உள்ளூர் வாலிபர்களுக்கு வேலைகோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் போராட்டம்

Date: 2015-02-03@ 00:47:03

நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கூடங்குளம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் தங்கப்பாண்டி தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் பலர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்: கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்கள் மற்றும் நிலம் வழங்கியவர்களின் வாரிசுதாரர்கள், வேலைவாய்ப்புக்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. உள்ளூர் பொதுமக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பி மற்றும் சி, டி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு அணுமின் நிலைய நிர்வாகம் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலை வழங்காமல் சட்ட திட்டங்களை மீறி செயல் பட்டு வருகிறது.

அணுமின் நிலையத்தில் உள்ள திட்ட வேலை வாய்ப்பு குழுவினர் அங்குள்ள பணிகளை கேரளாவை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் பலமுறை தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே கூடங்குளம் பகுதி மக்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். வெளிமாநில மக்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை பரிசீலனை செய்ய வேண்டும். இம்மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை போல் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News