ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டம்?

Date: 2015-02-03@ 08:27:05

புதுடெல்லி: மானிய விலையில் உணவு தானியம் பெறுவதற்கு கட்டுபாடுகளை விதிப்பதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மானிய குறைப்பு குறித்து ஆய்வு செய்த சாந்தகுமார் குழு கடந்த மாதம் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. அதில் மானிய விலையில் உணவு பொருட்கள் பெறுவோரின் எண்ணிக்கையை 67 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உணவு தானியங்களுக்கான மானியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தை மூட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மானிய உணவு தானியங்களின் விலையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் இருந்து 50 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்றும் சாந்தகுமார் குழு சிபாரிசு செய்துள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வரும் 11-ம் தேதி டெல்லியில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் தற்போது நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவோரின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களின் விலையையும் கணிசமாக உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தில் புதிய கட்டுபாடுகளை கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு உணவு பொருள் மானியத்திற்கும் கட்டுபாடுகளை விதிக்க உள்ளதால் ஏழை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News