SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய “ மானுடம் போற்றும் மாணவர்கள்” நிகழ்ச்சி

2017-04-26@ 11:54:07

சிங்கப்பூர்: வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை 16-04-2017  அன்று, சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில், “மானுடம் போற்றும் மாணவர்கள்” என்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது.
 
சிங்கப்பூரில் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கும், இளையர்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பிரதான இலக்கு. திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் துணைமுதல்வராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி, தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்களை கல்லூரி மாணவர்களுக்கு 41 ஆண்டுகள் போதித்த பேராசிரியர் முனைவர் ஜனாப் பீ.மு. மன்சூர் சிறப்புரையாற்றினார். “மாணவர்கள் படைத்த இலக்கியங்களின் மாண்புகளையும், அதன் சிறப்பம்சங்களையும் கவிதைகளோடு நகைச்சுவை கலந்து எடுத்துரைத்ததோடு, மாணவர்கள் படைத்த சிறந்த இலக்கியங்கள் ஆவணப்படுத்தப் படவேண்டும் என்றும், சிங்கப்பூரில் தமிழ் மொழி என்றென்றும் வாழும் என்றும்” தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு, சிங்கப்பூரின் தந்தை அமரர் திரு லீ குவான் இயூ அவர்களும், தமிழவேள் அமரர் திரு சாராங்கபாணி அவர்களும் ஆற்றிய அரும்பணி மறக்க இயலாதது என்றும் அவர் நினைவு கூர்ந்தார். சங்கத்தின் செயலாளர், கணிதப் பேராசிரியர் ஹாஜி ஜனாப் அமானுல்லாஹ், சிறப்புப் பேச்சாளரை அறிமுகம் செய்தார்.
 
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக “தாய்மொழியான தமிழே!” என்ற காணொளியும், “மொழி எதற்கு? தமிழ் எதற்கு?” என்ற சிறப்பு உரையாடல் அங்கமும் இடம்பெற்றது. இந்த சிறப்பு உரையாடலை சாந்தினி, இன்பா, பிரேமா மகாலிங்கம், தமிழ்ச்செல்வி, பானு சுரேஷ், விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து வழங்கினர். சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சமூக நலப் பணிகளுக்கும் பங்களிப்பு செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் மொழி விழாவில் உயரிய “ஜமாலியன் விருது” வழங்கி வருகிறது ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்.  இந்த ஆண்டு “ஜமாலியன் விருது”, MODERN MONTESSORI INTERNATIONAL PTE LTD குழுமத்தின் தலைவரும், 11 ஆண்டுகளாக தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகின்ற முனைவர் டி. சந்துரு அவர்களுக்கு, சிறப்பு விருந்தினர், புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை வழங்கி கௌரவித்தார். சங்கத்தின் துணைத் தலைவர் ஜனாப் கலந்தர் மொகிதீன், ஜமாலியன் விருது பற்றி அறிவித்தார்.
 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட, சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சிண்டாவுடன் இணைந்து மாணவர்களுக்கான இலவசப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியதையும், அச்சங்கத்தின் பல்வேறு கல்விச் சார்ந்த சமூக நலப் பணிகளையும் பாராட்டினார். தமிழ் மொழியின் பெருமைகளையும், தமிழில் பேச வேண்டும் என்ற அவசியத்தையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
ஜமால் முஹம்மது கல்லூரி சுயநிதிப் பிரிவு இயக்குநர், தகவல் தொழில்நுட்பத் துறைப்பேராசிரியர் ஜனாப் அப்துல் காதர் நிஹால் அவர்களும், கல்லூரியின் துணைச் செயலாளர் அவர்களின் புதல்வர் ஜனாப் முஜீப் ரஹ்மான் அவர்களும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
 
தலைமையுரையாற்றிய சங்கத்தின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் ஹாஜி மு. அ. காதர், “தமிழ் நமது மொழி. அதை விழி போல் காப்போம்! சிங்கப்பூர் நமது நாடு. அதை விழிப்புணர்வோடு காப்போம்! என்றும், சிங்கப்பூரில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட சமுதாயமாகத் திகழ்வதோடு, சமய இன நல்லிணக்கத்தோடு தொடர்ந்து நமது ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் ஃபரீஜ் முஹம்மது நிகழ்ச்சியை வழிநடத்தினார். இன்பத் தமிழின் பெருமைகளைப் பகிர்ந்துக்கொண்ட இனிய நிகழ்வாக, இந்நிகழ்ச்சி நேர நிர்வாக ஒழுங்கோடு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு சமூகத் தலைவர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், பொதுமக்களும் கலந்து பயன்பெற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • teslacar_won

  விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

 • damagedvinayr_idoles00

  விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

 • delhiaccid_childead

  டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

 • dogsketc_123amer

  பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

 • thailandbirdsing

  தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்