மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல்: கொல்லம் நீதிமன்றம் அதிரடி

Date: 2015-02-03@ 01:16:34

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் 12 வயது மகளை 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு  கொல்லம் நீதிமன்றம் சாகும்வரை கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொல்லம் அருகே அரைக்கல் பகுதியை சேர்ந்தவர் பொடிமோன்  (40). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2010ல் பொடிமோனின் மனைவி கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு  வெளியேறினார். இதையடுத்து 3 மகள்களையும் அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சேர்த்தார் பொடிமோன். இதில் 12 வயதான மூத்த மகளை  வாரத்திற்கு ஒரு முறை பொடிமோன் தனது வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

கடந்த 2013ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.  சிறுமியை பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து கொல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில் பொடிமோன், 3 ஆண்டுகளாக தனது மூத்த மகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது  செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கொல் லம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்மேனன், மகளை பலாத்காரம்  செய்த பொடிமோனுக்கு சாகும் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு ரூ. 5  லட்சம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News