SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அதிகாரி முறையாக விசாரணை நடத்தவில்லை

2014-08-13@ 02:21:49

பெங்களூர் : சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி நல்லம்மா நாயுடு முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று வக்கீல் அமித் தேசாய் வாதிட்டார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன், 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி ஆகியோர் சார்பில் மும்பையை சேர்ந்த மூத்த வக்கீல் அமித் தேசாய் 4வது நாளாக ஆஜராகி வாதம் செய்தபோது, “சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நியமனம் செய்யப்பட்ட அதிகாரி நல்லம்மா நாயுடு, ஆரம்பம் முதல் முறையாக விசாரணை நடத்தவில்லை.நமது எம்.ஜி.ஆர்., சூப்பர்டூப்பர் டிவி உள்பட பல நிறுவனங்கள் மூலம் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு வருமானம் கிடைத்திருப்பது தெரிந்தும், அதை வழக்கில் சேர்த்தால், வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக கூறும் புகாருக்கு உயிர் கிடைக்காது என்பதால் கம்பெனிகள் மூலம் கிடைத்த வருமானத்தை காட்டாமல் தவிர்த்துள்ளார்.

மேலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்கள் வாங்கிய நிலத்திற்கு வங்கி வரைவோலை மூலம் கொடுத்த தொகையை காட்டிலும், நில உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் கொடுத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அதற்கான எந்த ஆதாரமுமில்லை. நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு தமிழக அரசின் விளம்பரம் மூலம் ^1.34 கோடி வருவாயாக கிடைத்திருப்பது தெரியும் என்று கூறியுள்ள நல்லம்மா நாயுடு, ஆனால், இந்த தொகையை வருமானத்தில் சேர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.மேலும் ஒருவர் மீது குற்றம் சுமத்தி அறிக்கை தயாரிப்பதற்கு முன், சுமத்தப் படும் குற்றம் உண்மையா? இல்லையா? என்பது குறித்து குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவருக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் வரவழைத்து அவர்களின் வாக்குமூலம் பெற்றபின்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்தும், அந்த விதியை நல்லம்மா நாயுடு மீறியுள்ளார். அதை பார்க்கும்போது அவர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பது உறுதியாகிறது’’ என்றார்.

ஜெயலலிதா சார்பில் புதிய மனு

ஜெயலலிதா சார்பில் வக்கீல் கே.சி.பன்னீர்செல்வம் மற்றும் மற்ற மூன்று குற்றவாளிகள் சார்பில் வக்கீல் அன்புக்கரசு ஆகியோர் குற்றவியல் நடைமுறை சட்டம் 211, 212, 213 மற்றும் 218 ஆகிய பிரிவின்கீழ் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனுவில் மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து கூட்டு சதி செய்திருப்பதாக கூறியுள்ளதற்கு போதிய சாட்சி இல்லாததால், அந்த குற்றத்தை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மற்ற மூன்று குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மனுவில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவருடன் இணைந்து வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்க்க எப்படி கூட்டு சதி செய்தோம் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காமல், பொத்தாம் பொதுவாக கூட்டு சதி செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். ஆகவே உரிய ஆதாரமில்லாமல் சேர்க்கப்பட்டுள்ள கூட்டு சதி என்ற குற்ற சார்ஜ் ஷீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த மனுக்கள் மீது இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு வக்கீல் பதில் மனு தாக்கல்


கடந்த 1997ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு போலீசார் தயாரித்த குற்ற அறிக்கையை அப்போது தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மொழிமாற்றம் சரியாக இல்லை. ஆகவே சரியாக மொழிமாற்றம் செய்யப்பட்ட அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ஜெயலலிதா உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு நேற்று அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது, “1997ம் ஆண்டு குற்ற அறிக்கை தயார் செய்தபோது சரியாக தான் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக தெரிந்த காரணத்தால் அவரும் ஏற்றுக் கொண்டார். வழக்கு இறுதி கட்டத்தில் இருக்கும்போது குற்றவாளிகள் தரப்பில் தேவையில்லாமல் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்Ó என்றார்.வாதத்தை கேட்ட நீதிபதி, அந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்