SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட ஆற்காடு டெல்லிகேட்

2017-03-26@ 01:29:08

வேலூர்: இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழிகோலிய ஊர் ஆற்காடு. பாலாற்றின் தென்கரையில், வேலூரில் இருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஊர் அரிசிக்கும், வர்த்தகத்துக்கும், மொகாலய மக்கன்பேடா இனிப்புக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஆற்காட்டில் கோட்டை இருந்ததற்கான அடையாளமாக இன்று மிச்சமிருப்பது டெல்லிகேட் பகுதியாகும். இந்த ஆற்காட்டை தலைநகராக கொண்டே மொகலாய சாம்ராஜ்யத்தின் கர்நாடக பகுதிகளின் பிரதிநிதியாக ஆற்காடு நவாபுகள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது மைசூரை உடையார் அரச வம்சமும், ஐதராபாத் பகுதியை நிஜாம்களும், திருவிதாங்கூரை கேரள வர்மாக்களும் ஆட்சி செய்து வந்தனர்.அப்போது சென்னையில் வர்த்தகம் செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மெல்ல மெல்ல இந்திய சமஸ்தானங்களில் நடந்து வந்த குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் இறங்கினர். அதேபோல் அவர்களுக்கு போட்டியாக பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டச்சு கிழக்கிந்திய கம்பெனிகளும் களம் இறங்கின. அப்படியொரு வாரிசுரிமை போட்டிதான் ஆற்காட்டில் நடந்தது. கி.பி.1749ல் ஆம்பூரில் நடந்த போரில் ஆற்காடு நவாப் அன்வருதீன்கான் மரணமடைந்தார். இதையடுத்து ஆற்காடு நவாப் சிம்மாசனத்தை பிடிப்பதில் முகமதுஅலி, சந்தாசாகிப் இடையே பங்காளி சண்டை உருவானது. இந்த போட்டியில் அன்வருதீனின் இளைய மகன் முகமதுஅலி திருச்சியில் நவாபாக முடிசூட்டிக் கொண்டார்.

திருச்சியை தவிர்த்து மற்ற கர்நாடக பகுதிகள் சந்தாசாகிப், முசாபர்ஜங் வசமாயின. சந்தாசாகிப்புக்கு பிரஞ்சுகாரர்களும், முகமது அலிக்கு ஆங்கிலேயர்களும் துணை நின்றனர். கி.பி 1750ல் திருவதிகையில் நடந்த போரில் பிரெஞ்சு படை முகமதுஅலியையும், ஆங்கிலேயர்களையும் தோற்கடித்தது. அதே ஆண்டில் யுத்தநேந்தல் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முகமதுஅலி, ஆங்கிலேயர் மற்றும் ஐதராபாத் நிஜாம் நசீர்ஜங் ஆகியோரின் படைகளை பிரெஞ்சு படைகள் தாக்கி வெற்றி கண்டன. இந்த போரில் திருச்சி கோட்டைக்கு தப்பியோடிய முகமதுஅலி அங்கு ஒளிந்து கொண்டார். இதனால் பிரஞ்சு படைகள் உதவியுடன் திருச்சியை முற்றுகையிட சந்தாசாகிப் அங்கு விரைந்தார். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்தது. இதையடுத்து ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படை 500 ஆங்கில படைவீரர்கள், 300 உள்ளூர் சிப்பாய்களுடன் ஆற்காட்டை 53 நாட்கள் முற்றுகையிட்டு அதை கைப்பற்றியது.

இதற்காக கி.பி 1751ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ராபர்ட் கிளைவின் படைகள் காஞ்சி நகரை விட்டு கிளம்பிய போது, காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதை பொருட்படுத்தாத ராபர்ட் கிளைவின் படைகள் சந்தாசாகிப்பின் ஆற்காடு கோட்டையை நோக்கி ஆவேசத்துடன் முன்னேறின. ஆங்கிலேயர்களின் கடும் தாக்குதலால் நவாப்பின் வீரர்கள் சிதறி ஓடினார்கள். ஆங்கிலேயர்கள் சந்தாசாகிப்பின் வீரர்களை ஆற்காடு தெருக்களில் விரட்டியடித்தார்கள்.
முகமதுஅலிக்கும் சந்தாசாகிப்பிற்கும் நடந்த உரிமை போரின் இறுதியில், கி.பி 1751ம் ஆண்டு ராபர்ட்கிளைவ் ஆற்காடு ஆலம்பானா கோட்டையை கைப்பற்றினார். இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட வடக்கே நெல்லூர் வரை பிரிட்டிஷாரின் வசம் வந்தது. இரவில் கிடைத்த இந்த வெற்றி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் அமைவதற்கு வித்திட்டது. இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சி அமைவதற்கு காரணமான வெற்றியின் நினைவாக வடக்கில் மொகலாய சாம்ராஜ்யம் அமைந்த டெல்லியை நோக்கி அதை கைப்பற்றுவதுதற்கான தொடக்கம் என்பதை காட்டவும் டெல்லி கேட் என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டது.

பாலாற்றங்கரையில் அமைந்துள்ள டெல்லி கேட் என்னும் மிக உயர்ந்த நுழைவாயிலே, ஆற்காடு கோட்டையின் பிரதான நுழைவாயிலாக விளங்கியது. இந்த டெல்லிகேட் இரண்டு தளங்களை கொண்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள நுழைவாயில் இஸ்லாமிய வளைவு பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வாயிலின் இருபுறமும் காவலர்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளன. நுழைவு வாயிலின் வெளிப்புறம் பாலாற்றை ஒட்டியுள்ள பகுதியிலும் சிறு சிறு அறைகள் இருந்ததற்கான தடயங்களும் உள்ளன. வாயிலின் மேல்தளத்தில் ஓர் அறை உள்ளது. இது எதிரி படைகள் வருவதை வேவுபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது டெல்லி கேட் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2018

  11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • MadridSantaClausMarathon

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

 • NorthCarolinaStorm

  அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

 • kumbamela

  12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

 • hariyanaperison

  ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்