SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனாதிபதி தேர்தல் பா.ஜ. வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

2017-06-20@ 00:14:45

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு திரட்டியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் நாளை மறுதினம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. 20ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில், மத்தியில் ஆளும் பாஜ தரப்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. பாஜ வேட்பாளர் இந்துத்துவா கொள்கை கொண்டவராக இருந்தால், அவரை எதிர்த்து பொது வேட்பாளரை களத்தில் நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என பாஜ உறுதி அளித்தது. அதற்காக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். ஆனால், பாஜ வேட்பாளரை அறிவிக்காமல் எந்த பேச்சுவார்த்தைக்கும், ஆதரவுக்கும் இடமில்லை என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்தன. இந்நிலையில், பாஜ நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, ‘‘ஜனாதிபதி வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்’’ என்று அறிவித்தார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஆதரவு கேட்டார். மேலும், ஆந்திரா, தெலங்கானா, பீகார், தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி தொலைபேசியில், பாஜ வேட்பாளர் குறித்த அறிவிப்பை தெரிவித்து ஆதரவு கேட்டார். இதுதொடர்பாக நாளை மறுதினம் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பாஜ வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அதே நேரத்தில், பிரதமர் மோடி வரும் 24ம் தேதி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதால், அதற்கு முன்பாக வரும் 23ம் தேதி ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்
என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து உடனடியாக டெல்லிக்கு விரைந்துள்ளார் ராம்நாத் கோவிந்த். முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஜ்பவன் சென்று ராம்நாத் கோவிந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். பாஜ ஜனாதிபதி வேட்பாளராக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு உள்ளிட்டோரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என செய்திகள் கசிந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

வக்கீல் பணியில் 16 ஆண்டு

* உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத்தில் 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தவர் ராம்நாத் கோவிந்த்.
* கான்பூர் பல்கலையில். இளங்கலை வணிகவியல் மற்றும் சட்டம் பயின்றுள்ளார்.
* உத்தரப் பிரதேசத்திலிருந்து கடந்த 1994ம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த், 12 ஆண்டாக 2006ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
* பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.
* லக்னோ அம்பேத்கர் பல்கலைக்கழகம், கொல்கத்தா ஐஐஎம் வாரிய உறுப்பினராக பதவி வகித்தவர்.
* கோவிந்த், 1998 முதல் 2002 வரை பாஜ தலித் மோர்சா தலைவராக பதவி வகித்தார். பாஜ கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டவர்.
* கடந்த 2002ல் ஐநா சபையில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்று உரையாற்றி உள்ளார்.
* கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
* சட்டம் பயின்றுள்ள அவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1977 முதல் 1979 வரை மத்திய அரசு வக்கீலாக பணியாற்றி உள்ளார். டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 1993ம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் வக்கீலாக பல்வேறு வழக்கில் வாதாடியுள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-06-2017

  26-06-0217 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-06-2017

  25-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • poRURlaketyugbyvfgy

  போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

 • 20YEARfraewelllsjhip

  இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

 • 24-06-2017

  24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்