தொலைபேசி இணைப்பு விவகாரம் குறைபாடுகளுடன் சிபிஐ மனு தாக்கல் காவலில் விசாரிக்க கடும் எதிர்ப்பு

Date: 2015-02-03@ 01:13:30

சென்னை : சன் தொலைக்காட்சி ஊழியர்களை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரிய சிபிஐயின் அப்பீல் மனுவுக்கு, ஊழியர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காரசாரமாக வாதிட்டனர். காவல் கோரும் மனு நிறைய குறைபாடுகளுடன் இருப்பதால், அதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றும் வக்கீல்கள் குறிப்பிட்டனர். தொலைபேசி இணைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி மற்றும் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் உதவியாளர் கவுதமன் ஆகியோரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிபதி கடந்த 24ம் தேதி தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

அப்போது அந்த மனு நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் வக்கீல் சீனிவாசன், கவுதமன் சார்பில் மூத்த வக்கீல் எ.ரமேஷ், கண்ணன், ரவி சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு: சிபிஐ வக்கீல் சீனிவாசன்: 2004 முதல் 2007வரை தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்தியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வந்த தகவல்களின் அடிப்படையில் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவுதமன், கண்ணன், ரவி ஆகியோரை கடந்த ஜனவரி 21ம் தேதி சிபிஐ கைது செய்தது. 22ம் தேதி அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அப்போதே சிபிஐ காவல் கோரி மனுத் தாக்கல் செய்தோம். முதல் ரிமாண்ட் என்பதால் அந்த காலக்கட்டத்துக்குள் அவர்களை சிபிஐ காவலில் விசாரிக்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீது சிபிஐ நீதிமன்றத்தில் ஜனவரி 23ம் தேதி வாதம் நடந்தது. 24ம் தேதி சிபிஐ நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. முதல் ரிமாண்டில்தான் சிபிஐ காவலில் விசாரிக்க கோர முடியும். இதை விசாரணை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விசாரணை நீதிமன்றங்களுக்கு நீதிபதி அறிவுறுத்த வேண்டும்.

நீதிபதி ஆர்.மாலா: விசாரணை நீதிமன்ற நடைமுறைகள் குறித்து என்னிடம் சொல்ல வேண்டாம். நானும் அங்கிருந்துதான் வந்துள்ளேன். சிபிஐ வக்கீல்: இந்த வழக்கில் 323 தொலைபேசி இணைப்புகள், 4 சர்க்யூட்டுகள், 19 மொபைல் போன் இணைப்புகள் விதிமுறைகளுக்கு முரணாக எந்த கட்டணமும் கட்டப்படாமல் பயன்படுத்தப்பட்டது. வழக்கில் கண்ணன், ரவி, கவுதமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நீதிபதி: கைது செய்யப்பட்ட இந்த 3 பேர் மீதும் என்ன குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்? சிபிஐ வக்கீல்: அந்த விவரங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை காலத்தில் கண்ணன், ரவி, கவுதமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, விசாரணை மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. அதனால்தான் இவர்களை சிபிஐ காவலில் விசாரிப்பது தேவையாக உள்ளது.

நீதிபதி: எத்தனை முறை இவர்கள் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்? சிபிஐ வக்கீல்: 4 அல்லது 5 முறை ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்களிடமிருந்து சில முக்கிய தகவல்கள் பெற வேண்டியுள்ளது. நீதிபதி: இதுவரை எத்தனை சாட்சிகளை இந்த வழக்கில் சேர்த்துள்ளீர்கள். எவ்வளவு ஆவணங்களை சேகரித்துள்ளீர்கள் என்ற விவரத்தை மதியம் 1 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். இந்த 3 பேரிடமும் விசாரித்தீர்களா. இவர்கள் எந்த விதத்தில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள்தானே.

(இதையடுத்து, விசாரணை மதியம் 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது)
மதியம் 1 மணிக்கு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சீலிட்ட கவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி: எத்தனை ஆவணங்கள் என்று கூற முடியுமா? சிபிஐ வக்கீல்: 200 ஆவணங்களுக்கும் மேல் சேகரிக்கப்பட்டுள்ளது. 60 சாட்சிகளுக்கும் மேல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கண்ணன், ரவி சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டதாவது: ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: சிபிஐ காவலில் விசாரணை நடத்த கோரும்போது உரிய காரணங்களை மனுவில் தெரிவிக்க வேண்டும். எதற்காக சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க கோருகிறோம் என்ற விவரங்கள் மனுவில் இருக்க வேண்டும். ஆனால், சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் எந்த காரணமோ, விவரமோ இல்லை. இப்போது, சிபிஐ காவல் விசாரணைக்கு என்ன தேவையுள்ளது?. விசாரணை மிக முக்கிய கட்டத்தில் இருப்பதாக மட்டும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தனி மனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.

கடந்த 2004 முதல் 2007வரை நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக 2013ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகும் விசாரணை அதிகாரி முன் கண்ணன், ரவி ஆகியோர் பல முறை ஆஜராகியுள்ளனர். நீதிபதி: எப்போதெல்லாம் என்று கூறமுடியுமா? ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: கண்ணன், 2014 ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் சென்னையிலும், 2014 ஆகஸ்ட் 6 மற்றும் 29ம் தேதிகளில் புதுடெல்லியிலும் சிபிஐ விசாரணை அதிகாரி முன் ஆஜராகியுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னரும் ஆஜராகியுள்ளனர் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மட்டும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.  நீதிபதி: சிபிஐ விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்தாரா? சிபிஐ வக்கீல்: சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது. ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: எப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்கு பின்னரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில் இப்போது சிபிஐ காவல் விசாரணை தேவைதானா? சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கும் முறை மிக மோசமாக இருக்கும். ரவி சென்னையிலும், டெல்லியிலும் விசாரணை அதிகாரி முன் பலமுறை ஆஜராகியுள்ளார். எனவே, இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை தேவையில்லை. சிபிஐ காவலில் விசாரணை நடத்துவதும் தேவையில்லை.

கவுதமன் தரப்பில் மூத்த வக்கீல் எ.ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அவரின் வாதம் வருமாறு: தகவல்களின் அடிப்படையில் 2007ல் முதல்கட்ட விசாரணை தொடங்கியதாக சிபிஐ கூறியுள்ளது. தகவல்களின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் 2013 ஜூலை 23ல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அழைக்கிறதோ அப்போதெல்லாம் கவுதமன் ஆஜராகி விசாரணை அதிகாரிகளுக்கு பதில் அளித்துள்ளார். கடந்த 2013 அக்டோபரிலும், 2014 ஜனவரியிலும் அவர் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளார். குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புகள் குறித்து எந்த தகவலோ, கோரிக்கையோ, நோட்டீசோ எங்களுக்கு பிஎஸ்என்எல் தரப்பிலிருந்து தரப்படவில்லை. ஆனால், தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசுக்கு ஸீ 1 கோடியே 20 லட்சம் இழப்பு என்று மட்டும் சிபிஐ கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் 323 ஐஎஸ்டிஎன் தொலைபேசி இணைப்புகளையும், பிரைம் ரேட் ஆக்சஸ், பேசிக் ரேட் ஆக்சஸ் ஆகிய பிராட்பேண்ட் வசதிகளையும் பயன்படுத்தியதாக சிபிஐ கூறியுள்ளது. அதற்கான கட்டணம் தொடர்பாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை.
சிபிஐ காவலில் விசாரணை நடத்தக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவில் பல குறைபாடுகள் உள்ளன. விசாரணை அதிகாரி கூறியுள்ள ஒப்புதல் வாக்குமூலம் மனுவில் இருக்க வேண்டும். சிபிஐ காவல் கோரியதற்கான காரணங்கள் மனுவில் கூறப்பட்டிருக்க வேண்டும். மேலும், மனுவின் இறுதியில் அந்த மனு சரிபார்க்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் நோட்டரி, சான்றாவண ஆணையர், மாஜிஸ்திரேட் என யாருடையை கையெழுத்தாவது இருக்க வேண்டும். ஆனால், சிபிஐ தாக்கல் செய்த மனுவில் மனு சரிபார்க்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297ல் மனு ஒப்புதல் குறித்து மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஒப்புதல் பெறப்பட்ட அடையாளம் எதுவும் இல்லை. மனுவைத் தாக்கல் செய்யும்போது அதற்கான நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். என்ன காரணத்திற்காக சிபிஐ காவல் கோரப்படுகிறது, எத்தனை சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர், எத்தனை ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற எந்த தகவலும் மனுவில் கூறப்படவில்லை. குறையுள்ள மனுவைத் தாக்கல் செய்துள்ள சிபிஐ கடந்த 2007ல் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய சிபிஐ 8 ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தது. நீதிபதி: மனுவில் வழக்கின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனவா? எ.ரமேஷ்: சிபிஐ மனுவில் எதுவும் கூறப்படவில்லை. விசாரணை தீவிர கட்டத்தில் இருப்பதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. எந்த காரணத்துக்காக சிபிஐ காவல் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் எப்ஐஆரில் மனுதாரரின் பெயர் இல்லை. இருந்தபோதிலும் எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் 2014 ஜூலை 31, ஆகஸ்ட் 8 மற்றும் 27ம் தேதியில் அவர் சிபிஐ அதிகாரி முன் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனால், சிபிஐ காவல் விசாரணை தேவையில்லை. அதனால்தான் விசாரணை நீதிமன்றம் சிபிஐயின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், சிபிஐயின் இந்த குறைபாடுகள் உள்ள மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. (குறைபாடுகளுடன் மனு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச், குஜராத் உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஆகியவற்றின் உத்தரவு களை மூத்த வக்கீல் ரமேஷ் படித்தார்.) எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு  மூத்த வக்கீல் ரமேஷ் வாதிட்டார். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த சீலிட்ட கவரை நீதிபதி பிரித்து பார்த்தார். அதில் சாட்சிகள் மற்றும் வழக்கு ஆவணங்கள் தொடர்பான ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து, இந்த மனு மீது நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் சினேகா, விமல்மோகன், பாஷா, திப்பு சுல்தான், பைசல், செல்வேந்திரன் ஆகியோரும் ஆஜராகினர்.

சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் எந்த காரணமோ, விவரமோ இல்லை. இப்போது, சிபிஐ காவல் விசாரணைக்கு என்ன தேவையுள்ளது? இந்த விஷயத்தில் தனி மனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும்.  - மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்       

Like Us on Facebook Dinkaran Daily News