SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டி முடித்து பல ஆண்டுகளாகிறது: சமூக விரோத செயல்களின் கூடாரமான திறக்கப்படாத புதிய அரசு கட்டிடங்கள்

2017-05-19@ 20:51:18

தென்சென்னை நகரின் இதயப் பகுதியான சைதை தொகுதியில் மக்களின் தேவைக்காக, லட்சக்கணக்கான மதிப்பீட்டில் பல அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டும் இன்றுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் வரிப்பணம்தான் வீணாகி வருகிறது என பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். ஆனால், இவற்றை திறப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். தென்சென்னை மக்களின் இதயப் பகுதியாக சைதாப்பேட்டை விளங்கி வருகிறது. இத்தொகுதியில் அடங்கிய பல்வேறு பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு மறைமலையடிகள் பாலம் முதல் தி.நகர் செல்லும் சாலை வரை எந்நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும்.

இங்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை ஒட்டி, பல ஏக்கர் பரப்பளவிலான தாடண்டர் நகரில் மட்டுமே ஏராளமான அரசு அலுவலர் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு மட்டுமே சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நீண்ட காலமாக மக்களின் பயன்பாட்டுக்காக சமுதாய நலக்கூடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் அரசு ஊழியர் கூட்டுறவு நியாயவிலை கடைகள் பழுதடைந்த நிலையில் இயங்கி வந்தன. இவற்றை அகற்றிவிட்டு, அங்கு பல லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது.

எனினும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்புதிய கட்டிடங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை. மேலும், இப்பகுதியில் மெட்ரோ ரயில்பாதை பணிகள் நடைபெறுவதால், இங்குள்ள தார் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இரவு நேரங்களில் வருபவர்கள் கீழே விழுந்து அடிபட்டு செல்கின்றனர். இதேபோல், வடசென்னை புளியந்தோப்பு, வஉசி நகரில் மாநகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். எனினும், அந்த சமுதாயக்கூடம் இன்றுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் உருக்குலைந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை தற்போதைய முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவற்றில் பல பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை. இதனால் அந்தந்த பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமூகநலக்கூடம், ஆரம்ப சுகாதார மையம், பன்னோக்கு மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் பொலிவிழந்து, சமூகவிரோத செயல்களின் கூடாரமாக மாறி பாழடைந்து வருகிறது. இதனால் மக்களின் பெரும்பான்மையான வரிப்பணம்தான் வீணாகிக் கொண்டிருக்கிறது’ என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘சென்னை நகரில் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சமூகநலக் கூடம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். எனினும், அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து தடையில்லா சான்று இன்னும் வரவில்லை. இதேபோல் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பொதுப்பணி துறை அலுவலர் விடுதிகளில் இன்னும் மின் இணைப்பும் பல்வேறு துறைகளில் இருந்து தடையில்லா சான்றும் வழங்கப்படவில்லை. அவை கிடைத்ததும் விரைவில் திறக்கப்படும்’ என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

‘இதேபோல் ஒவ்வொரு அரசு கட்டிடத் திறப்புக்கும் நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், அக்கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை என்னாவது? மக்களின் அவசிய, அவசர தேவை எது என அரசு அதிகாரிகள் உணர்ந்து, அவற்றை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த முன்வருவார்களா?’ என்று சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். இதுபோன்ற தாமதங்களுக்கு இனியாவது விடை கிடைக்குமா?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • commissioner_chni_open

  சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

 • vina_prasanna_1

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

 • KanthaShashtifestival

  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

 • naagai_depott

  பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

 • 20-10-2017

  20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்