ஜித்தாவில் 69வது இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்
2018-01-29@ 14:08:37

ஜித்தா: இந்தியாவின் 69வது குடியரசு தினத்தன்று (26-01-18) சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டலத்தில், ஜித்தா மஹ்ஜர் பகுதியிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 170க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஏமன் உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி பொறுப்பாளர் Dr.அலி கோதரி தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையின் இரத்ததான குழுவினர் மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 8 படுக்கைகள் போடப்பட்டு அயராது செயல்பட்டனர். இதை ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறையின் சான்றிதழை வழங்கி கௌரவித்தனர். மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 157 நபரிடமிருந்து 135 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல தன்னார்வலர்கள் தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர். டி.என்.டி.ஜே இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சலாஹூதீன் இந்த முகாம் பற்றி குறிப்பிடும்போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
முஹம்மது முனாப் டி.என்.டி.ஜே ஜித்தா மண்டல தலைவர் கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல், பாடல், ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, மக்களுக்கு பயனுள்ள வகையில் இதுபோன்ற இரத்ததான முகாம்களை பல வருடங்களாக நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் பலமுறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது.
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது டி.என்.டி.ஜே ஜித்தா மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 17வது முகாமாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
அபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு
துபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு
ராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
யுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி
துபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது
தீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்