SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிபதிகள் நியமன ஆணையம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2015-10-17@ 00:04:41

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்ட விரோதம் என்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு (கொலிஜியம்) மூலம்தான் இதுவரை நடந்து வந்தது. ஆனால், தற்போதுள்ள நீதிபதிகள் நியமன நடைமுறை சரியில்லை என்றும் அதனால் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்தது.இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
  இந்த ஆணையத்தில் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 2 நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகியோர் பரிந்துரை செய்யும் 2 நிபுணர்கள் உறுப்பினர்களாக இருக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்ப்புக்கு இடையே

இந்த மசோதா லோக் சபா மற்றும் ராஜ்யசபாவில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டு நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டுவர சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதுமிருந்து பல்வேறு வக்கீல்கள் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மூத்த வக்கீல்கள் பிரசாந்த் பூஷன், சேஞ்ச் இண்டியா அமைப்பு, பார் அசோசியேசன் ஆப் இந்தியா உள்ளிட்டோர் சார்பில்  15 வழக்குகள் நீதிபதிகள் நியமன ஆணையை எதிர்த்து தொடரப்பட்டன. இந்த வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. அரசியல் சாசன பெஞ்சில் நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர், செல்லமேஸ்வர், மதன் பி.லோகூர், குரியன் ஜோசப், ஏ.கே.கோயல் ஆகியோர் அங்கம் வகித்தனர். மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகில் ரோகத்ஹி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோரும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வககீல்கள் பிரசாந்த் பூஷன், அனில் பி.திவான், சந்தோஸ் பால் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வட்டத்தின் கட்டுப்பாட்டில்

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்றி வாதிட்டதாவது: சுமார் 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நீதிபதிகள் நியமனத்தை மாற்ற மத்திய அரசு நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்கியுள்ளது. நீதித்துறையில் அரசின் பங்கு அதிகம். உச்ச நீதிமன்றத்தின் விதிகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகிறது. அதிகாரம் என்பது சமமான முறையில் இருக்க வேண்டும். நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒரு வட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துவிடக்கூடாது. ஆணையத்தில் பங்கேற்கும் 2 பொது நிபுணர்கள் சமூக ரீதியான கருத்துக்களை நீதிபதிகள் நியமனத்தின்போது முன்வைக்க முடியும். சட்ட அமைச்சர் இந்த ஆணைய உறுப்பினராக இருப்பதால் வெளிப்படையான நியமனம் இருக்கும். எனவே, மத்திய அரசு கொண்டு வந்த ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

தவறுக்கு ஆதாரம் உண்டா?

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், கொலிஜியம் முறையில் நடந்த நியமனங்களில் தவறு நடந்துள்ளதற்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா என்று கேட்டனர். அப்போது, அட்டர்னி ஜெனரல், நீதிபதிகள் நியமனத்தை செய்யும் கொலிஜியத்தில் 9 நீதிபதிகள் இருப்பதால் இந்த வழக்கை 11 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:
நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும், அதில் அரசு நிர்வாகத்தின் தலையீடு கூடாது. அவ்வாறு இருந்தால் நீதித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் என்பது கேள்வியாகிவிடும் என்று நீதிபதி குல்தீப் சிங் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளார். அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஏராளமானோர் மீது வழக்குகள் உள்ள நிலையில் அவர்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை எப்படி வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நீதிபதி வெர்மா ஒரு வழக்கின் தீர்ப்பில் கூறும்போது, நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறையைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள்தான் இருக்க வேண்டும். இந்த நியமன அதிகாரத்தை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு வழங்க முடியாது என்று கூறியுள்ளார். எனவே, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்க முடியாது. டாக்டர் அம்பேத்கரின் அறிக்கையில், நீதிபதிகள் நியமனத்தை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்குத் தந்தால் அதைவிட ஆபத்து எதுவும் இல்லை. அதே மாதிரி அந்த நியமன அதிகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தனிப்பட்ட அதிகாரமாக தருவதும் ஆபத்தானது. தலைமை நீதிபதி மூத்த நீதிபதிகளைக் கலந்து ஆலோசித்துத்தான் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது. அந்த தனித்தன்மையையும் சிறப்புத் தன்மையையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி இருக்கும்

நாடாளுமன்றம் பொதுமக்களுக்குத் தேவையானவற்றில் சிறந்த திட்டங்களை வகுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அடிப்படை அரசியலமைப்பு சட்டத்தில் தங்களது அதிகாரத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தக்கூடாது. நீதித்துறை என்பதற்கான தனிப்பட்ட அதிகாரம் இருந்தால்தான் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும் முறையாக இருக்கும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் நிர்வாகத்தின் தரப்பு மிகக்குறைந்த அளவே இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகள் நியமனம் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டுமேயொழிய மதம் ஜாதி பாலினம் சார்ந்து இருக்க கூடாது. நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் சார்ந்த பரிந்துரைகள் வந்துவிட்டால் நீதித்துறையின் மேல் உள்ள மரியாதையும், சுதந்திரமும் பாதிக்கப்படும். மற்ற நாடுகளில் இந்த நியமன முறை உள்ளது என்பதற்காக இந்தியாவில் கொண்டுவருவது ஏற்க முடியாது. ஏனென்றால் இந்திய நீதித்துறை சிறப்பு வாய்ந்தது. அதன் அடிப்படையை மாற்றிவிடக்கூடாது.

சட்ட அடிப்படையை சிதறடிப்பது

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அரசியல் அமைப்பின் அடிப்படையை மறந்துவிட்டு இந்த ஆணையத்தை கொண்டு வர ஆதரவு திரட்டப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் அல்லாதவர்கள் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது அரசியல் அமைப்பின் அடிப்படையை சிதறடிப்பது போன்றதாகும். கென்யா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியுசிலாந்து, பங்களாதேஷ், அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளில் நீதித்துறை நியமனத்தில் ஆட்சி நிர்வாகத்தின் பங்கு உள்ளது.  ஆனால், நமது அரசியல் அமைப்பு சட்டம் அந்த நாடுகளின் அரசியல் சட்டங்களுக்கு மாறுபட்டது. இங்கு நீதித்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண சட்டம் திருத்தம் போன்று இந்த நியமன ஆணையத்தை நினைக்க முடியாது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் விஷயமாகும்.  மாநில முதல்வர்கள், கவர்னர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் ஆய்வு செய்து நீதிபதிகள் நியமனம் செய்யும் போதுதான் சாதாரண சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கும் நீதிபதியாக வாய்ப்பு கிடைக்கும்.

நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை ஆதாரத்தையே பாதித்துவிடும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை சிறிதளவும் ஏற்க முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரைகள் பின்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் மூலம் நீதிபதிகள் நியமனம் செய்வது தான் சரியான நடைமுறையாக இருக்கும். கொலிஜியம் நடைமுறைையயே தொடர வேண்டும்.  நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டுவரும் சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, அது ரத்து செய்யப்படுகிறது. கொலிஜியம் முறையை மேலும் சிறப்பாக செயல்படுத்த திருத்தங்கள் குறித்தும், ஆலோசனைகள் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம். அவற்றை, இந்த நீதிமன்றம் பரிசீலிக்கும். இந்த விஷயங்கள் குறித்து வரும் நவம்பர் 3ம் தேதி விவாதிக்கப்படும். மேலும், அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றவும், இந்த விவகாரத்தில் 1993, 1998ம் ஆண்டுகளில் தலா இரண்டாவது, மூன்றாவது நீதிபதிகள் வழக்கை மறு பரிசீலனை செய்ய வேண்டியும் விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்த நீதிமன்றம் நிராகரிக்கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கருத்து

நீதிபதி ஜே.எஸ்.கேஹர்: கொலிஜியம் முறையில் திரைமறைவில், வெளிப்படை இல்லாமல் நியமனங்கள் நடைபெறுவதாக எழுந்த விமர்சனங்களை கசக்கி எறியும் விதமாக, ‘‘மறைமுகமாக நியமனங்கள் நடைபெறவில்லை. நீதித்துறையினரும் நிர்வாகத்துறையினரும் நேர்மறையாக கருத்து பரிமாற்றம் செய்த பிறகுதான் நியமனங்கள் அறிவிக்கப்படுகிறது’’, என கொலிஜியம் முறைக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியிட்ட நீதிபதிகளில் ஒருவரான கே.எஸ்.கேஹர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: கொலிஜியம் நடைமுறை குறிப்பானைகளை வரிக்கு வரி ஆய்வு செய்தால், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் போது, நீதித்துறையும், நிர்வாகத்துறையும் முழு மரியாதையுடன் கவனமாக நடந்து கொள்வது எல்லோருக்கும் புரியும். இந்த இரு தரப்புக்கு இடையே முழுமையான வெளிப்படைத் தன்மை இதுவரை நீடித்து வருகிறது. இதில் ஒளிவு, மறைவு என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இரண்டு பேர் ஆகியோர் மட்டுமே நீதித்துறை தரப்பில் என்ஜேஏசி குழுவில் இடம் பெறலாம் என்று கூறப்படுவது நீதித்துறைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. தீர்ப்பில் இது பற்றி மிகவும் தெளிவாக எடுத்து கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார் முன்னாள் தலைமை நீதிபதிகள் கருத்து:  முன்னாள் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர்: தீர்ப்பு வரவேற்கக் கூடியது. ஆரம்பம் முதல், என்ஜேஏசிக்கு எதிராகவே நான் கூறி வருகிறேன். அது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளேன். என்ஜேஏசி முறையில், நியமனம் நடைபெற்றால், நீதித்துறையின் மதிப்பு குறையும். ஜனநாயகம் நீடிப்பது கேள்விக்குறி ஆகிவிடும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி: இந்திய நீதித்துறை பெருமை அளிக்கும் விதத்தில் செயல்பட்டு உள்ளது. நீதித்துறையின் சுதந்திரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

உயர்நீதிமன்ற வக்கீல்கள் கருத்து

சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் கூறியதாவது:  உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள இந்த தீர்ப்பின் மூலம் அரசியல்வாதியின் கையில் நீதித்துறை சிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தில் பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழு இருந்தது. இவர்கள் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் நல்லவர்களா? தகுதியானவர்களா? என்பதை சுட்டிக்காட்ட முடியாமல் போகும்  நிலை உருவாக்கப்பட்டது. ஆனால், அது தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. கொலிஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையை மத்திய அரசு கொண்டு வந்தது. அது செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால் தற்போது உள்ள கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் தொடரும். இதில் உள்ள சில குறைபாடுகளை சரி செய்து நீதிபதிகளை நியமனம் நடந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆணையம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள கொலிஜியம் முறை மூலம் உயர்நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் வி.நளினி கூறியதாவது:  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் அரசு நிர்வாகத்தின் தலையீடு இருக்க கூடாது. அதேநேரத்தில் ஏற்கனவே இருக்கும் கொலிஜியம் நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனத்திற்கு முன்பு, வக்கீல்களின் தகுதி மற்றும் திறமை ஆகியவை குறித்து அவர்கள் அங்கம் வகிக்கும் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்க கூடியது தான். ஆனால், ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜேந்திர பிரசாத் கூறியதென்ன?

ஏற்கனவே இருக்கும் முறையை மாற்றும் நிலை வரும்போது, அதன் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்திருக்கிறார். நீதிபதிகள் நியமனத்தில் அரசு நிர்வாகத்தின் பங்கு குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும். நியமனத்தின் இறுதியை முடிவு செய்பவர் தலைமை நீதிபதியாகவே இருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வதுடன் எதிர்ப்பையும் தெரிவிக்கலாம் என்றே நாங்கள் கருதுகிறோம்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் சம்மந்தமில்லாத ஒரு திட்டத்தை நுழைத்துவிட கூடாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசித்த பிறகு ஜனாதிபதி தான் இந்த நீதிபதி நியமனத்தில் முடிவெடுக்க வேண்டும். அமைச்சர் மற்றும் நியமன உறுப்பினர்கள் ஏதாவது காரணங்களை சொல்லி நீதிபதிகள் நியமனத்தில் உறுப்பினர்களாக உள்ள நீதிபதிகளின் கருத்தை கெடுத்துவிடக்கூடாது என்றும்  நீதிபதிகள் கூறினர்.

தகுதியானவர்களுக்கு வாய்ப்பு...

நீதிபதிகள் நியமன ஆணையத்தில் உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளுக்கு எந்த பங்கும் இல்லை. உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு தான் நீதிபதிகளாக தேர்வு செய்யப்படுபவர்களின் தகுதியும், திறமையும் தெரியும். அதேபோல், அந்தந்த மாநில முதல்வர்களுக்கும் இந்த ஆணையத்தின் எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இது நீதிபதிகளுக்கான தேர்வில் பங்கேற்பவர்களை தேர்வு செய்வதில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்றும் கருத்து தெரிவித்தனர் நீதிபதிகள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KimHorseRide1610

    பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

  • NASASpaceSuit

    நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

  • AirQualityDelhi1610

    அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

  • CatalanSpainProtest

    கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

  • LebanonWildFire1610

    கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்