றவாளி யாரென்றால் அதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் இருக்கிறார்.

எனவே, அவரைப்பற்றி அவரே விசாரிக்க முடியுமா? அவர் மட்டுமல்ல, அமைச்சர்கள் 9 பேரும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் பல அமைச்சர்கள் மீது வழக்குகள் போட உத்திரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை எல்லாம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றால், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டுள்ள முதல்வரும், மற்ற அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தால், நியாயமான விசாரணை நடைபெறாது.  ஆகவே, அவர்கள் அனைவரும் உண்மையாகவே குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமெனில், முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட 9 அமைச்சர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள்:
மனுதாரர் தான் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, தேர்தல் ஆணையம் அவர்கள் பெயர்களை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யச் சொல்லவில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்து இருக்கிறாரே?

தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற அந்த உத்தரவை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவர் இதுபற்றி ஏன் முறையாக வெளியில் இதுவரை சொல்லவில்லை. முதலமைச்சருடன் ஏன் கலந்து பேசவில்லை. ஒருவேளை இதையெல்லாம் மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறதா. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இதில் கூட்டு சேர்ந்து மூடி மறைக்கும் வேலைகளில் ஈடுபட்டாரா? இந்த கேள்விகளை தான் நாங்கள் முன் வைக்கிறோம். பாஜவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்த நிலை தொடர்ந்தால் திமுக காணாமல் போய்விடும் என்று சொல்லி இருக்கிறாரே? யார் காணாமல் போகப்போகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விமான நிலையங்களில் பேட்டி கொடுப்பதற்காகவே, ஒரு மத்திய அமைச்சரை போட்டு வைத்திருக்கிறார்கள். அதில் புகழ்பெற்றவர் பொன்.ராதாகிருஷ்ணன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-06-2017

  26-06-0217 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-06-2017

  25-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • poRURlaketyugbyvfgy

  போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

 • 20YEARfraewelllsjhip

  இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

 • 24-06-2017

  24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்