பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி
கருத்துகள்
கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் 300 பேர் சென்ற படகு நதியில் கவிழ்ந்தது. இதனால் நதியில் மூழ்கிய 100 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதி ஓடுகிறது. துப்ரி படகு துறைமுகத்தில் இருந்து நதியின் எதிர்புறம் உள்ள மெடார்டாரி என்ற இடத்துக்கு இரண்டு அடுக்கு படகு ஒன்று புறப்பட்டது. அதில் 300 பேர் இருந்தனர்.
படகு நதியின் மத்தியில் சென்றபோது திடீரென்று புயல்காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய படகு திடீரென்று பிரம்மபுத்ரா நதிக்குள் கவிழ்ந்தது.இதனால் படகில் இருந்த ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 300 பேரும் நதியில் மூழ்கினார்கள். இந்த சம்பவம் நேற்று மாலை 4.20 மணிக்கு நடந்தது. இதுபற்றிய தகவல் துப்ரி மாவட்ட கலெக்டர் குமுத் சந்த்ராவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மையை அமைப்பை சேர்ந்த மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார்.
அவர்கள் வந்து நதியில் மூழ்கி பலியான 100 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் 25 பேர் நீந்தி கரை சேர்ந்ததாக தெரிகிறது. படகில் இருந்த மீதி 175 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. பிரம்மபுத்ரா நதியில் மூழ்கியவர்களை தேடும் பணி நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது. மோசமான வானிலை இருந்தும் நதியின் ஆழப்பகுதிகளில் சென்று ராணுவ நீச்சல் படையை சேர்ந்த மீட்பு வீரர்கள் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான்.அவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!