SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கற்க கசடற - ஹாட் ஸ்பாட்

2015-02-02@ 10:09:17

“இந்த வகுப்பறை சுவர் எங்கும் காதுகள் இருக்கின்றன தெரியுமா? கரும்பலகையில் ஓடும் வெள்ளை எழுத்துகளுக்கு இடையில் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்ததை ஒரு நாள் பார்த்திருக்கிறேன். என் மனதின் ஈரம் உலர்ந்து விடமால் இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் நான் வாசிக்கும் புத்தகங்கள் எப்போதும் கவனமாயிருக்கின்றன. நான் வளர வளர எனது நம்பிக்கையும் வளர்கிறது. உலகம் மேலும் மேலும் அழகாகி வருகிறது.

நான் இன்னும் நிறைய படித்து இந்த வாழ்வின் அதிகபட்ச மகிழ்ச்சியை அடைய வேண்டும், இப்படி நம் குழந்தைகள் சொல்லத் துவங்கும் நாளில் நம் கல்வித் திட்டம் சரியானது தான் என நாம் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். முதல் வகுப்புக் குழந்தைக்கு மன அழுத்தம். மூன்றாம் வகுப்புக் குழந்தை காதல் பற்றி விரிவாகப் பேசுகிறது. ஐந்தாம் வகுப்பு குழந்தை அம்மா அடித்து விட்டார் என்பதற்காக தற்கொலைக்கு முயற்சிக்கிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆசிரியை கண்டித்தற்காக அவரை கத்தியால் குத்தி கொலை செய்கிறான்.

பத்தாம் வகுப்பு மாணவி மதிப்பெண் குறைந்து விட்ட காரணத்தால் வகுப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். வீடு, பள்ளி, தெரு, பேருந்து, ரயில் என பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வளர்கின்றனர். பள்ளி தரும் மன அழுத்தம் குழந்தைகளை பள்ளியை விட்டு வெளியேறுவதுடன் போதைப் பழக்கம், திருட்டு, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை என சமூகத்தின் இருட்டுப் பகுதிகளில் தள்ளி அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது.

பள்ளிச் சூழல் இவ்வளவு மோசமாக இருக்கும் பட்சத்தில் வல்லரசு இந்தியா கனவு வெறும் கனவாகவே முடிந்து விடும். 3 வயது பெண் குழந்தையை எழுபது வயது முதியவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் கேட்கும் போதே பதற வைக்கிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எந்த உறுதிப் பாட்டையும் செய்யாத அரசு பெண் குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி பெருமைப்பட்டுக் கொள்கிறது என மனம் வருந்துகின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

மதிப்பெண் பெறுவதற்காக கற்றல் என்ற நிலையில் இருந்து வாழ்க்கைக்காக கற்றல் என்ற நிலைக்கு கல்வி வர வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். அரசு முப்பருவக் கல்வி முறையை அமல்படுத்தி பாடச்சுமையைக் குறைத்தாலும் அதை விட கூடுதல் பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்தியும் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வமாக உள்ளனர்.
இது போன்ற பள்ளிகளில் இரண்டு வகையான தேர்வுகளை குழந்தைகள் எழுதி வருகின்றனர்.

நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காக குழந்தையை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோரிடம் இந்தக் குழந்தைகள் மாட்டிக் கொண்டு படும் பாடு பெறும் பாடாக உள்ளது. அறிவை வைக்கோலாக்கி தின்ன வைக்கும் பாடத்திட்டம்...100 சதவீத தேர்ச்சிக்கும் சென்டம் மதிப்பெண் பெறவும் காளி அவதாரம் எடுக்கும் ஆசிரியர்...என் கவுரவம் என்ன ஆவது என உயிரைக் கொடுத்தாவது டாக்டராகிவிட வேண்டும் என குலசாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பெற்றோர்.

டிரீட் எடு கொண்டாடு என அழைக்கும் பிரண்ட்ஷிப் ஷேரிங்....'ஆஹா' முதல் 'சீச்சீ' வரை அனைத்தையும் விழித்திறையில் கொட்டும் இன்டர்நெட். இப்படி வரிசை கட்டி நிற்கும் ஹிட்லர்களிடம் இருந்து ஒரு குழந்தை தன்னைப் பாதுகாத்துக் கொண்டு தப்பிப்பது நடக்கிற காரியமா? இந்த ஹிட்லர்களை எல்லாம் புத்தர்களாக மாற்றிவிடும் மந்திரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனமாற்றம் தான் அந்த மந்திரம். ஒரு குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு தரம் தாழ்த்திப் பேசுவதைத் தவிர்க்கலாம்.

மதிப்பெண்ணைத் தூக்கிப் போட்டு விட்டு அந்தக் குழந்தைக்கும் மனசு இருக்கிறது என்பதை நம்புங்கள். அவர்களது தனித்திறனை கண்டு பிடித்து ஊக்கப்படுத்துங்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இந்த உலகம் எதன் பின்னால் ஓடப் போகிறது என்று தெரியுமா? தெரியாதல்லவா அப்புறம் எதற்கு அஸ்ட அவதாரங்கள் எல்லாம். குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள். அவர்களிடம் இருந்து இந்த வாழ்வை கற்றுக் கொள்ளத் துவங்குங்கள். பிடித்ததைப் படிக்கட்டும்.... படித்ததை வாழட்டும்...வாழ்ந்ததைச் சொல்லட்டும்.

cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2020

    20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்