SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை நகர சாலைகளில் தடுப்புகளை தாண்டி மக்கள் ‘சாகசம்’: திகைக்கும் வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாத போலீஸ்

2017-03-20@ 21:38:51

சென்னை: சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள்தொகை பெருக்கமும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளில் என்னதான் தடுப்பு சுவர் எழுப்பினாலும், தற்காலிக இரும்பு தடுப்புகளை வைத்தாலும், அவற்றை தாண்டி செல்வதில் சென்னை நகர மக்கள் சாகசம் புரிந்து வருகின்றனர். இதனால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் திகைத்து நின்றுவிடுகின்றனர். இவற்றை அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் உள்ள போலீசாரும் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக, சென்னை கோயம்பேடு ரவுண்டானா மற்றும் பேருந்து நிலையம் அருகே எந்நேரமும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும்.

அங்கு எதிர்ப்புறம் மாநகர பேருந்து ஏறுவதற்காக, ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளை தரதரவென இழுத்தபடி வாகன நெரிசலுக்கு இடையே ஓடி வருகின்றனர். பின்னர் அங்குள்ள சென்டர் மீடியன் சுவரில் ஒரு பெண் ஏறி நின்றபடி, தனது குழந்தைகளையும் மற்ற பெண்களையும் தூக்கி, மறுபக்கம் இறக்கிவிடுகிறார். பின்னர் அனைவரும் வேகமாக வரும் வாகனங்களுக்கு கைகாட்டி நிறுத்தியபடி சாலையைக் கடந்து செல்கின்றனர். இதேபோல், அங்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு தம்பதியும் சாலையைக் கடக்க முற்பட்டனர். கைக்குழந்தையை வைத்திருந்த நபர், சாலையின் மறுபக்கம் நின்றபடி தனது மனைவியை சென்டர்மீடியனில் ஏறுவதற்கு உதவி செய்தார். பின்னர் இருவரும் கைக்குழந்தையுடன் சாலையை கூலாக கடக்கின்றனர்.

இதேபோல், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தின் சுற்றுச்சுவரில் இரும்பு தடுப்பு கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, காய்கறி மற்றும் பழங்கள் வாங்க செல்லும் சிறு வியாபாரிகள் சுற்றி செல்வதற்கு பயந்து, அந்த குறுகிய கம்பி இடைவெளியில் தங்களது உடலை உள்ளே சென்று வருகின்றனர். ஒருசிலர் தங்கள் மூட்டைகளை மதில்சுவரில் வைத்துவிட்டு, தாங்களும் சுவரேறி குதித்து சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும்போது, இரும்பு கம்பி குத்தி தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மறந்துவிடுகின்றனர். இதுபோன்ற காட்சிகளை சென்னை நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் அடிக்கடி காணலாம். இவ்வாறு வாகன நெரிசலுக்கு இடையே தடுப்பு கம்பிகள் மற்றும் சென்டர்மீடியனை ஆபத்தான முறையில், வாகன நெரிசலுக்கு இடையே தாண்டி செல்பவர்களை, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலரை கேட்டபோது, ‘கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் சாலைகளை கடப்பதற்கு நடைவழி இல்லை. அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் நிறைந்துள்ளன. இதனால் நாங்கள் சென்டர்மீடியனை தாண்டி செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இதுபோன்ற முக்கிய சாலை பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் இருப்பதில்லை. நாங்களே வாகனங்களுக்கு கைகாட்டியபடி, வாகன நெரிசலுக்கு இடையே கடந்து, சென்டர்மீடியனை உயிருக்கு ஆபத்தான நிலையில் தாண்டி குதித்து சென்று வருகிறோம். அப்பகுதிகளில் உள்ள நடைவழிகளில் பொதுமக்கள் கடந்து செல்வதற்கு போலீசார்தான் உதவ வேண்டும். அவர்களே பணியில் இல்லையென்றால், நாங்கள் என்ன செய்வது?’ என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான போக்குவரத்து போலீசாரே பணியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருசிலர் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலிப்பதற்காக சாலையோரம் ஒதுங்கிவிடுகின்றனர். சென்னை நகரில் தேனாம்பேட்டை, தி.நகர் உஸ்மான் மற்றும் துரைசாமி சாலை சந்திப்பு உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மட்டும் ஊர்க்காவல் படையினர் பணியில் உள்ளனர். மற்ற பகுதிகளுக்கு அவர்களை உயர் அதிகாரிகள் அழைப்பதில்லை. இதனால் நாங்கள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, அப்பகுதியில் சென்டர்மீடியனை தாண்டி குதிப்பதில் பலர் சாகசம் புரிகின்றனர். ஒரே சமயத்தில் நாங்கள் எப்படி இரண்டையும் சமாளிக்க முடியும்?’ என்று போலீசார் கேள்வி எழுப்புகின்றனர். இப்பிரச்னைக்கு தமிழக அரசு உரிய தீர்வு காணுமா? இல்லையேல், இதன்மூலம் அதிக உயிர்ப்பலிகள் நிகழும். பிரச்னைகள் வருமுன் காப்பதே கட்டாயம்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

  • SYRGERYrecovryyyBRAINN

    அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

  • aadi_velli111

    ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்