SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓ.பி.எஸ் அணி புகார் குறித்து பதிலளிக்க சசிகலாவுக்கு மேலும் ஒரு நாள் அவகாசம்: தேர்தல் ஆணையம் வழங்கியது

2017-03-20@ 20:46:21

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவுக்கு தேர்தல் ஆணையத்தில் பதில் அளிக்க தங்களுக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா அணி கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையமும் மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்கி, நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நாளை மறுநாளே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்க உள்ளதால் அதிமுகவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதன் பிறகு அதிமுக 2 ஆக உடைந்து சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சசிகலா அணியின் சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.  இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கடந்த 15ம் தேதியன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சசிகலா அணியினரும் 16ம் தேதி நசீம் ஜைதியை சந்தித்து, ‘‘பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது எதிர்க்கின்றனர்’’ என கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்கவும் கேட்டுக்கொண்டனர். இதன்பின்னர், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஒரு மனு தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியிருந்தார். தற்போது மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு பொறுப்பு தரப்பட்டதே கட்சியின் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே, இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டது.

 அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இது பற்றி விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில், ‘‘ஆர்.ேக.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஓபிஎஸ் மனுவுக்கு 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது. இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர்.
அப்போது, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று பதில் அளிப்பதற்கு பதில் மேலும் ஒரு நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பதில் அளிப்பதில் கடுமையான குழப்பத்தில் சசிகலா அணியினர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் மேலும் ஒரு நாள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சசிகலா அணியினரின் வேண்டுகோளை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா அணியினர் அளிக்கும் பதில் அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ளுமா? என்ற பரபரப்பு தற்போது கட்சியினரிடையே தொற்றி உள்ளது. இதே போல ஓ.பி.எஸ். அணி சார்பில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் அவரது தலைமையில் நேற்றிரவு முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

 இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக சசிகலா தரப்பினரையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதற்காக இருதரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தேர்தல் கமிஷன் தனது முடிவை அன்றே அறிவிக்கும் என தெரிகிறது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது வரும் 22ம் தேதி மாலையில் தெரிய வரும். ஏனெனில் 23ம் தேதியுடன் ஆர்.கே.நகரில் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. அதனால் இரு தரப்பினரும் கடும் பதட்டத்தில் உள்ளனர். இருதரப்பினருக்கும் ஒதுக்கப்படாமல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் டி.டி.வி.தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு வேறு சின்னங்கள் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்