SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மறைவுக்கு பின் கூட்டப்பட்ட அவசர பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம்

2016-12-30@ 00:21:10

சென்னை : அதிமுகபொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து, கட்சியின் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அன்றைய தினம் நள்ளிரவே பதவி ஏற்றார். அதிமுகவின் பொதுச்செயலாளராக யார் பதவியேற்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களும் சசிகலாவே பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதிமுகவின் சட்டவிதியின்படி 5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலாளராக முடியும். ஆனால், சசிகலா 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதால், அவரை பொதுச் செயலாளராக நியமிப்பதில் சட்டச் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், அதிமுகவின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு நடந்தது. கட்சியின் 50 மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களும் சொகுசு பஸ் மற்றும் வேன்களில் அழைத்து வரப்பட்டனர். அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தனித்தனியாக காரில் வந்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 8.55 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் மண்டப வளாகத்திற்குள் வந்தார்.

சரியாக, காலை 9.30 மணியளவில் கட்சியின்  அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில்   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, பண்ருட்டி ராமசந்திரன், அனைத்து அமைச்சர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேடையில் 45  பொதுக்குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் மறைந்த  அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும்  வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்று, ஜெயலலிதா மறைந்த செய்தியை தாங்கிக் கொள்ள இயலாமல் உயிர் நீத்த 597 அதிமுகவினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 711 பேர் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானமாக அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தின் முழு விவரம் வருமாறு:

அதிமுக பொதுச்செயலாளராகவும், அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் தாயாகவும், தவ வாழ்வு வாழ்ந்த ஒப்பற்ற தலைவியை இழந்து அதிமுக இன்று கலங்கி நிற்கிறது. அதிமுகவை இனி யார் வழிநடத்தி செல்வது என்ற நிலை ஏற்பட்டபோது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட அதிமுகவினரின் நெஞ்சங்களிலும் வி.கே.சசிகலா பெயர்தான் எழுந்தது. எனவே, அதிமுகவை நடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது, வங்கி கணக்குகளை இயக்கும் அதிகாரம் என அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்கும் பணிகளுக்காக அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவது மிகவும் இன்றிமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதிமுக சட்ட விதிப்படி, பொதுச்செயலாளர் தமிழகத்தில் உள்ள அதிமுக கிளைகளின் அடிப்படை உறுப்பினர்களாலும், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநில கழகங்களின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன்படி அதிமுக பொதுச்செயலாளரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதிமுக உறுப்பினர்களாலும், பொதுக்குழு உறுப்பினர்களாலும், தலைமை கழக நிர்வாகிகளாலும், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அமைப்புகளாலும், அதிமுகவை வழி நடத்த தகுதி படைத்தவர் என ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியும், ஜெயலலிதாவுடன் 33 வருடங்கள் வாழ்ந்து அவரை தன் கண் இமை போல் பாதுகாத்து, அவரின் நிர்வாக திறமைகளை அருகில் இருந்து கற்றுக் கொண்ட வி.கே.சசிகலாவே அதிமுகவின் பொதுச்செயலாளராக பணியாற்ற உகந்தவர் என்று இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது. அதிமுக சட்ட திட்ட விதி-20, பிரிவு 2ல் கூறப்பட்டுள்ளபடி, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் வரை சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது. பொதுச்செயலாளருக்கு அதிமுக விதிகள் தரும் அனைத்து அதிகாரங்களையும் சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் பெற்று கட்சியின் நிர்வாகத்தை நடத்த இந்த பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றுகிறது என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டது. மேலும் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்பி தம்பிதுரை, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ராஜலட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய 5 பேர், பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக நியமிக்கப்பட்ட தீர்மானத்தை சசிகலாவிடம் நேரில் வழங்க போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றனர். சசிகலா வீட்டில் இருந்து வெளியில் வந்தார். வாசலில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மலர் தூவினார். தீர்மான நகலைப் பெற்றபோது அவர் கண்ணீர் வடித்தார். பின்னர் வந்தவர்களுக்கு நன்றி சொல்லிய பிறகு வீட்டுக்குள் சென்றார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் திருமண மண்டபத்தின் வாயிலில் நிருபர்களிடம் கூறியதாவது, “அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்து அவரின் சம்மதத்தை பெறுவதற்காக நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதைத்தொடர்நது 5 பேரும் காரில் ஏறி போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கினர். சசிகலாவும் அதை பெற்றுக் கொண்டு பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று, பொதுக்குழு கூட்ட அரங்கில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி நன்றி தெரிவித்து பேசியதை தொடர்ந்து, அதிமுக அவசர பொதுக்குழு கூட்டம் மதியம் 12.15 மணிக்கு முடிவடைந்தது.

சசிகலா நாளை பதவியேற்பு

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானத்தை எடுத்துக் கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேர் நேற்று காலை 10.20 மணிக்கு பொதுக்குழுவில் இருந்து வெளியே வந்தனர். பின் போயஸ் கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கினர். அதை ஏற்றுக் கொண்ட சசிகலா உடனடியாக பொதுக்குழு கூட்டத்திற்கு வரலாம் என்று தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை. நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வந்து பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி.

தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென ஆலோசனை நடத்தினர். அப்போது, சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் விழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. இதுவரை அதிமுக தொண்டர்களோ அல்லது பொதுமக்களோ சசிகலாவின் குரலை கேட்டதே இல்லை. சசிகலா குரல் எப்படி இருக்கும் என்று அதிமுக தொண்டர்கள் கேட்க ஆர்வமாக உள்ளனர். தற்போது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி கட்சி நிகழ்ச்சிகளில் சசிகலா பங்கேற்பார். அப்போது அவர் தொண்டர்களிடம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போதுதான் சசிகலாவின் குரலை பொதுமக்களும் கேட்க முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்