SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகைகள் வெறும் கவர்ச்சிப் பொம்மைகளா?: இயக்குநர் சுராஜ் மீது நயன்தாரா கடும்தாக்கு

2016-12-27@ 01:13:02

சென்னை: சினிமா நடிகைகள் பற்றி இயக்குநர் சுராஜ் தெரிவித்த கருத்துக்கு நடிகைகள் நயன்தாரா, தமன்னா உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால், சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷால், தமன்னா நடிப்பில் சமீபத்தில் ரிலீசான ‘கத்தி சண்டை’ படத்தை இயக்கியுள்ளார் சுராஜ். படம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நான் சாதாரண ரசிகர்களுக்காக படம் எடுப்பவன். ஹீரோ கஷ்டப்பட்டு சண்டை போட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அதுபோல், ஹீரோயின் என்றால் கிளாமராக நடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். படம் முழுக்க ஹீரோயின் புடவை கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், தமன்னாவை கிளாமராகப் பார்க்கலாம் என்று நினைத்துதான் வருவார்கள். நடிகைகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அதற்கான படத்தில் நடிக்க வேண்டியதுதான். கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும். கிளாமராக நடித்தவர்கள்தான் இன்றைக்கு முன்னணி ஹீரோயின்களாக இருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு வேண்டுமானால் டி.வி சீரியல்களில் முக்கியமான வேடங்கள் கிடைக்கக்கூடும். கிளாமராக நடிக்கும்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக நடிக்க வேண்டும். அதற்காகத்தான் கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொல்வேன். ‘கத்தி சண்டை’ படப்பிடிப்பில் காஸ்ட்யூம் டிசைனர், தமன்னாவின் கால்கள் முழுவதையும் மூடி இருக்கும்படி டிரெஸ் எடுத்துக்கொண்டு வருவார். உடனே நான், ‘அந்த டிரெஸ்சை கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வா’ என்று சொல்வேன். உடனே காஸ்ட்யூமர், ‘இல்ல சார். மேடம் திட்டுவாங்க’ என்பார். ‘மேடம் கிட்ட போய் சொல்லு. படம் பார்க்கிற ஆடியன்ஸ் என்னை உதைப்பார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கறாங்க. நடிக்கச் சொல்லு’ என்று சொல்வேன். எப்படியும் நான் அவர்களை வேலை வாங்கிவிடுவேன்’ என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார்.இதற்கு திரையுலகில் பல்வேறு தரப்பிலும், நடிகைகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சுராஜை நடிகை நயன்தாரா கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்புள்ள ஒருவர் எப்படி இவ்வளவு கீழ்த்தரமாகவும், மலிவாகவும் கருத்து தெரிவிக்க முடியும்? நடிகைகளுக்கு எதிராக தரக்குறைவாகப் பேச சுராஜ் யார்? சினிமாவில் நடிப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நடிகைகள் ஆடைகளைக் குறைத்து  நடிப்பார்கள் என்று அவர் நினைக்கிறாரா அல்லது நடிகை என்றால், ஆடைகளைக் களைபவர் என்பதாக மட்டுமே அவர் பார்க்கிறாரா?
தன் குடும்பத்தில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி, இந்த மாதிரி அவர் மலிவான கருத்துகளை, தைரியமாகச் சொல்ல முடியுமா.

சமீபத்தில் வந்த ‘பிங்க்’, ‘தங்கல்’ போன்ற படங்களில், பெண்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியும், பெண்களுக்கான மரியாதை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. பெண்களை உயர்வாக  மதித்து படங்கள் வெளியாகும் இந்த காலக்கட்டத்தில், சுராஜ்  எந்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. பொதுவாக நடிகைகள், தங்களுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும்போதும், கதைக்கு மிகவும் தேவைப்படும்போதும் மட்டுமே கிளாமர் உடையணிந்து நடிக்கிறார்கள். ஆனால், நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொம்மைகளாகப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பணம் செலவழித்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறார்கள் என்பது போல், அவர் எந்த வகையான ரசிகர்களை மனதில் நினைத்துக்கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆடைகளைக் குறைப்பதற்காகவே நடிகைகள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்தைக் கூறுவதன் மூலமாக, சினிமாவில் இது மட்டுமே நடக்கிறது என்பதாக, இளைஞர்கள் நினைக்கும் அளவுக்கு சுராஜ் பேசி, அவர்களை தவறாக வழிநடத்துகிறார்.

கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களில், நானும் கூட கிளாமராக நடித்துள்ளேன். ஆனால், சில ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக, என்னை இயக்கிய இயக்குநர்கள் அவ்வாறு நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது இல்லை. நான் தேர்வு செய்த உடையாக இருந்தால் மட்டுமே அவ்வாறு நடிப்பேன். ஆனால், நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கும், பேசுவதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது. இவ்வாறு நயன்தாரா கடுமையாகக் கூறியுள்ளார்.சுராஜ் மன்னிப்பு: என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன் என இயக்குநர் சுராஜ் கூறியுள்ளார்.

பெண்களிடம் சுராஜ்மன்னிப்பு கேட்க வேண்டும்:தமன்னாஆவேசம்
இந்த விவகாரம் குறித்து, ‘’கத்தி சண்டை’ படத்தில் நடித்துள்ள தமன்னா கூறிய கருத்து வருமாறு:‘தங்கல்’, பெண்களை மிகவும் மேன்மைப்படுத்தும் படம். அந்தப் படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுராஜ் பெண்களை கொச்சைப்படுத்திப் பேசிய தகவல் அறிந்தேன். படத்தைப் பார்க்காமல் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்.  அவர் தெரிவித்த கருத்து, எனக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி விட்டது. மேலும், என் மனமும் அதிகமாக காயம் பட்டுள்ளது. அவர் இப்படி சொன்னதற்காக, என்னிடம் மட்டுமின்றி, திரைத்துறையில் இருக்கும் அத்தனை பெண்களிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும்.

நடிகர், நடிகைகள் மக்களையும், ரசிகர்களையும் மகிழ்விக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் திரையில் தோன்றி நடிக்கிறோம். அதற்காக, எந்த நிலையிலும் எங்களை ஒரு காட்சிப் பொம்மையாகவோ அல்லது ஒரு பொருளாகவோ பார்க்கக்கூடாது. சினிமாவில் நான் நடிக்க வந்து 11 வருடங்களாகி விட்டது. எனக்கு எந்த உடை பொருத்தமாகவும், சவுகரியமாகவும் இருக்கிறதோ அதை மட்டும்தான் அணிந்து நடிக்கிறேன். ஆனால், நம் நாட்டில் பெண்களைக் கேவலமாகப் பேசுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.எனவே, சினிமாவில் ஒரு தனி நபர் சொன்ன கருத்தை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த சினிமா துறையின் கருத்தே இப்படித்தான் என்று யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமன்னா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-08-2019

  17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flower16

  பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

 • tightropewalker

  நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

 • 16-08-2019

  16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்