SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதிப் போட்டியில் இந்தியா ஏமாற்றம்: முதல் முறையாக பாகிஸ்தான் சாம்பியன்: முகமது ஆமிர் அபார பந்துவீச்சு

2017-06-19@ 01:40:12

லண்டன்: நடப்பு சாம்பியன் இந்திய அணியுடனான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக மினி உலக கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த மினி உலக கோப்பை தொடரின் பைனலில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. லண்டன் கென்னிங்டன் ஓவல் ஸ்டேடியம் நிரம்பி வழிந்த நிலையில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ரம்மான் ரயீஸ் நீக்கப்பட்டு வேகப் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக அசார் அலி, பகார் ஸமான் களமிறங்கினர். தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடிய இருவரும், பீல்டிங்கில் இந்திய வீரர்கள் செய்த தவறுகளால் சுதாரித்துக் கொண்டு ரன் குவித்தனர்.

இரண்டு ரன் அவுட் வாய்ப்புகள் கை நழுவிய நிலையில், பூம்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்த பகார் ஸமான் அந்த பந்து ‘நோ பால்’ ஆக அமைந்ததால் தப்பிப் பிழைத்தார். இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கொடுத்த உற்சாகத்துடன் இந்தியப் பந்துவீச்சை பதம் பார்த்த இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23 ஓவரில் 128 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அசார் அலி 59 ரன் விளாசி (71 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து பகார் ஸமானுடன் பாபர் ஆஸம் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். சதம் விளாசிய பகார் ஸமான் 114 ரன் எடுத்து (106 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஹர்திக் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சோயிப் மாலிக் 12, பாபர் ஆஸம் 46 ரன் (52 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் முகமது ஹபீஸ், இமத் வாசிம் இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, பாகிஸ்தான் ஸ்கோர் எகிறியது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. ஹபீஸ் 57 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), இமத் வாசிம் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிர்ச்சி தொடக்கம்: இதைத் தொடர்ந்து 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். முகமது ஆமிர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே ரோகித் டக் அவுட்டாகி வெளியேற இந்தியாவுக்கு ஆரம்பமே பேரிடியாக இருந்தது. அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி 5 ரன் எடுத்து ஆமிர் வேகத்தில் ஷதாப் கானிடம் பிடிபட்டார். சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய தவானும் 21 ரன் எடுத்து ஆமிர் பந்துவீச்சில் பலியானார். அனுபவ வீரர்கள் யுவராஜ், டோனியாவாது அணியை சரிவில் இருந்து மீட்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், யுவராஜ் 22 ரன் (31 பந்து, 4 பவுண்டரி), டோனி 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, இந்தியா 13.3 ஓவரில் 54 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து அதளபாதாளத்தில் வீழ்ந்தது.கேதார் ஜாதவ் 9 ரன்னில் வெளியேறினார்.

இந்த நிலையில், ஹர்திப் பாண்டியா - ரவீந்திர ஜடேஜா ஜோடி 7வது விக்கெட்டுக்கு கவுரம் காக்க போராடியது. அச்சமின்றி அடித்து விளையாடிய ஹர்திக் சிக்சர்களாக பறக்கவிட்டு பாகிஸ்தான் தரப்பில் பதற்றத்தை ஏற்படுத்தினார். அவர் 32 பந்தில் அரை சதம் விளாச, இந்தியாவுக்கு சற்றே நம்பிக்கை துளிர்த்தது. மிரட்டலாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்திக் 76 ரன் எடுத்து (43 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஜடேஜா 15 ரன் எடுக்க, அஷ்வின் மற்றும் பூம்ரா 1 ரன்னில் வெளியேறினர். இந்தியா 30.3 ஓவரிலேயே 158 ரன்னுக்கு பரிதாபமாக சுருண்டது. பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக மினி உலக கோப்பையை தட்டிச் சென்றது. சாம்பியன் பட்டத்தை கோஹ்லி & கோ தக்கவைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள், இந்த தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்