SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வழக்குபதிவு

2017-06-20@ 00:59:58

* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்  
* மு.க.ஸ்டாலின் பேச்சு நீக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்து வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள விவகாரம் தொடர்பாக  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
இது தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று சபாநாயகர் தனபால் அறிவித்ததற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முழுவிவாதம் நடத்த வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலினை பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். மு.க.ஸ்டாலின்: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்றதாக கூறி இந்திய தேர்தல் ஆணையம் (09.04.2017) தேர்தலை ரத்து செய்தது. இதையடுத்து வருமான வரித் துறையினர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வீடு மற்றும் 12 இடங்களில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். சில அமைச்சர்கள் மூலம் பணப் பட்டுவாடா நடந்ததாக பட்டியலும் வெளியானது. சபாநாயகர் தனபால்: தேர்தல் ஆணையம் கொடுத்ததை மட்டும் சொல்லுங்கள்.

மு.க.ஸ்டாலின்: வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில் சிலர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக அரசு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததா என்பதை விளக்க வேண்டும். காவல் துறை முதல்வரின் கையில் உள்ளது. நியாயமான விசாரணை நடைபெறுமா? முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்ளுவோம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர். அதனால் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால்... (தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது) (அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் என்ன பேச முயன்றாரோ அதே வார்த்தையை சபாநாயகர் தனபால் கூறினார். இதை கேட்ட திமுக உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு பேச அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.) சபாநாயகர் தனபால்: எதிர்க்கட்சி தலைவர் பேசிய போது, தேர்தல் ஆணையம் சிலரது பெயர்களை சொன்னதாக கூறினார். ஆனால் தேர்தல் ஆணையம் யார் பெயரையும் சொல்லவில்லை. அதனால் தான் எதிர்க்கட்சி தலைவர் சொன்ன வார்த்தைகள் நீக்கப்பட்டது.

கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்): தேர்தல் ஆணைய உத்தரவுபடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி சட்டப்பேரவையில் சொல்ல வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் தேர்தலை தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை செய்தபோது கிடைத்த சில ஆவணங்கள் தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தற்போது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

(எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் மீண்டும் பேச அனுமதி கேட்டனர்). சபாநாயகர் தனபால்: வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கூறி விட்டார். அதனால் உட்காருங்கள். மு.க.ஸ்டாலின்: இதே முதல்வர் நேற்று, இதுபற்றி எனக்கு தகவல் வரவில்லை என்றார். ஆனால் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார். (தொடர்ந்து அவர் கூறியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது) இதையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்

திமுகவுக்கு சபாநாயகர் கோரிக்கை

திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது திமுகவினர் மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 17 வழக்குகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது சம்பந்தமானதாகும். திமுகவினர் சட்டமன்றத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி அதன்மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து 4 ஆண்டு அதிமுக ஆட்சியே நீடிக்கும். சபாநாயகர் தனபால்: கடந்த 14ம்தேதி சட்டமன்றம் கூடியது முதல் தொடர்ந்து திமுகவினர் பத்திரிகைகளில் வந்த ஒரு பிரச்னை குறித்து  கடந்த 3 நாளாக பேச முயன்று வருகின்றனர். ஆனால் நான் பத்திரிகைகளில் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து பேசக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளேன்.

எந்த பேரவை கூட்டத்திலும் பத்திரிகை செய்திகளை ஆதாரமாக வைத்து பேரவையில் பேச அனுமதி அளிக்கப்பட்டதில்லை. அதே நடைமுறையை தான் நானும் பின்பற்றுகிறேன். எதிர்க்கட்சி தலைவர் கடந்த 16ம்தேதி ஆதாரமாக அவரது சார்பில் பிச்சாண்டி எம்எல்ஏவிடம் ஒரு குறுந்தகடு (சிடி) கொடுத்து அனுப்பினார். அதை நான் போட்டு பார்த்தேன். அதுவும் எலக்ட்ரானிக் மீடியாவில் வந்த ஒரு செய்தியை தான் அவர் ஆதாரமாக கொடுத்துள்ளார். குறுந்தகட்டில் பேசிய உறுப்பினர் கூட அது பற்றி நான் பேசவில்லை என்று மறுத்துள்ளார். அதுவும் பத்திரிகையில் செய்தியாக வந்துள்ளது. அதனால் எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த செய்தியை பேரவையில் விவாதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறேன். இனி வரும் நாட்களிலும் அதுபற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2017

    18-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்