சிறப்பு காவல் இளைஞர் படை : ஜெ. அறிவிப்ப

Date: 2012-10-29@ 11:06:38

சென்னை: 'சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் குற்றங்களை தடுக்கவும், தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை என்ற பெயரில் புதிதாக சிறப்பு படை அமைக்கப்படும். இதற்காக 10 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' என்று சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபை இன்று கூடியதும் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:

சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்ற நிகழ்வுகள் கண்டுபிடிப்பு, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, போக்குவரத்தை சீர்படுத்துவது, மீட்பு பணி, விழா காலங்களில் கூட்ட நெரிசலை முறைப்படுத்துவது என பல்வேறு பணிகளை தமிழக காவல் துறை ஆற்றி வருகிறது. இத்துறையில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13,629. இது, 635 மக்களுக்கு ஒரு காவல் அலுவலர் என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. இந்த பற்றாக்குறையை சீர் செய்ய, காலியாக உள்ள 12,208 காவலர் பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப உத்தரவிட்டேன்.

அதன்படி, காவலர்களுக்கான எழுத்து தேர்வை ஜூன் 24ல் தேர்வாணையம் நடத்தியது. ஆகஸ்ட் மாதம் உடல் தகுதி தேர்வு நடத்தி, இம்மாதம் 12ம் தேதி தேர்வானோர் பட்டியலை வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள 12,162 காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு 7 மாதம் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் பணியில் சேர்க்கப்படுவார்கள். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள அளவுகோல்களின்படி 19,096 காவல் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு காவல் துறை ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலவற்றில் அவர்களுக்கு துணையாக ஒரு துணை படையை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

துணை படை அமைப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை கட்டுப்படுத்துதல், குற்ற புலனாய்வு போன்ற காவல் பணிகளில் தற்போதுள்ள காவலர்களை முழுமையாக ஈடுபடுத்த இயலும். இதற்கு வழி செய்யும் வகையில், 'தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' என்ற ஒரு சிறப்பு படை உருவாக்கப்படும். இந்த படையில் உறுப்பினர் சேர்ப்புக்கு விளம்பரம் செய்யப்படும். மாவட்ட வாரியாக காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் தேர்வு நடத்தப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் தேர்வில் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்கள் அந்தந்த மாவட்டங்களில் காவல் இளைஞர் படை உறுப்பினர்களாக பணி அமர்த்தப்படுவர்.

அவர்களுக்கு பயிற்சி காலத்திலும், பணி காலத்திலும் மாதம் மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும்.  அவர்கள் காவலர்களுக்கான சிறப்பு அங்காடிகளில் அளிக்கப்படும் வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். தவிர, அரிசி, கோதுமை, சர்க்கரை, மைதா, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும். ஓராண்டு திருப்திகரமாக பணி நிறைவு செய்யும் சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர்கள், காவல் துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் சேர்த்து கொள்ள கூடிய தகுதி பெறுவர். ஆண்டுதோறும் காவலர் நிலையில் ஏற்படும் காலி இடங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இந்த சிறப்பு காவல் இளைஞர் படையில் இருந்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ஒதுக்கப்படும்.

சீருடை பணியாளர் தேர்வாணையம் இதற்கென ஆண்டுதோறும் சிறப்பு தேர்வு நடத்தும். தேர்வில் வெற்றி பெறாதவர்கள், 40 வயது வரை தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் படையிலேயே பணியாற்றுவர். அதற்கு மேல் அவர்களுக்கு, தமிழக அரசே வேறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த ஆண்டில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கென மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு 2013ம் ஆண்டு ஜனவரியில் பயிற்சி அளிக்கப்பட்டு இந்த நிதியாண்டுக்குள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 2013 -2014ம் நிதியாண்டில் 15,000 பேர் இந்த இளைஞர் படைக்கென தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு ஆண்டுதோறும் தேவைக்கேற்ப 50,000 பேர் வரை சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

sms spy app click spy apps free

Like Us on Facebook Dinkaran Daily News