SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டி மசோதா பேரவையில் நிறைவேறியது

2017-06-20@ 00:15:39

சென்னை : தமிழக சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நேற்று  குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மின்சாரத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் மானியக் கோரிக்ைக மீதான விவாதம் சட்டப் பேரவையில் நேற்று நடந்தது. அதற்கு பிறகு மாலை 4 மணிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நிறைவேற்றுவதற்கான மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். அதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு மற்ற கட்சியினரிடம் சபாநாயகர் கருத்து கேட்டார். அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது: திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக): மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் சட்ட முன்வடிவை திமுக ஆதரிக்கிறது. ஆனால் பொதுமக்கள் வணிகர்கள் அச்சத்தை போக்க உரிய கால அவகாசம் வழங்கி, யாரும் பாதிக்காத வகையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இந்த சட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக மத்திய மாநில அரசுகள் இந்த சட்டம் குறித்து ெபாதுமக்கள், வணிகர்கள் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி எந்த ஆலோசனையும் பெறவில்லை.

தமிழகத்தில் கடந்த 2006-2011 ஆண்டில் திமுக அரசு ‘வாட்’ என்னும் மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரையும் சேர்ந்த குழு அமைத்து அவர்களிடம் கருத்து கேட்டது. தமிழகத்தில் 589 பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரிசட்டத்தில் அந்த பொருட்களுக்கு 5, 12, 18, 28 சதவீதங்களில் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பல  குளறுபடிகள் ஏற்படும். அதை நீக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிக் கவுன்சில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், ஜூலை 1ம் தேதி இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் ஒரு ஆண்டுக்கு பயிற்சி ஆண்டாக அனுமதிக்க வேண்டும். விஜயதாரணி(காங்கிரஸ்): பல்வேறு பொருட்களுக்கு 18 சதவீதம் என்ற அளவில் இருந்த வரிகள் இனி 28 சதவீதம் என்ற அளவுக்கு உயரும். 5 ஆண்டுக்கு இழப்பீடு தருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இது போதாது. உயர்ந்த வரிகளை குறைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தமிழகத்தில் சோதனை முயற்சியாக 2 ஆண்டுக்கு கொண்டு வர வேண்டும். தவறு செய்தால் சிறை தண்டனை என்று உள்ளது. அதனால் வணிகர்களை காப்பாற்ற வேண்டும்.

கடையநல்லூர் அபுபக்கர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்திய பிறகு பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாக அதை தடுக்க முன்னெச்சரிக்ைக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின்(எதிர்கட்சி தலைவர்): சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த சட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்: இந்தியா முழுவதும் ஒரே வரி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, மாநில நிதி தன்னாட்சியை மீறாத வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்ததின் அடிப்படையில், இந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதில் மாநில நிதி தன்னாட்சிக்கு பிரச்னை இல்லை. முன்பு ஒரு பொருளுக்கு வரி விதிக்கும் போது பல கட்டங்களில் வரி விதிக்கப்படும். இப்போது சரக்கு மற்றும் சேவை வரி என்ற ஒரே முறைதான் வரி விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரிக்கான கவுன்சில் இத்துடன் முடிவு பெறக்கூடியது அல்ல. இந்த சட்டத்தை அமல்படுத்தும் ேபாது எதிர் காலத்தில் யாருக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கும் அதை எடுத்துச் சொல்லி மறு ஆய்வு செய்யப்படும். வணிகர்கள் உள்ளிட்ட யாரும் பாதிக்கும் வகையில்இந்த அரசு செய்யவில்லை.

அமைச்சர் வீரமணி: நாட்டில் 25 மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்ப்பது போல பேசினார்கள். இப்போது பேசவே மறுக்கின்றனர். சரக்கு மற்றும் சேவை வரிக் கவுன்சிலில் தமிழக அரசின் சார்பில் நமது சாதக பாதகமான கருத்தை தெரிவித்துள்ளோம். பிற கட்சிகளின் கருத்துகளும் வலியுறுத்தப்படும். அதனால் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்ட முன்வடிவை நிறைவேற்றித் தர வேண்டும். ஸ்டாலின்: இந்த சட்ட முன்வடிவை குரல் வாக்கெடுப்பு மூலம்தான் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதனால் அதை கண்டித்து திமுக வெளி நடப்பு செய்கிறது.  திமுகவினர் சட்டப் பேரவையை விட்டு வெளியில் சென்றனர். பின்னர் சரக்கு மற்றும் சேவை வரி சட்ட முன்வடிவை சபாநாயகர் தனபால், குரல் வாக்கெடுப்பு நடத்தினார். ஆதரவு அதிகம் இருப்பதாக அறிவித்து சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நிறைவேறியதாக அறிவித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-06-2017

    26-06-0217 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-06-2017

    25-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • poRURlaketyugbyvfgy

    போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

  • 20YEARfraewelllsjhip

    இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

  • 24-06-2017

    24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்