SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரும்புள்ளி

2016-02-20@ 00:49:56

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவம் நிகழ்ந்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான காரணங்கள் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குள் மேலும் ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் துறைக்கே கரும்புள்ளியாக அமைந்துள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான ஹரீஸ் சென்னையில் தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவரது மரணத்தின் பின்னணியில் உயர் அதிகாரிகள் டார்ச்சரே காரணம் என்று துறையில் உள்ள  பலரும் கருதுகின்றனர்.தேசிய குற்ற ஆவண காப்பக கணக்குப்படி நாட்டிலேயே போலீசில் அதிக தற்கொலை மரணங்கள் நடக்கும் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடம். தமிழகத்திற்கு இரண்டாவது இடம்.

கடந்த 2006 முதல் 2013 வரையிலான காலத்தில் மட்டும் 216 பேர் தற் கொலை செய்தனர். தமிழக போலீசில் ஆண்டுக்கு  சராசரியாக 27 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கீழ் மட்ட போலீசார். தற்கொலை செய்து கொண்ட ஹரீஸ் அல்லது விஷ்ணுப்பிரியா அடிமட்டத்தில் இருந்த ஏட்டைய்யாக்கள் அல்ல. இருவருமே எந்த ஒரு பிரச்னையிலும் முடிவெடுக்கக்கூடிய அதிகாரமிக்க பொறுப்பில் இருந்தவர்கள். தேவைப்பட்டால் டிஜிபி அல்லது அரசு செயலரை கூட தொடர்பு கொள்ளக்கூடிய இடத்தில் இருந்தவர்கள். சொந்த பிரச்னைகளுக்காக மட்டுமே துயரமான முடிவுகளை மேற்கொண்டதாக கருதி மூடி விடக்கூடிய வழக்குகள் அல்ல.  இருவரின் மரணத்தின் பின்னணியில் ஏதாவது ஒரு வகையில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி இருந்திருக்கும்.

தமிழகத்தில் போலீஸ் மட்டுமின்றி பல அரசு துறைகளில் அதிகார, அரசியல் ரீதியிலான நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி முதல் தொடர்ச்சியாக அரசு துறை ஊழியர்கள் மரணங்களே இதற்கு சான்று. மன உறுதி படைத்தவர்களாக இருக்கவேண்டிய போலீஸ் அதிகாரிகளையும் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கடி மிகுந்திருக்கிறது என்றால் அத்துறைக்கு அவசர சிகிச்சை அவசியம். பல சிக்கலான குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானவர்கள் தமிழக போலீசார். தற்போது சின்ன வழக்குகளை கூட கண்டுபிடிக்க திணறுவது மட்டுமின்றி, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனும் மழுங்கிப்போனது. வரையறுக்கப்பட்ட ேநரமில்லாமல் பணியாற்றும் போலீசாருக்கு பணிச்சுமை,  ஓய்வு குறைவால் ஏற்படும் மன அழுத்தமே அதிகம்.

அதற்கு மேலும் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடிகளை தாங்கி கொள்வது சிலருக்கு சாத்தியமில்லாமல் போகிறது. இதன் வெளிப்பாடு தான் தற்கொலைகள்.போட்டிகள்  நிறைந்த கார்ப்ரேட் உலகில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாதது. மன அழுத்தம் எந்த வகையிலும் பணித்திறனை பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது என்பதை உணர்ந்து தான் ஊழியர்களுக்கு  மனநல மேம்பாடு(Stress management) பயிற்சிகளை தொடர்ச்சியாக நிறுவனங்கள் வழங்குகின்றன. போலீசில் அத்தகைய பயிற்சிகள் மிக குறைவு. போலீஸ் நிர்வாகத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 முறையாவது மனநல பயிற்சிகள் அளிப்பது அவசியம்.

மேலும் வாரம் தோறும் கவாத்து பயிற்சிகள் எப்படி அவசியமோ, அதுபோல் மனதுக்கு தெம்பூட்டும் பாலின நிகர்நிலை பயிற்சிகளும்,  போலீசாருக்கு ஆலோசனை வழங்குவதற்கென தனியாக மனநல ஆலோசகர்களை நியமிப்பதும் கூட அவசியமாகிறது. அதை செய்ய தவறியதன் விளைவு தான் அடுத்தடுத்த 2 தற்கொலைகள். இனியும் போலீசில் இத்தகைய மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத வரை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானவர்கள் என்று பெருமை பேசுவதற்கான பலன் கிடைக்காது.

drug coupon card prostudiousa.com drug discount coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்